Sunday 18 January 2015

ஐ :

தமிழ் சினிமாவின் முக்கியமான ஐகான்களாக மதிக்கப்படும் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என ஒரு ஒப்பற்ற கூட்டணியிடம் இருந்து வந்திருக்கும் திரைப்படம் ஐ. படம் வெளிவருவதற்கு முன்பாகவே, யூக அடிப்படையிலோ அல்லது செய்தி ஊடகங்களின் வாயிலாகவோ இத்திரைப்படத்தின் கதையைப் பற்றி எல்லோருமே குறிப்பிட்ட அளவிற்கு அறிந்திருந்தார்கள்.. அப்படி அவர்கள் எதை எல்லாம் யூகித்து இருந்தார்களோ அல்லது அறிந்து இருந்தார்களோ அவைகள் எல்லாம் இப்படத்தில் அப்படி அப்படியே இருக்கிறது. அதுபோக அவர்கள் அறியாத ஓரிரு விசயங்களும் இத்திரைப்படத்தில் இருக்கிறது.. திரைப்படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா..?? என்கின்ற முக்கியமான கேள்விக்கு போவதற்கு முன்னர் அதைவிட முக்கியமான மற்றொரு விசயத்தைப் பற்றி நாம் அலச வேண்டியதிருக்கிறது. அது இயக்குநர் சங்கர் மற்றும் அவரது படங்கள் தொடர்பான என்னுரை..


என்னுடைய அபிமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குநர் சங்கர். அவரது முதல்வன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மீது இன்றும் எனக்கு மிகச்சிறந்த அபிமானங்கள் உண்டு. மிகச் சிறப்பான திரைக்கதைக்கு உதாரணமாக இந்த திரைப்படங்களை கூறமுடியும்.. அதே நேரம் இந்த திரைப்படங்கள் ஒரு படைப்புக்கு தேவையான கற்பனையையும், கதைகளனையும், சமூக சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டிருந்தது என்பதும் உண்மை. படம் வெளிவந்த காலகட்டங்களில் படத்தைப் பார்த்த நமக்கு, அவை ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு புதுமையையோ அல்லது சுவாரஸ்யத்தையோ கொடுத்துக் கொண்டே இருக்கும்.. இப்படி கற்பனைவளத்துடன் கூடிய படைப்புக்களை கொடுத்து வந்துகொண்டிருந்த அந்த கலைஞன் ஏதோவொரு புள்ளியில் தன் பயணபாதையை ஒரு வட்டமாக சுருக்கிக்கொண்டு தொலைக்கத் தொடங்கிவிட்டதாகவே நான் நம்புகிறேன்.

பெரும்பாலான திரைப்படங்களை யதார்த்த புனைவின் அடிப்படையிலேயே பார்க்க விரும்பும் நான், சங்கரை கலைஞன் என்று அழைப்பதில் இதுவரை தயக்கமே காட்டியதில்லை.. ஏனென்றால் அவரது படைப்புகளில் யதார்த்தவியல் இல்லை என்றாலும் கூட, கற்பனாவாதம் ஒரு கடலளவுக்கு இருப்பதை நான் கண்டு கொண்டிருக்கிறேன்.. கலைஞனுக்கான அடிப்படையில் கற்பனையும் ஒன்று என்பதாலும், ஒரு படைப்பைக் கொடுப்பதற்காக அவர் எடுக்கின்ற அயராத உழைப்பும், மெனக்கெடலும் அந்த கலைஞன் மீதான நன்னம்பிக்கையை வளர்த்தெடுத்துக் கொண்டுதான் இருந்தது.. ஆனால் அவருக்குள் இருந்த அந்த கொஞ்சநஞ்ச கலைஞனும் காணாமல் போய் வணிகன் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்துதான், இந்த கலைஞனின் கலைப்பாதையில் பிரச்சனை தொடங்குகிறது..

தமிழ் சினிமா சந்தையில் சங்கரின் திரைப்படம் என்பது கடந்த ஆறேழு வருடங்களாக ஒரு படைப்பாக பார்க்கப்படுவதே இல்லை.. அது சந்தைப்படுத்தி பணம் சேர்ப்பதற்கான ஒரு பண்டம், ஒரு வியாபாரப் பொருள்.. அவ்வளவே.. அந்நியன், முதல்வன், இந்தியன் வந்த காலகட்டத்தில் அவரது பிஸினஸ் வேல்யூ என்று சொல்லப்படக்கூடிய சந்தைப்படுத்தும் மதிப்பு இந்த அளவிற்கு இருந்ததா என்று சரியாகத் சொல்லத் தெரியவில்லை, அப்படி இருந்திருந்தாலும் கூட அதை சங்கர் அந்தக்காலத்தில் சரியாக உணரவில்லை என்றுமட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.. அதை உணராததால் தான் அவரால் தொடர்ந்து ஒரு கலைஞனாக இருக்க முடிந்திருக்கிறது.. படைப்புகளை கொடுக்கவும் முடிந்திருக்கிறது.. ஆனால் எப்போது தன்னைச் சுற்றியுள்ள வணிகவட்டத்தை அவர் உணர்ந்து கொண்டாரோ அப்போது அவரது படைப்புகள் கலைதன்மையை இழக்கத் தொடங்கிவிட்டதாக நான் எண்ணுகிறேன்.. ஒரு கலைஞனிடம் இருந்து ஒரு திரைப்படம் படைப்பாக வெளிப்பட்டு, அது கோடம்பாக்கத்து வியாபாரிகளால் வணிகப் பொருளாக சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம் மாறி, கலைஞனே படைப்புக்கு பதிலாக வணிகப் பொருளை உருவாக்கத் தொடங்கி, அதை சந்தைப்படுத்தும் சாதனையிலும் தன்னை இணைத்து கொள்ளும் இழிநிலை இன்றைய சூழலில் பரவலாக்கப்பட்டுவிட்டது. அதற்கான மிகச் சிறந்த உதாரணம் தான் இயக்குநர் சங்கர்..

அவரது முந்தைய திரைப்படங்களில் இருந்த உணர்ச்சிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து போய், இப்போது அவரது திரைப்படங்கள் வெறும் உணர்ச்சியற்ற ஆச்சரியக் குறிகளாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.. வணிகப் பொருளான ஐ-போன் லாஞ்சுக்கும், இந்த ஐ திரைப்படத்தின் லாஞ்சுக்கும் இல்லாமல் போன ஆறு வித்தியாசங்கள் தான், அவரும் கூட அவரது படைப்பை வணிகத்துக்கான பொருளாக பார்க்கப் பழகிவிட்டார் என்பதை உறுதியாக பறை சாற்றுகின்றன.. எப்படி ஒரு புதிய ஐ-போன் வெளியிடப்படும் போது, அதன் சிறப்பம்சங்கள் பட்டியலிடப்படுமோ அதுபோல இவரது படங்களிலும் சிறப்பம்சங்கள் பட்டியலிடப்படாத குறைதான்… மிருக உடை தரித்த மனிதன், கூனனாக மாறும் விக்ரம், ஆணழகன் போட்டியில் பங்கு பெறும் விக்ரம், ஸ்கூட்டராக மாறும் எமி ஜாக்சன், சீனாவில் பறந்து பறந்து சண்டை செய்யும் சாகச வீரர்கள், சீனாவின் மிகப்பெரிய மலர் தோட்டம் என்று சிறப்பம்சங்களை மட்டுமே பட்டியலிட்டு பல்லிளிக்கத் தொடங்கியது இவரது படைப்பாற்றல்.. ஆக இப்படி கதையில் கவனம் செலுத்தாமல், பிரம்மாண்டம் என்கின்ற சிறப்பம்சங்களிலேயே கவனம் செலுத்தி, படைப்பில் இருந்து பண்டமாக மாறிப்போன இவரது திரைப்படங்கள், பார்வையாளர்களின் உணர்ச்சிகளையோ உள்மனதையோ தொடுவதற்கு கைநீட்டாமல், பணம் பார்க்கும் நோக்குடன், பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும் நம் பர்ஸ்களை நோக்கியே கைநீட்டத் தொடங்கின.. அதுதானே பண்டத்துக்கான பண்பு…


ஒரு வணிகப்பொருள் முதல்கட்டமாக அதன் சிறப்பம்சங்களை கூவி கூறி தன்னை நோக்கி வாடிக்கையாளரை ஈர்த்து, அதே சிறப்பம்சங்களை மட்டுமே தனக்குள் கொண்டிருந்தாலும் கூட அந்தப் பொருள் அலுப்பை கொடுக்காது.. மேற்கொண்டு வாழ்க்கையில் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அது வாங்கப்படும் அல்லது மறுக்கப்படும்.. ஆனால் திரைப்படங்களுக்கு இது பொருந்தாது தானே.. திரைப்படங்களின் மிகப்பெரிய பலமே, அந்த இரண்டு மணிநேர கதை சொல்லலில் அவை ஒளித்து வைத்திருக்கும் சுவாரஸ்யங்கள் தான்.. ஆனால் அப்படி ஒரு சுவாரஸ்யத்தைக் கூட சுருட்டி வைத்து பாதுகாக்காமல், சிறப்பம்சம் என்ற பெயரில் கடைவிரித்து காட்டிவிட்டால், படம் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தையோ உணர்ச்சியையோ எப்படி கொடுக்கும்..??

ஐ திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், படத்தின் ஆரம்பத்தில் கூனனாக வரும் அந்த நபர் யார் என்று நமக்கு படத்தின் தொடக்கத்திலேயே தெரிந்துவிடுகிறது.. அவர் இதற்கு முன்னர் எப்படி இருந்தார் என்பதும் தெரிந்துவிடுகிறது.. அவரை யார் இப்படி ஆக்கினார்கள்..?? ஏன் ஆக்கினார்கள்..?? அவர்களை நாயகன் என்று சொல்லப்படுபவன் என்ன செய்யப் போகிறான் என்பது தான் நமக்குத் தெரியாத மீதி கதை..?? அதையும் படம் போய்க் கொண்டிருக்கின்ற போக்கிலேயே நாம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.. நாம் என்ன யோசித்தோமோ அதுவும் அப்படி அப்படியே நடக்கிறது… இப்படி சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையை கொண்டிருப்பது தான் ”ஐ” திரைப்படத்தின் முதல் குறை.

இரண்டாவதாக இந்த திரைப்படத்தின் குறையாக நான் பார்ப்பது பழிவாங்கும் அந்த திரைக்கதை உத்தியை.. நாயகனுக்கு அந்த வில்லன் என்ன கெடுதல் விளைவித்தான் என்பதனை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு முன்னரே, சில இடங்களில் நாயகன் வில்லன்களில் சிலரை பழிவாங்கி விடுகிறான்… அதற்குப் பிறகுதான் அந்த வில்லன் நாயகனின் வாழ்வில் என்ன கெடுதல் செய்தான் என்பது காட்டப்படுகிறது.. அதனால் அந்த பழிவாங்கும் இடங்களில் சுவாரஸ்யம் அதிதீவிரமாக குறைந்து விடுகிறது.. அதாவது எதிர்வினைக்கு பிறகு வினை காட்டப்படுகிறது.. இது பழிவாங்கும் திரைக்கதை கொண்ட திரைப்படங்களுக்கு கொஞ்சமும் பொருந்தாத ஒரு உத்தி.. நீங்கள் கேட்கலாம்..?? ஏன் இந்தியன் அந்நியன் போன்ற திரைப்படங்களில் கூட இதே உத்திதானே பயன்படுத்தப்பட்டது என்று.. அந்நியனில் முதல் காட்சியிலேயே எருமை மாடுகளைக் கொண்டு ஒரு நபர் கொலை செய்யப்படுவார்.. கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் செய்த குற்றம் நமக்குத் தெரிந்துவிடும்.. ஆனால் இந்தியனில் ஒரு அரசாங்க அதிகாரி லஞ்சம் கொடுக்கப்படும் சூழலின் பிண்ணனியில் கொலை செய்யப்படுவார்.. ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களிலும் தண்டிக்கப்படுபவர்கள் யாரும் நாயகனின் வாழ்க்கையோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் அல்ல… நாயகனுக்கும் அவர்களுக்கும் எந்த சொந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை.. அந்த திரைப்படத்தில் வருபவர்கள் எல்லோருமே பொதுவான சமூக எதிரிகள்.. அவர்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட அனுபவம் எல்லா பார்வையாளருக்குமே இருக்கும் என்பதால், அந்த பழிவாங்கும் உணர்வுகளை அவர்களால் உள்வாங்கிக் கொள்ளமுடியும்.. விதிவிலக்காக இந்தியன் திரைப்படத்தில் நாயகனின் வாழ்க்கையோடு நேரடியாக தொடர்பு கொண்ட குற்றவாளியான நிழல்கள் ரவியை பழிவாங்கும் முன்னரே அது தொடர்பான முன்கதை விளக்கப்பட்டுவிடும்.. அந்த கதாபாத்திரத்தை பழிவாங்குவதற்கு மனதளவில் நாமும் தயாராகிவிடுவோம்.. அந்த பழிவாங்குதல் நிகழும் தருணத்தில் நம் உணர்ச்சிப்பிழம்பில் ஏதோவொன்று வெடிக்கும் மாயம் நிகழும்.. ஆனால் அது போன்ற மாயங்கள் ”ஐ” திரைப்படத்தில் பழிவாங்கும் காட்சிகளில் நிகழ்வதே இல்லை. காரணம் இந்த திரைப்படத்தில் வரும் எதிரிகள் எல்லோருமே நாயகனின் வாழ்க்கையை பாதித்த தனிப்பட்ட விரோதிகள்..


வில்லன்களாக சித்தரிக்கப்படும் மனிதர்களும் மிகவும் நாடகத்தன்மையுடன் இருக்கிறார்கள்.. ஒரு மிகப்பெரிய தொழிலதிபர், ஒரு விளம்பர மாடல், ஒரு ஒப்பனை கலைஞர், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு ஆணழகன்.. இவர்கள் எல்லோருமே வில்லன்கள்.. ஒவ்வொருவருக்கும் நாயகன் மீது ஏதோவொரு தனிப்பட்ட விரோதம் இருக்கிறது.. பல எதிரிகளைக் காட்டி, எதிரிகளின் மையம் சிதைவுறுவதால், அவர்கள் மீது வரவேண்டிய ஒரு குரோதம் நமக்கு படத்தில் வருவதே இல்லை.. அதிலும் அந்த தொழிலதிபரை பழிவாங்கும் காட்சியில், ஒரே ஒரு வேலையாளை மட்டும் பிடித்துவிட்டு, தாங்கள் நினைத்ததை நாயகனின் குழு சாதிக்கும் காட்சியை பார்க்கும் போது, இயக்குநர் சங்கர் அவர்களின் அணியினரால் இவ்வளவுதான் யோசிக்க முடிந்ததா…?? என்று கேட்கத் தோன்றுகிறது.. மொத்தத்தில் வில்லன்களும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள்.. நாயகன் நல்லவன் என்பதால் அவன் வழக்கம் போல் எல்லா நேரங்களிலும் நல்லவிதமாகவே சிந்திப்பவன் என்பது மிகுந்த நாடகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது… உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், விளம்பர மாடலாக வரும் நாயகியை டிவியில் பார்த்தே, அவள் மீது பித்துப் பிடித்து அலைபவன் நாயகன். ஒரு முறை ஒரு படப்பிடிப்பில் அவளது திரட்சியான மார்பகங்களை பார்த்து பிரமித்துப் போய் மயங்கியும் விழுகிறான்.. ஒரு கட்டத்தில் அவளை கட்டிப்பிடித்து நடிக்க வாய்ப்பு வரும் போதும், கண்ணியமாக..!!!! நான் எப்படி உங்களை கட்டிப்பிடித்து நடிப்பது என்று மறுத்துவிடும் அளவிற்கு அவன் நல்லவனாக இருக்கிறான் என்றுகாட்டி என்னைப் போன்றவர்களை குற்றவுணர்வில் ஆழ்த்துகிறது இத்திரைப்படம்… இப்படிப்பட்ட நல்லவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே தரிசனம் தருகிறார்கள் என்பது என் எண்ணம்.. ஆக நாயகன் பாருக்குள் கடைந்தெடுத்த ஒரு நல்லவன்.. இப்படிப்பட்ட மிகைபுனைவு கதாபாத்திரங்களும் வெறுப்பையே தருகிறது..

திருநங்கையாக வரும் ஒரு பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் கீழ்மையான சிந்தனைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.. அந்தப் பெண்ணுக்கு நாயகன் மீது வரும் காதலும், அதை அவன் உதாசீனப்படுத்தும் விதமும், தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகளை நாயகன் மீதும், படக் குழுவினர் மீதும் தோற்றுவிக்கும் என்பதை எப்படி இவர்கள் கவனிக்கத் தவறினார்கள் என்றே தெரியவில்லை.. அந்தப் பெண் திருநங்கையாக இருப்பதற்கும் எந்த தேவையும் திரைக்கதையில் இல்லை.. மேலும் லிங்கேசனாக வரும் விக்ரமின் கதாபாத்திரம் வடசென்னை நபராக காட்டப்பட்டாலும், அவர்கள் பேசும் வசனங்கள், அவர்களது வாழ்வியல் எல்லாமே மிகவும் செயற்கையாக இருக்கிறது.. உடற்பயிற்சி கூடத்திற்குள் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி மிகப் பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது.. இதே போன்ற சண்டைக்காட்சி அந்நியனிலும் உண்டு.. ஆனால் அதிலிருந்த நம்பகத்தன்மை இதில் கொஞ்சம் கூட இல்லை என்றே சொல்லலாம்.. அதுபோல ஆணழகன் போட்டியில் விக்ரமின் போட்டியாளாக வரும் நபரைவிட விக்ரம் தளர்வாகவே தெரிகிறார்… குறிப்பாக கால் மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதைகள் மிகவும் தளர்ந்து போய் இருப்பதை எளிதாக காண முடிகிறது.. இதனை ஏதாவது செய்து தவிர்த்து இருக்கலாம்.. உழைப்பாகப் பார்த்தால் மிகக்கடினமான உழைப்பு.. கிட்டதட்ட 25கிலோ அளவிற்கு உடல் மெலிந்து போய் பரிதாபமாக காட்சியளிக்கிறார்.. ஆனால் நடிப்பதற்கு இப்படத்தில் அவருக்கு மிகப்பெரிய ஸ்கோப் இருந்ததாக தோன்றவில்லை.. அவரின் நடிப்பின் வீரியத்தை உணர்வதற்கு சேது காசி, மற்றும் அந்நியன் தான் இன்னும் அடையாளமாக இருக்கும்..

நாயகனும் நாயகிக்கும் இடையில் தோன்றும் காதல் கூட இரண்டு விரோதிகளை நாயகனுக்கு சம்பாதித்து கொடுக்கிறது.. ஆனால் அந்தக் காதலில் எந்த ஆழமும் இல்லை என்பதால், அந்த காதல் கைகூட வேண்டும் என்கின்ற எண்ணமும் நமக்குத் தோன்றுவது இல்லை.. இப்படி திரைக்கதை அதற்குரிய சாதுர்யதன்மைகளை இழந்துபோய், வெறும் அலங்காரத் தன்மையுடன் கூடிய அழகுப்பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது.. படத்தில் என்னை ஈர்த்தது இரண்டே இரண்டு காட்சிகள் தான்.. அது இரண்டுமே மாண்டேஜாக கடந்து செல்லும் காட்சிகள்.. ஒன்று Gillette விளம்பரம்.. மற்றொன்று ஒரு Jeansக்கான விளம்பரம்.. அற்புதமான கற்பனை.. மொத்த திரைப்படத்திலும் சங்கரின் கற்பனைகள் காணக் கிடைத்த இடம் இந்த இரண்டு இடங்கள் மட்டுமே என்று சொல்லுவேன்.. அதுபோல் படத்தின் நீளமும் மிகப்பெரிய குறை.

படத்தின் ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே உயர்தரத்துடன் இருக்கிறது… ஆனால் கதையும் திரைக்கதையும் மட்டுமே அதற்கு ஈடுகொடுக்கவில்லை என்பது என் கருத்து.. இதே திரைப்படம் ஒரு புது இயக்குநரால் எடுக்கப்பட்டு இருந்தால், ஒருவேளை நம்மை திரைப்படம் திருப்திபடுத்தி இருக்கும்.. ஆனால் சங்கரின் அளவுகோலை வைத்துக் கொண்டு சங்கரின் திரைப்படமாக நாம் இதைப் பார்க்கும் பொழுது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது..

ஆக ஐ திரைப்படம் ஒரு சாதாரண திரைப்படமாகவே காட்சியளிக்கிறது. அதன் பிரம்மாண்டமான அலங்காரங்களை ஒப்பிடும் போது, அதன் கதை, திரைக்கதை எதிலுமே அந்த பிரம்மாண்டங்கள் இல்லை.. படம் பார்க்கும் போது, மிகப்பெரிய எரிச்சலையோ, வெறுப்பையோ கொடுக்காவிட்டாலும் கூட, எதனையோ எதிர்பார்த்து வந்த பார்வையாளர்கள் முழுவதுமாக திருப்தியடைந்து சென்றார்களா..?? என்பது கேள்விக்குறியே.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்பவர்களுக்கு படம் பிடிக்கலாம்…

மொத்தத்தில் ”ஐ” திரைப்படம் ”ஐ” என்று ஆச்சரியப்படவும் வைக்கவில்லை.. சந்தோசப்படவும் வைக்கவில்லை.. அதே நேரம் “அய்யோ..” என்று எரிச்சலடையவும் வைக்கவில்லை.. சில குறைகளைக் கொண்டிருக்கும் வெகுசாதாரணமான பொழுதுபோக்கு திரைப்படம்.. ஆனால் கடினமான உழைப்பாளியான, சிறந்த மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லியான இயக்குநர் சங்கரிடம் நாம் எதிர்பார்ப்பது இதையல்ல… “இதற்கும் மேலே..”

Thursday 8 January 2015

சஞ்சாரம் – நாவல் ப்ரொமோ ப்லிம்:




 தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சமீபத்திய நாவல் சஞ்சாரம். இந்த நாவலில் கரிசல்காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த நாதஸ்வர வித்வான்களின் வாழ்வியல் பேசப்பட்டு இருக்கிறது. இந்த நாவலை பரவலாக வாசகர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் அனுமதியுடன், இந்த நாவலுக்கு ஒரு ப்ரோமோ ப்லிம் (Teaser) ஒன்றை எங்கள் குழுவினர் உருவாக்கி இருக்கிறோம்.. அந்த வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்..



https://www.youtube.com/watch?v=6NBkunT8Eik&feature=youtu.be