Monday 29 December 2014

மீகாமன்:

தடையற தாக்க இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.. மீகாமன். “தடையற தாக்க” அதன் வித்தியாசமான ஆக்சன் பேக்கேஜ்ஜினால் கவனம் ஈர்த்த திரைப்படம். அதனால் இயல்பாகவே இந்த மீகாமன் திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் இருந்தது. படம் வெளியான பின்னர் வந்த விமர்சனங்கள் பெரும்பாலும் படத்தை வெகுவாக பாராட்டிவந்த நேரத்தில், தி இந்து நாளிதழ் படத்துக்கு 3.5/5 மதிப்பெண் கொடுத்ததும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இருந்தாலும் இவை எல்லாமுமே சற்று மேலதிகமான பாராட்டுக்களாக இருக்குமோ என்ற சந்தேகமும் தோன்றாமலில்லை.. படம் பார்த்தேன்.. சற்றே மேலதிகமான பாராட்டுதான் என்றாலும், படம் பெரிதாக ஏமாற்றவில்லை என்பதில் திருப்தியே..


இயக்குநர் மகிழ் திருமேனி கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் உதவியாளர் என்பதால் இவரது மேக்கிங் டெக்னிக்குகளை கண்டு ஆச்சரியப்பட தேவையில்லை.. அதுவே இந்தப் படத்திலும் பலமாக இருந்திருக்கிறது.. மிகவும் ரிச் & ப்ளசண்ட் ஆன மேக்கிங். கதை, திரைக்கதை என்கின்ற ரீதியில் பார்த்தால், தனிப்பட்ட முறையில் மகிழ் குழுவினருக்கு இது சற்று பின்னடைவுதான்.. தடையற தாக்க திரைப்படத்தில் சாமானிய மனிதனை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்பதால் அதில் இருந்த டெம்போ இதில் மிஸ்சிங். என்றாலும் கூட, சின்ன சின்ன வித்தியாசங்களில் படத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார்..

போதைப் பொருள்களை பெரிய அளவில் கடத்திக் கொண்டிருக்கும் ஒரு கும்பல். அதன் தலைவன் யார் என்பது அந்த கும்பலில் இருப்பவர்களுக்கும் தெரியாது, போலீஸ்க்கும் தெரியாது.. அப்படிப்பட்ட ஒரு கச்சிதமான வலைபின்னல் அவர்களது நெட்வொர்க். அப்படிப்பட்ட அவர்களது நெட்வொர்க் கண்ணிகளை உடைத்து, அந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவனை கைது செய்ய, ரகசிய திட்டத்தை கையாண்டு, ஆண்டாண்டு காலமாக காத்திருக்கிறது ஒரு தனிப்பட்ட போலீஸ் டீம்.. அந்த டீமைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் ஏற்கனவே அந்த நெட்வொர்க்கில் போதைப் பொருள் கடத்தும் கும்பலோடு இணைந்து, வேறுவேறு இடங்களில் வேலை செய்து வருபவர்கள். இவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பால், ஒரு கட்டத்தில் தலைவனை பிடிப்பதற்கான வாய்ப்பு அமைய, அதை தன் தனிப்பட்ட பொறாமையால், ஒரு போலீஸ் மேலதிகாரி கெடுத்துவிட, இப்பொழுது அந்த இரண்டு போலீஸ்காரர்களும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.. அந்த சிக்கலில் அவர்கள் மீண்டார்களா..?? தலைவனை பிடித்தார்களா…?? என்பது விறுவிறுப்பான மீதிக்கதை..

கதையாக பார்த்தால், மிகப் புதிதான கதை ஒன்றும் இல்லை.. பல்வேறு கோணங்களில் பல்வேறு படங்களில் பார்த்த அதே கதைதான்..  ஆனால் அந்தக் கதையை நகர்த்திச் சென்றிருக்கும் விதத்தில், அவர்களது கற்பனையையும் உழைப்பையும் காண முடிகிறது.. அதே நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன திருப்பங்களும், புதிய முயற்சிகளும் தான் திரைப்படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது.. இந்தப்படத்திலும் வழக்கம் போல காதல் உண்டு.. ஆனால் அது வழக்கமான காதலாக இருப்பதில்லை.. இரவில் தன்னத்தனியாக இருக்கும் நாயகன் தன் வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருவதை பார்த்தும், அவனை தவறானவன் என்று நம்பிய பின்னரும் கூட, அவனிடம் இருந்து தன் மனதை திருப்ப முடியாமல் அவதிப்படும் பெண்ணாக நாயகி ஹன்சிகா.. முதன் முறை ஆர்யாவைப் பார்த்துவிட்டு, தன்னை அவனது பார்வைக்கு தயார்படுத்திக் கொள்ளும் காட்சிகள், தன்னிடம் அவன் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை என்றதும் அவனைப் பற்றி தவறாக பேசுவது, காமத்தின் தாபத்தில் இருக்கும் போது எங்கே ஃப்யர் ஆகிவிடுமோ என்ற பயத்தில் தன் தோழியை கிளம்பச் சொல்வது என கொஞ்சம் புதிதான ரசிக்க வைக்கும் கதாபாத்திரம்.. ஆனால் அவர் நடையைத் தான் சகிக்க முடியவில்லை. அதே போல் அந்த காதலை அழகாக நிராகரிக்கும் ஆர்யாவின் கதாபாத்திரமும், மிஷனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத துணிவும் கொண்ட கதாபாத்திரமாக நேர்த்தி..

படத்தின் குறைகள் என்று பார்த்தால், அதீதமான ஹீரோயிசம் நிரம்பி இருப்பதால், ஒரு மறைமுக போலீஸ்காரரின் வாழ்க்கை என்பதில் இருந்து மாறி, ஒரு சாகச ஹீரோவின் வாழ்க்கையாக திரைப்படம் மாறிவிடுகிறது.. அதுபோல் படம் தொடங்கி நாற்பது நிமிடத்து மேலாக ஆகிய பின்னரும் தொடர்ந்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதும் சோர்வைக் கொடுக்கிறது.. அதுபோல் முக்கியமானதாக கருதப்படும் சில திருப்பங்கள் எல்லாமே முன்கூட்டி தீர்மானிக்ககூடியதாகவே இருக்கிறது. (அந்த செல்போன் ட்விஸ்ட் தவிர்த்து..) இருப்பினும் நிறைகளும் இல்லாமல் இல்லை.. அளவுக்கு அதிகமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது என்பது ஒரு குறையாக இருந்தாலுமே, அதுவே நம் கவனத்தை திசை திருப்பி, ஒரு செயலை முன்கூட்டியே நாம் யூகிக்க முடியாதபடி தடுக்கிறது என்பதனையும் சொல்லியே ஆக வேண்டும்.. அதுபோல உயர் அதிகாரி மட்டத்தில் நடக்கும் ஈகோ போட்டிகளால், கிடைமட்டத்தில் எந்தவித காரணமும் இன்றி பலியாகும் கடைநிலை காவல்காரர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் அம்சமும் முக்கியமானது.. இது தவிர்த்து குறைந்தபட்ச சுவாரஸ்யத்தை திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியிலும் தக்கவைத்துக் கொண்டது, மிக வேகமான, காட்சிகளில் கவனத்தை திசைதிருப்பும் ஸ்ரீகாந்தின் அதிவேக எடிட்டிங், பல காட்சிகளில் அரை இருட்டில் அதிஅற்புதமாக படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவு, தமனின் கதையோட்டத்து உதவும் பிண்ணனி இசை, சிறப்பான கதாபாத்திர தேர்வு என்று நிறைய நிறைகளும் உண்டு..

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்பவர்களுக்கு இந்த திரைப்படம் திருப்தி கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம்.. ஆனால் சாதாரண எதிர்பார்ப்புகளுடன் வருகின்ற பார்வையாளரை திருப்திபடுத்துவதற்கான கூறுகள் படத்தில் இருப்பதாலும், தொய்வில்லாமல், எரிச்சலடைய செய்யாமல் செல்லும் திரைக்கதை உத்தியாலும் மீகாமன் சற்று கவனம் கோருகிறது…

கப்பலை நம்பாவிட்டாலும், மீகாமனை(கேப்டன்) நம்பலாம்..



கப்பல்:


சமீபத்திய இரண்டு படங்கள் என்னை மிகப்பெரிய மன-அழுத்தத்துக்கு உள்ளாக்கின. அதிலொன்று இந்த “கப்பல்”. வெள்ளித் திரை திரைப்படத்தில் வசனகர்த்தா விஜி எழுதிய ஒரு வசனம் வரும். “இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணி, இந்த மாதிரியான காட்சிகளை திரைக்குழுவினர் வைக்கிறார்கள்” என்று கேட்டிருப்பார்.. ஆனால் இப்பொழுது இந்தப் படிமநிலை இன்னும் சற்று முன்னேறி, அதே கேள்வியை இப்படி கேட்கத் தோன்றுகிறது.. “படம் எடுப்பவர்கள் எல்லாம் பார்வையாளரை என்னவாக எண்ணிக் கொண்டு படம் எடுக்கிறார்கள்..??” என்ன சொன்னாலும் அவன் கேட்டுக் கொண்டு போய்க்கொண்டே இருப்பான் என்று எண்ணுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வது கொஞ்சம் கூட தவறில்லை என்று எண்ணும்படி தான் நம் ஆட்களின்(பார்வையாளர்களின்) நடவடிக்கைகளும் இருக்கிறது.


இத்திரைப்படம், மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்ததற்கு காரணம், இந்தப் படம் பார்த்து முடிக்கும் போது எனக்கு என் மீதே மிகப்பெரிய சந்தேகம் வந்துவிட்டது.. ஒரு வேளை நான் நகைச்சுவையுணர்ச்சியே இல்லாத ஒரு ஜடமாகவோ அல்லது கரிய சிந்தனைகள் மட்டுமே புதைந்திருக்கும் ஒரு சைக்கோவாகவோ மாறி விட்டேனா..?? என்று என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நிலைக்கு என்னை இந்தப்படம் தள்ளி இருக்கிறது.. குறைந்தபட்சம் ஒரு தமிழ் சினிமாவை ரசிப்பதற்கு கீழ்கண்ட நான்கு விதமான மனநிலைகளில் ஏதேனும் ஒன்றாவது வேண்டும் போலும்.. அதில் முதலாவது ஒரு ஐந்து பத்து நண்பர்களோடு திரையரங்கிற்கு சென்று, கதையில் நாயகன் தோன்றிய சில நிமிடங்களிலேயே, முகம் கூட தெரியாத அந்த இருட்டுவெளியில் வெற்று கூச்சல்களாலும், சீல்கைகளாலும் தன் நண்பர்களுக்கு மத்தியில் மட்டுமோ, முடிந்தால் ஒட்டுமொத்த திரையரங்கிலோ தன்னையும் ஒரு நாயகனாக பிம்பப்படுத்திக் கொள்ளும் மனநிலை நமக்கு வேண்டும். அல்லது, தனக்கு விருப்பமான பெண்ணுடன் தனக்கு விருப்பமான இடத்தில் அமர்ந்து கொண்டு எதைப்பற்றியும் கவலை கொள்ளாத மனநிலை நமக்கு வேண்டும். இந்த மனநிலை கொண்டவர்களது கோரிக்கை ஒன்றுதான். படம் அதீத மவுனமாகவோ அல்லது அந்தரங்கங்களை பேசுவதாகவோ இருக்கக்கூடாது.. அப்படியிருக்கும் பட்சத்தில் பிற பார்வையாளர்களின் கவனம் சிதறுவதால் இவர்களுக்கு வருத்தம் கொடுக்கும் மனநிலை அது அல்லது கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி திரையரங்கில் தஞ்சம் அடைந்தவன் என்கின்ற மனநிலை இருக்க வேண்டும்.. அதுவும் இல்லையென்றால், தன் மனைவி மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொண்டு, அவர்களை கண்ணும் கருத்துமாக கண்காணித்துக் கொண்டே, கடந்த ஒருவார அல்லது ஒருமாதமாக படிக்காமல் விட்ட ஒருவரி ஜோக்ஸை எல்லாம் மொத்தமாக கொட்டக் கூடியதாக திரைப்படம் இருக்க வேண்டும் என்னும் மனநிலை இருக்க வேண்டும்.. இவர்களதும், ஒரே ஒரு நிபந்தனை தான்.. நான் குடும்பமாக மகன், மகள், மனைவியுடன் படம்பார்க்க வந்தவன், உங்கள் படம் ஒழுக்கம் சார்ந்த கொள்கைகளை மீறவேகூடாது, ஏற்கனவே காதலிக்க கற்று கொடுப்பதற்கும், ஓடிப் போக கற்றுக் கொடுப்பதற்கும்(திரைப்படத்தில் மட்டும்), தம்மடிக்க, தண்ணியடிக்க கத்துக் கொடுப்பதற்கும்(வாழ்க்கையிலும் கூட), குலுங்கி ஆடும் குத்துப் பாடல்களுக்கும் நாங்கள் எங்கள் ஒழுக்க விதிகளை தளர்த்தி இருக்கிறோம்.. இன்னும் அதிகமாக எங்களிடம் எதிர்பார்க்காதீர்கள் என்கின்ற மனநிலை அது.. இப்படி மேற்சொன்ன எந்த மனநிலையுமே இல்லாமல், ஒரு நல்ல தமிழ்படம் பார்க்க வேண்டும் என்கின்ற தப்பான மனநிலையில் நீங்கள் திரையரங்கில் போய் உட்கார்ந்தீர்கள் என்றால்…?? நீங்கள் அய்யோ… பாவம்..!!!!!

இந்தப் படத்தின் கதை என்ன..?? என்று பார்த்தால், ஜீவா, சந்தானம், வினய் நடிப்பில் வெளிவந்த என்றென்றும் புன்னகை என்கின்ற திரைப்படத்தின் அதே ஒருவரி கதைதான் இந்த திரைப்படத்தின் கதையும். காதலிக்கவும் கூடாது, கல்யாணம் செய்து கொள்ளவும் கூடாது என்று சபதம் எடுக்கும் நண்பர்கள்.. அதை தொடர்ந்து நாயகனுக்கு வரும் காதல்.. அதனால் வரும் விளைவுகள்.. மொத்தப்படமும் இந்த மூன்று வரிதான்.. கதையென்று பார்த்தால் உளவியல் ரீதியிலான ஒரு பிரச்சனையை மையமாக வைத்திருக்கும் கதை.. ஆனால் அதை படமாக கொடுத்தவிதத்தில் தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைபடுத்தி இருக்கிறார்கள்.

என்றென்றும் புன்னகை மிக அற்புதமான படமில்லை என்றாலும் கூட, அதில் ஓரளவிற்காவது உண்மையும் உணர்வும் இருக்கும்.. ஒரு தர்க்க ரீதியிலான நேர்மை இருக்கும்.. ஜீவாவிற்குள் இருக்கும் ஈகோ மிகக் கச்சிதமாக வெளி கொண்டுவரப்பட்டு இருக்கும்.. இந்த கதை சமூகத்தில் ஒன்றும் நிகழாத நிகழவே வாய்ப்பில்லாத கதை என்று நான் சொல்லவரவில்லை.. ஏன், இப்படி கல்யாணம், காதல் இரண்டுக்கும் தடைவிதித்த நண்பர்களையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.. ஆனால் அந்த நண்பர்களிடம் நான் பார்த்த உணர்வும் வலியும் கொஞ்சம் கூட இல்லாமல், முட்டாள்தனமான, கோமாளித்தனமான நடவடிக்கைகளால் மட்டுமே கப்பல் முழுவதும் நிரம்பி இருக்கிறது.. படத்தில் வரும் எந்தக் காட்சியையுமே நல்ல கற்பனை என்ற வகைப்பாட்டிலோ, அல்லது யதார்த்தம் என்கின்ற வகைப்பாட்டிலோ சேர்த்துக் கொள்ளவே முடியவில்லை.. ஏதேனும் காட்சிகளை கடினமான நினைவு கூர்ந்து, அவை எவ்வளவு மொக்கையாக இருந்தது, என்பதை விளக்கலாம் என்று பார்த்தால், என் அதிர்ஷ்டம், படம் பார்த்து ஒரே நாளில் எனக்கு எல்லா காட்சிகளுமே மறந்துவிட்டது… என் ஞாபக சக்திக்கு நன்றி..

மொத்தத்தில் இந்த திரைப்படத்தைப் பற்றி ஒன்று சொல்லலாம்.. பெரும்பாலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஒரு புத்திசுவாதீனம் இல்லாத கதாபாத்திரம் எப்போதும் அனுமதிக்கப்பட்ட ஒன்று… அது பெரும்பாலும் கதாநாயகியாக இருப்பது தமிழ் சினிமா தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கு.. ஆனால் இந்த தொன்று தொட்டு வரும் வழக்கத்தை உடைத்திருக்கிறது இந்த கப்பல் திரைப்படம்.. எப்படி என்றால், படத்தில் வரும் எல்லா கதாபாத்திரமுமே புத்தி சுவாதீனம் இல்லாத கதாபாத்திரங்கள்.. இப்படி ஒரு திராபையான திரைப்படத்தை தயாரிக்க முன்வந்ததும் அல்லாமல், படத்தைப் பற்றி பேசும் போது “ படத்தைப் பாருங்கள், ஒரு காட்சிவிடாமல் எல்லாக் காட்சிகளுக்கும் நீங்கள் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள்..” என்று திருவாய் மலர்ந்த இயக்குநர் சங்கர் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விளைவதெல்லாம், “நீங்கள் படுவேகமாக போய்க் கொண்டிருக்கிறீர்கள் சார்.., நாங்கள் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் வரவில்லை.. இந்தப் படத்தை சிரித்துக் கொண்டே பார்ப்பதற்கு தேவையான மனப்பிறழ்வை நாங்கள் இன்னும் அடையவில்லை.. கொஞ்சம் காத்திருங்கள்.. இன்னும் சில காலத்தில் அந்த உன்னத நிலையை அடைந்துவிடுவோம்” என்பதே…

என்னைப் பொறுத்தவரை, திரைப்படத்தின் முதல் வெற்றி என்பது, அது திரைப்படம் அல்ல என்று நம்பவைப்பதில் தான் தொடங்குகிறது என்பேன்.. ஆனால் அந்த சிக்கலான விதிமுறைகள் பெரும்பாலும் நம் தமிழ் சினிவாவிற்கு பொருந்தாது.. தமிழ் சினிமா தமிழ் சமூகத்தின் பணத்தை அதிகமாக தின்று கொழுத்திருக்கிறது என்பதனை விட, அது தமிழ் சமூகத்தின் நேரத்தை அதீதமாக தின்று விழுங்கி இருக்கிறது என்பது தான் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.. அப்படி மீண்டுமொரு இரண்டேகால் மணி நேரத்தை விழுங்கப் பார்க்கும் முயற்சி தான் இந்த கப்பல். நான் கதை கேட்டல் மற்றும் கதை பார்த்தல் என்ற நிகழ்வுக்காக அமர்ந்திருக்கிறேன்.. அங்கு என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு, ஒரு முட்டாள்தனமான கதை எனக்கு சொல்லப்படுகிறது.. அந்த இரண்டே கால் மணி நேரமும் சகித்துக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பது என்பது உண்மையாகவே ஒரு மிகப்பெரிய சவால்.. சொல்லப்போனால் அந்த சவாலில் நான் தோற்றிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் இந்தத் தோல்வி எனக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறது..


Saturday 27 December 2014

கயல்:

இயக்குநர் பிரபு சாலமனின் திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு, அவரது திரைப்படங்கள் பாராட்டப்படுகிறது என்றால், அது எதற்காக என்று நன்றாகவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. அதை மயிரிழையில் கண்டடையாமல் விட்டவர்களுக்காக கீழ்கண்ட வரிகள்.. பிரபு சாலமனின் திரைப்படங்கள் இதுவரை, ஒரு வித்தியாசமான கதை சொல்லும் முறைக்காகவோ அல்லது  அத்தியாவசியமான கதைக்கருக்காகவோ பாராட்டப்பட்டதில்லை.. அவரது திரைப்படங்கள் பாராட்டப்படுவதெல்லாம்  காட்சி அழகுக்காகவும், அவரது படங்களுக்கு மட்டும் இசையமைப்பாளர் இமானிடம் இருந்து இயல்பாகவே இறைந்து வரும் ரசம் சொட்டும் பாடல்களுக்காகவும், அன்பை அதாவது காதலை, அதுவும் இளம் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலை போதனை செய்வது போல் (லவ் பண்ணுங்க சார்… லைவ் நல்லா இருக்கும்…) இவர் எடுக்கும் காதல் சிறப்பு வகுப்புகளுக்காகவும் மட்டுமே இவரது படங்கள் இளசுகளிடம் இலவச வரவேற்பையும் பாராட்டையும் பெறுகின்றன…


பிரபு சாலமன் முதன்முதலில் பரவலாக வெளியில் தெரியத் தொடங்கியது, கொக்கி திரைப்படத்துக்கு பின்னர்தான்… அதற்கு பின்னர் வந்த ’மைனா’ தான் அவரது திரைபயண வரலாற்றையே மாற்றிப் போட்டது என்றும் கூறலாம்.. ஆனாலும் கதையாக பார்த்தால் பிரபு சாலமனுக்கு ‘கொக்கி’ திரைப்படம் தான் ஒரு நல்ல அடையாளமாக இருந்தது. அந்த அடையாளத்தை தான் அவர் வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.. ஆனால் மைனா திரைப்படம் கொடுத்த செழுமையான வணிக வசூல் காடுகளுக்குள்  தொலைந்து போன பிரபு சாலமன் தன் அடையாளத்தை “காதலும் காடு சார்ந்த இடமுமாக” மாற்றிக் கொண்டது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம் தான்.. ஆக அவரது படைப்பாக இப்போது வந்திருக்கும் இந்த “கயலும்” மேற்சொன்ன அதே வகையான பாராட்டுக்களைத் தான் பெற்றுக் கொண்டு இருக்கிறது.. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் காதல் + காடு இந்த இரண்டோடு கடலும் கைகோர்த்துக் கொண்டிருப்பது தான் அந்த வித்தியாசம்.. பள்ளி செல்லும் சிறுவர்கள் காடும் காடு சார்ந்த இடமும் என்பது முல்லை நிலம் என்பதனை மறந்து பிரபு சாலமனின் திரைப்படங்கள் என்று எழுதாமல் இருக்கக் கடவது.

இவ்வளவு கேலி செய்தாலும் இந்த திரைப்படத்தை என்னால் வெகு எளிதாக புறந்தள்ள முடியவில்லை... அதற்கு காரணம் இந்த கயல் திரைப்படத்தின் மையக்கரு வழக்கமான காதல் தவிர்த்து வேறொன்றுமில்லை என்றாலும் கூட, அதைக் காட்சிப்படுத்தி இருந்த விதமும், அந்த யதார்த்த சூழலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய தனிப்பட்ட குணாதிசயங்களோடு காட்சிபடுத்தி இருப்பதும், ஆங்காங்கே வந்துசெல்லும் சில வலி நிறைந்த சாதியத்துக்கு எதிரான வசனங்களும், இயல்பாகவே வசனங்களுக்கு இடையில் தவழ்ந்து வரும் அந்த நகைச்சுவை உணர்ச்சியும், வழக்கம் போல கண்களை குளிரச் செய்வது போல் குளுமையாக கோர்க்கப்பட்ட காட்சிக் கோர்வைகளும், ஒரு காதலை தோற்கடிக்க வேண்டும் என்கின்ற ஆதங்கத்தில், இன்னொரு காதலுக்கு அவர்களே அஸ்திவாரம் போடுகின்ற அந்த நகைமுரணான காட்சியும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் இயல்பாகவே மனசுக்குள் எழும் சுவாரஸ்யமும் என இப்படி மையக்கதையைச் சுற்றி தொடுக்கப்பட்ட விசயங்கள் தான் இந்த திரைப்படத்தை புறந்தள்ள முடியாதபடி, அதன் தரத்தில் கொஞ்சமேனும் மேலேற்றுகின்றன. ஏனென்றால் மேற்சொன்ன இந்த விசயங்களில் எல்லாம் அவர்களது கடுமையான உழைப்பு இருப்பது தெரிகிறது.. ஆனால் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் படத்தின் முதல்பாதிக்கு மட்டுமே பொருந்தும்..


அப்படியென்றால் இரண்டாம் பாதியில் என்ன இருக்கிறது என்றால், சுவாரஸ்யமே இல்லாத, முரண்பாடுகள் நிறைந்த, காதல் துதி பாடும் வழக்கமான தமிழ் சினிமா தடங்கள் தான் இரண்டாம் பாதி முழுவதும்.. அதில் நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கிறது.. இரண்டாம் பாதி முழுவதுமே தேடுதல் படலம் தான்.. அவர்கள் இருவருமே பார்த்துக் கொண்டால் படம் முடிந்துவிடும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும் என்பதால், அவர்கள் க்ளைமாக்ஸ் நெருங்கும் போதுதான் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறோம்.. அதுவும் அப்படியே தான் நடக்கிறது.. இயக்குநரின் முந்தையை இரண்டு படங்களிலும் காதலை கைகூட விடவில்லை என்பதால், இந்த திரைப்படத்தில் அதனை சேர்த்து வைத்து புண்ணியம் தேடி இருக்கிறார்.. அவ்வளவே வித்தியாசம்..

முதல்பாதியில் இருந்த உழைப்பு இரண்டாம் பாதியில் இல்லையோ என்று தோன்றுகிறது… பிரபு சாலமனின் பலமாக நான் நினைப்பது கதாபாத்திர சித்தரிப்பைத் தான்.. அவரது படங்களில் கொக்கி திரைப்படத்தில் தொடங்கி, மைனா, கும்கி, கயல் என எல்லாத் திரைப்படங்களிலும், நாயகன் நாயகி என்னும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டும் இல்லாமல், பிற கதாபாத்திரங்களுக்கும் தனிப்பட்ட குணாதிசயங்களுடன் கூடிய ஒரு முக்கியத்துவத்தை கொடுத்திருப்பார்.. அது கதைக்கு தனிப்பட்ட முறையில் வலுசேர்ப்பதோடு காட்சிகளையும் மிக தத்ரூபமாக மாற்றிக் கொடுக்கிறது.. இந்த மந்திரம் தான் சாலமனின் திரைப்படங்களை காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன்.. இப்படிப்பட்ட ஒரு இயக்குநர் தன் கதைக்கருவிலும் கொஞ்சம் மெனக்கெட்டால், அது தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான படைப்பாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..

இந்த கயல் திரைப்படத்திலும் நாயகன், நாயகி இந்த இரண்டு பேரையும் தவிர்த்து துணை கதாபாத்திரங்களாக வரும் நபர்கள் அதிகமாக மனதில் இடம் பிடிக்கிறார்கள்… கயலில் அந்த வீட்டுக்குள் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உலவினாலும், அந்த தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு அடியாள் கேரக்டர்கள் மனதில் சிக்கென ஒட்டிக் கொள்கின்றனர்.. அந்த வீட்டை விட்டு கயல் வெளியேறியவுடனே படமும் தனக்கான பலத்தில் பாதியை இழந்து விட்டது போல் ஆகிவிடுகிறது.. ஆழி பேரலையின் சோகத்தில் இன்றளவும் மூழ்கி இருக்கும் நபர்களுக்கு, அத்தகைய பேரழிவுக்கு பின்னிருக்கும் இந்த காதல் களியாட்டங்கள் எந்தளவுக்கு களிப்பை தரும் என்று சொல்லத் தெரியவில்லை.. தைரியமாக காதலை சொல்லிவிட்டான் என்கின்ற ஒரே காரணத்துக்காக, யார் என்னவென்றே தெரியாத ஒருவனைத் தேடி ஒரு இளம்பெண் கிளம்பிவிடுவாளா…?? அதை வயது முதிர்ந்த அவளது பாட்டியும் ஏற்றுக் கொள்வாளா…?? என்பதான சந்தேகங்கள் வலுப்பது கதையின் பலவீனத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஆழிப் பேரலையின் கொடூர தாண்டவத்தை CGயின் உதவியுடன் ஓரளவுக்கு சிறப்பாகவே காட்சிப்படுத்தி இருக்கின்றனர்..

ஆரோனாக வரும் சந்திரன், கயல்விழியாக வரும் ஆனந்தி இருவரின் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.. ஆனந்தியின் அற்புதமான கண்கள் வசீகரிக்கிறது.. இருந்தும் ஏதோவொரு மென்சோகம் அவரது முகத்தில் இருப்பது போன்ற உணர்வும் தோன்றுகிறது. ஆரோனின் நண்பனாக வரும் பெயர் தெரியாத அந்த நபர் பல இடங்களில் வசீகரிக்கிறார்.. இமானின் இசை வழக்கம் போல், பிரபு சாலமனின் இந்த திரைப்படத்துக்கும் பக்கபலமாக இருக்கிறது… ஒவ்வொரு பாடல்களும் அந்த காதலின் தருணங்களையும் வலிகளையும் கடத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறது.. வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா சட்டகத்தின் பரப்பளவிற்குள் அடங்காத அழகை எல்லாம் அடக்கி அள்ளிவந்து, நம்மை ஆனந்தப்படுத்துகிறது… வழக்கம் போல் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு ஆகச்சிறந்த பலத்தை நல்கி இருக்கிறது.


ஆக மொத்தத்தில் இந்த திரைப்படமும், இதற்கு முன் வந்து பிரபுசாலமனின் திரைப்படங்கள், எதற்காக பாராட்டப்பட்டதோ அதே காரணத்துக்காக பாராட்டப்பட வேண்டிய பட்டியலில் இணைகிறது.. கதைக்கரு என்பது வழக்கமான காதல் என்கின்ற மிகப்பெரிய குறையை தவிர்த்துப் பார்த்தால் வேறு எந்த தவறான பிம்பங்களும் இதில் இல்லை என்பதால், துணிந்து இந்தப் படத்தைப் பார்க்கலாம்.. முதல்பாதி அதன் கலைநயத்தால் உங்களை அசரடிக்கும்… இரண்டாம் பாதி கொஞ்சமாய் இருளடித்தாலும், இமானின் இசை அதை மறக்கடிக்கும்..

பிசாசு:

இதுவரை தமிழ் சினிமா காட்டி வந்த பேய்களும் பிசாசுகளும் செய்யாத, ஏன் யோசித்து கூட இராத ஒரு காரியத்தை இந்த பிசாசு செய்திருக்கிறது.. அதுதான் மிஷ்கினின் பிசாசுவிற்கும் மற்ற தமிழ் சினிமா பிசாசுகளுக்கும் இடையிலான முக்கியமானதொரு வித்தியாசம். அப்படி இந்தப் பிசாசு என்ன செய்கிறது என்று கேட்டால், இது பயத்தை பரப்பாமல் அன்பை போதிக்கிறது.. என்பதே என் பதிலாக இருக்கும்.. அன்புக்கு அணை கட்டிக் கொண்டதால் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தை இது போன்ற திரைப்படங்களும், இலக்கியங்களும் கொஞ்சமேனும் தீர்க்கும் என்கின்ற தீர்க்கதரிசனங்களின் மீது நம்பிக்கை உடையவன் நான். அதனால் எனக்கு இந்த திரைப்படம் பிடித்திருந்தது.. ஆனால் மிஷ்கினின் முந்தைய திரைப்படமான “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” எந்த அளவுக்கு எனக்கு பிடித்திருந்ததோ, அந்த அளவுக்கு இது என்னை கவரவில்லை என்பதும் உண்மை.


ஏனென்றால் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம் மிஷ்கின் என்னும் வீரியமான கலைஞனின் முழுத்திறமைகளும் வெளிப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நான் கருதுகிறேன்.. அந்த திரைப்படம் தொடங்கி, ஒரு சில காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா அல்ல என்பது மிகத் தெளிவாக புரிந்துவிடும்.. அது தவிர்த்து நான் விரும்புகின்ற சில மிஷ்கினின் அடையாளங்கள் வரிசையாக அணி வகுத்தபடி வந்துகொண்டே இருக்கும்.. ஆனால் இந்த பிசாசுவில் அது எல்லாமே மிஸ்சிங் என்பதுதான் என் வருத்தம். முதல் பாதியில் கண்ணுக்கு க்ளோசப் வைத்து தொடங்கும் அந்த ஷாட்டை தவிர்த்து, மீதி எல்லா காட்சிகளுமே ஒரு சாதாரண தமிழ் பேய்படங்கள் கையாளும் உத்திகளை உள்ளடக்கமாக கொண்டிருந்தன.. அதில் மிஷ்கினின் அடையாளங்கள் இல்லவே இல்லையா…?? என்று கேட்டால், இருந்தன..!!! ஆனால் அந்த அடையாளங்கள் எல்லாம், நான் மிஷ்கினின் படங்களில் மீண்டும் தெரிந்துவிடக் கூடாது என்று வெறுத்து வந்த அடையாளங்கள்.. உதாரணமாக அந்த முகத்தை மறைக்கும் தலைமுடி, தரையைப் பார்த்து குனிந்து கொண்டே பேசுவது, ஒவ்வொருவராக வந்து அடி வாங்குவது, எல்லோருமே ஒரே பாணியில் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது இப்படியாக மட்டுமே அந்த அடையாளங்கள் இருந்தன.

தன்னுடைய அடையாளங்களை தொலைத்து, தன் கலைக்கு ஊடாக காணாமல் போவதுதான் கலைஞனுக்கு அழகு என்பது இயக்குநர் மிஷ்கினுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை.. அது நம்மைவிட அதிகமாக தெரிந்திருந்தும் அதை ஏன் அவர் விடாமல் பிடிவாதமாக பிடித்திருக்கிறார் என்பது தான் விளங்கவில்லை.. மிஷ்கினைப் போன்ற கதை சொல்லிகள் தமிழ் சினிமா சமூகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கிறார்கள்.. இது அவருக்கும் தெரியும்.. ஆனால் அவர் கூட இது போன்று வெளிப்படையாக தெரியும் ஒருசில குறைகளை களைய விரும்பாமல் இருப்பது தான் வருத்தமளிக்கிறது.. இதுபோன்ற அதிசயமான தமிழ் சினிமா கலைப்படைப்புகளிலும் கூட சக பார்வையாளனை ஒன்றவிடாதபடி, மிஷ்கினின் விரும்பத்தகாத அடையாளங்கள் துருத்திக் கொண்டு தெரிவதால், அந்த கலைப்படைப்பை காட்டிலும் மிஷ்கின் தான் ஆக்ரோசமாக வெளிப்படுகிறார் என்பதை எப்போது அவர் உணரப் போகிறார்..??

மிஷ்கினின் கதை சொல்லும் பாணி தமிழ் சினிமாவில் தனித்துவமானது.. அப்படி ஒரு கவித்துவமான காட்சிப்படுத்துதலில் இருந்து தான் இந்த பிசாசுவும் தன் காட்சித் தாக்குதல்களை தொடங்குகிறது.. விபத்தில் அடிபட்டு விழுந்திருக்கும் பெண், அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரையும் ஒரு ஆண், அந்தப் பெண்ணின் இறப்பு, அதைத் தொடர்ந்து தொடரும் மர்மங்கள், துரத்துகின்ற பிசாசு, அந்தப் பிசாசின் தேவை என்ன..?? இதுதான் இந்த திரைப்படத்தின் கதை சுருக்கம்… இதை காட்சி சுருக்கம் என்று சொன்னாலும் தகும். இப்படி தமிழ் சினிமாவின் வெகு சம்பிரதாயமான காட்சிகளை கண் முன் அடுக்கி, முதல் பாதி முழுவதுமே காணாமல் போகின்ற மிஷ்கின், மீண்டும் தன்னை, தன் முத்திரையை காட்டிக் கொள்கின்ற இடம், அந்த பிசாசின் தேவை என்ன..? என்பதை முன்னிறுத்தித் தான்.. திரைப்படத்தில் அந்த பிசாசின் தேவை என்ன…?? என்பது, தமிழ் திரை சமூகத்தில் இந்த பிசாசு திரைப்படத்தின் தேவை என்ன..? என்பதைப் போல், ஒரு அத்தியாவசியமான, அழகான, அன்பான ஒரு தேவை..

தான் செத்துக் கொண்டிருந்த போது உதவிய ஒரு மருத்துவ கல்லூரி மாணவனை, மீண்டும் சந்திக்க விரும்பும் ஓநாயான கொலைகாரனுக்கும், தான் செத்துக் கொண்டிருந்த போது, தூக்கிச் சென்று உதவி செய்ய விரும்பிய இளைஞனை பார்க்க விரும்பி தேடி வரும் பிசாசுவுக்கும் நாம் முடிச்சி போட்டு யோசித்தால், இந்த பிசாசுவின் மையக்கருவை நாம் கண்டு கொள்ளக் கூடும்.. அந்தப் பிசாசு அந்த வீட்டுக்கு ஏன் வருகிறது என்பதில் தான் மொத்த கதையும் அடங்கி இருக்கிறது.. வழக்கமான தமிழ் சினிமாவின் அடிப்படையில் பார்த்தால், தன் மரணத்துக்கு காரணமான நபர்களை பழி வாங்கவோ பழி வாங்க உதவி வேண்டியோ அந்தப் பேய் வந்திருக்கும்.. ஆனால் இது வழக்கமான தமிழ் சினிமா கிடையாது.. இன்னும் சில பதிவுகள் செத்துப் போகும் இளம்பெண், அந்த முதல் பார்வையிலேயே நாயகன் மீது காதல் கொண்டுவிட்டாள், என்று முன்மொழிகின்றன.. அதுவும் கூட ஒரு வழக்கமான தமிழ் சினிமா என்பதால், அந்த பாதையிலே தன் கதையை மிஷ்கின் நகர்த்தி இருக்க மாட்டார் என்றும் நம்புகிறேன்.. அப்படி என்றால், சாகும் தருவாயில் அந்தப் பெண், நாயகனின் கையை இறுக பற்றிக் கொள்வதும், அவளது தந்தை “ எனக்குப் பிடிச்ச பையனை பார்த்தா கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னியே..” என்று சொல்லி புலம்புவதுமான காட்சிகளையெல்லாம் சேர்த்து முடித்துப் போட்டு, நாம் அதை காதல் என்று கற்பிதம் செய்து கொள்ள வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது.. ஆனால் அது சரியல்ல என்றும் தோன்றுகிறது.


அப்படி பார்த்தால், அந்தப் பெண்ணின் ஆவி ஏன் நாயகனின் வீட்டுக்கு வருகிறது என்ற கேள்வி துருத்திக் கொண்டு தெரியக்கூடும்.. இது எல்லாவற்றுக்குமான பதில், இறந்த பெண்ணின் தந்தையான இராதாரவியை நாயகன் தேடிச் செல்கின்ற போது, அவர் என்ன மனநிலையில் சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்கின்ற வசனத்தில் இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது..  இறக்கின்ற தறுவாயில் தன் கையை தூக்கிக் கொண்டு “ப்பா..” என்று சத்தம் கொடுத்துக் கொண்டே இறக்கும் பொழுதையும், அவள் ஏதோ சொல்ல வந்து முடியாமல் இறக்கிறாள் என்றே நான் நினைக்கிறேன்.. அவள் எதிர்பார்ப்பது போல் ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதால் தான் அவள் வீட்டுக்கும் தேடி வருகிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது.. அப்படி வருகின்ற பெண் ஏன் அப்பாவிடமே அதை சொல்லி தடுத்து நிறுத்தக் கூடாது என்று கேள்வி கேட்கலாம். ஆனால் அதற்கு என்னிடம் பதில் இல்லை..

இது தவிர்த்து படத்தில் ஆங்காங்கே மிஷ்கினின் குறியீடுகளும் இருக்கின்றன.. படத்தின் ஆரம்பத்திலேயே ரெட் சிக்னல் விழுந்திருப்பதை கவனியாமல், க்ரீன் சிக்னல் என்று எண்ணிக் கொண்டு, ஆட்டோவை செலுத்தும் ஆட்டோக்காரரின் காட்சி ஒன்று படத்தில் வருகிறது.. இந்தக் காட்சி படத்தில் வர வேண்டிய தேவையே இல்லை.. அடிபட்ட பெண்னை ஆட்டோவில் தூக்கி வைத்தவுடனே அடுத்த காட்சியை மருத்துவமனையில் தொடங்கி இருக்கலாம்.. அதுபோலத்தான் போலீஸிடம் சென்று நாயகன் இடித்துவிட்டு சென்ற கார்காரனை பற்றி விசாரிக்கும் போது, வெறித்த விழிகளுடன், நெற்றியில் வட்டவடிவில் பெரிதாக வைத்த சிவப்பு நிற பொட்டுடன் நிற்கும் பாட்டியின் காட்சி.. தேவையில்லாத காட்சியாகத் தோன்றும்.. அதற்குடுத்து, உண்மை தெரியவரும் சமயத்தில் சிவப்பு பூவை வைத்துக் கொண்டு பச்சை நிற ஒழுகும் குடத்துடன் நிற்கும் பெண்மணியின் காட்சி.. அங்கு உண்மை தெரியவேண்டுமே தவிர, சிவப்பு நிறப் பூவோ அல்லது பச்சை நிற குடமோ அல்லது அது ஒழுக வேண்டும் என்பதோ தேவையே இல்லை.. இதையெல்லாம் இயக்குநர் ஏன் காட்சியாக்கி இருக்கிறார் என்று யோசித்தால், முதல் காட்சி அந்த ஆட்டோ டிரைவருக்கு கண்ணில் உள்ள பிரச்சனையை பதிவு செய்யும் காட்சி, இரண்டாவது காட்சியை அன்பின் வடிவமாக உள்ள ஒரு பெண், இவன் உண்மையை அறிந்து அதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிவிடுவானோ என்ற பதட்டத்துடன் அவனை அணுகுவதாகக் கூட கொள்ள முடியும்… இந்த இடத்தில் அந்தப் பெண்ணின் ஆவி அவனை வீட்டுக்குள் மட்டும் தொடரவில்லை.. வெளியிலும் தொடருகிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.. சுரங்க நடைபாதை சண்டையிலும் நாயகனை அதுதான் காப்பாற்றுகிறது.. ஆக அந்தப் வயதான பெண்ணின் ரியாக்சனை நான் இறந்து போன பெண்ணின் தவிப்பாகவே பார்க்கிறேன்.. அதுபோலத்தான் அந்த கடைசி காட்சியின் குடமும் பூவும்.. இரண்டின் நிறங்களும் இடம் மாறி இருக்கலாம்.. மாறவில்லை.. ஏனென்றால் சிக்னலில் மேல் இருக்கும் நிறம் சிகப்புதானே.. அது போல பச்சைக் குடம் ஒழுக வேண்டிய அவசியம் இல்லை… அது ஒழுகுவது உண்மை கசிகிறது என்பதற்கும், இனியும் பச்சை நிறம் பாவத்தை சுமக்க அவசியம் இல்லை என்றும் நாம் எண்ணிக் கொள்ளலாம்..

ஆக இப்படி நாயகனின் காரின் நிறத்தில் இருந்து, ஒவ்வொரு இடங்களில் நிறப்பிரிகைகளை மிகச் சரியாக கையாண்டு, ஒரு கதையை வடிக்கின்ற பக்குவம் இங்கு இருக்கின்ற பெரும்பாலான இயக்குநர்களுக்கு இல்லை.. இது போன்ற கதை சொல்வதில் இருக்கின்ற பொறுப்புணர்ச்சி கூட மிஷ்கினின் திரைப்படங்களை விஷேச கவனிப்புகுரிய திரைப்படங்களாக மாற்றுகிறது.. அது தவிர்த்து இந்தத் திரைப்படம் தவறுகளை மன்னிப்பதற்கு கற்றுக் கொடுப்பதாலேயே பிசாசாக இருந்தாலும் இது புனிதமாகிறது..

இந்த திரைப்படத்தில் எல்லோரது நடிப்பிலும் பெரும்பாலும் மிஷ்கின் தெரிகிறார் என்பதால் படத்தில் நடிப்பை பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.. இருந்தாலும் அந்தக் குறையையும் மீறி ஆங்காங்கே நடிப்பில் ஈர்ப்பவர்கள் இரண்டே பேர்.. ஒன்று பவானி என்னும் பேயாக வரும் ப்ரயகா மார்ட்டின்.. இவருக்கு வசனங்கள் கிடையாது. படத்தில் வருவது ஒரே ஒரு காட்சி தான் என்றாலும், அந்த அகல விழி திறந்து நம் மனதுக்குள் எளிதாகவே நுழைந்துவிடுகிறார்.. மற்றொருவர் பவானியின் தந்தையாக வரும் இராதாரவி.. “அம்மாடி… நம்ம வீட்டுக்கு வந்துடுறா…” என்று சொல்லியபடி அவர் மண்டியிட்டபடி செல்லும் அந்த காட்சிகளில் கலங்காத கண்கள் இருக்கவே முடியாது.. படத்துக்கு அரோல் கரோலியின் இசை பக்க பலமாக இருக்கிறது.. அந்த சுரங்கப்பாதை பாடலிலும், அந்தப் பெண்ணின் இறப்பிற்கு பிறகு, நாயகன் துடிக்கின்ற துடிப்பிலும் பிண்ணனி இசை மனதை பிசைகிறது.. ரவி ராயின் கேமரா, இது மிஷ்கினின் படம் என்பதை புரிந்து கொண்டு இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து படம் பிடித்திருக்கிறது… இது தவிர்த்து மது, சிகரெட் இவைகளுக்கு எதிரான கருத்துக்களை லாவகமாக படத்தில் திணித்து இருப்பது, குடிகாரக் கணவனை சித்தரிப்பது, வாகனம் ஓட்டும் போது இருக்க வேண்டிய கவன உணர்வைப் பற்றி ஒரு நொடியேனும் சிந்திக்க வைத்தது என பல நல்ல விசயங்களையும் படத்தின் கதையோடு உறுத்தாத வண்ணம் சேர்த்திருப்பதும் பாராட்டபட வேண்டிய அம்சம்.

இந்த திரைப்படத்தில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை.. சில குறைகள் இருக்கின்றன… ஒரு சாதாரண Opener தொலைந்ததற்கு நாயகன் மிரளத் தொடங்குவதில் இருந்து, பேயைக் கண்டு அவர்கள் நடுங்கும் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் பெரும் கேலிக்கூத்தாகவே இருக்கிறது. அது போன்ற காட்சிகளில் எல்லாம் அச்சத்துக்கு பதிலாக நகைப்பே தோன்றுகிறது.. ஆனால் பேயை விரட்டுவதற்காக அவர்கள் கையாளும் முயற்சிகளில் இருந்து, படத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது.. அடுத்து வரும் காட்சிகள் எல்லாமே பரபரவென்று செல்கிறது.. இரண்டாம் பாதி முழுவதுமே மிஷ்கினின் படமாக காட்சியளிக்கிறது.. குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பமாக பார்ப்பதற்கும் இது ஏற்றபடும்.. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒருசில நிமிடமாவது Rash Driving செய்வது தொடர்பான ஒரு  குற்றவுணர்ச்சியையும் இப்படம் தோற்றுவிப்பதில் தவறவில்லை. எனவே ‘அரண்மனை’ காலத்து பேய்களையே பார்த்து வரும் நமக்கு இந்த மிஷ்கினின் “பிசாசு” எந்த வகையிலும் ஏமாற்றம் தராது என்பதால் தைரியமாக கம்பளம் விரித்து வரவேற்கலாம் இந்த பிசாசை.


Friday 19 December 2014

12ம் சென்னை திரைப்படவிழா திரைப்படங்கள் 1:

12-வது சென்னை திரைப்பட விழாவில் இன்று பார்த்த படங்களில் The Empty Hours, Ariane's Thread மற்றும் Mr. kaplan என்கின்ற இந்த மூன்று திரைப்படங்களும் கண்டிப்பாக தரவிறக்கம் செய்து மீண்டும் பார்க்க வேண்டிய தகுதியை பெற்றிருக்கின்றன... இந்தப் படங்களைப் பற்றி நீண்ட பதிவுகள் எழுத வேண்டுமென ஆசை.. தற்போது ஒரு சிறிய பதிவு..

The Empty Hours: 


செல்போனுக்குள்ளாகவே சுருங்கிப் போன இந்த கணிப்பொறி யுகத்தில், வாழ்க்கையை தனிமைக்கு தின்னக் கொடுக்கும் மனிதர்கள் பெருகி வருகிறோம்.. அதுபோல தனிமையை உணரும் இரண்டு நபர்களின் கதை இது.. பருவத்தாலும் வயதாலும் முதிர்ச்சி அடைந்த பெண்ணுக்கும், இரண்டிலுமே முதிர்ச்சி அடையாத இளைஞனுக்குமான தனிமையை பேசும் படம்.. அந்த தனிமையின் தவிப்பை இருவரும் எப்படி கடக்கிறார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...
(Spain, 2013, 101 mins, Aaron Fernandez Lesur)

Ariane's Thread:


எந்தவித எதிர்பார்ப்புமே இல்லாமல் வேறுவழியின்றி பார்த்த படம், மிகச்சிறப்பான படமாக அமைந்தது என் பாக்கியமே.. வாழ்க்கையின் பல்வேறுவிதமான தத்துவங்களை அநாயசமாக அள்ளித் தெளிக்கிறது இந்தத் திரைப்படம்.. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே அதற்குரிய முக்கியத்துவத்தோடும் உயிர்ப்போடும் இருப்பது படத்தின் சிறப்பு.. (அந்த ஆமை உட்பட).. வசனங்கள் எல்லாம் அவ்வளவு அர்த்தமுள்ளவை.. இந்த திரைப்படத்தை பார்த்த போது தவிர்க்கவே முடியாத அளவுக்கு இரண்டு சிறுகதைகள் நினைவுக்கு வந்தது.. ஒன்று எஸ்.ராவின் ஜி.சிந்தாமணிக்கும் கோகிலாவுக்கும் சம்பந்தம் இல்லை சிறுகதை.. மற்றொன்று ஜி.நாகராஜனின் டெர்லின் ஷெர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் சிறுகதை...
(France, Robert Guediguian, 2014, 92 Mins)


Mr. Kaplan:

யூதர்களுக்கும் ஜெர்மானிய நாஜிப்படைக்கும் இடையேயான பிரச்சனைகளை மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம்.. ஆனால் இப்படி ஒரு படத்தை நாம் பார்த்திருப்போமா என்பது சந்தேகமே.. 76 வயதான Kaplan என்ற வயதான பெரியவர் தான் இந்த திரைப்படத்தின் நாயகன்.. இவருக்கு உதவியாளனாக உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்பத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட நடுத்தர வயது மனிதன் ஒருவன்... இருவருக்குமே தேவை ஒன்றுதான்.. தாங்கள் வாழ்ந்தோம் என்று சொல்லிக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பது... அதற்கான வாய்ப்பாக இரண்டாம் உலகப் போரின் போது, அவர்கள் வாழும் உருகுவே நாட்டில் வந்து பதுங்கிய ஒரு நாஜியைப் பற்றிய குறிப்பு அவர்களிடம் கிடைக்கிறது... அதை வைத்து அந்த இருவரும் என்ன செய்தார்கள் என்பது மீதிப்படம்.. யூதர்கள்-நாஜி என்கின்ற இந்த கனமான களத்தை இவ்வளவு கலவையான உணர்ச்சிகளோடு பார்த்தது இந்தப் படத்தில் மட்டும்தான்... குடும்பத்தோடு பார்க்கலாம் இந்தப் படத்தை...
(Uruguay, Alvaro Berchner, 2014, 95 Mins)




Charlie's Country:

நல்ல கதைக்களம்.. எல்லா நாடுகளும் எதிர்கொண்டு வந்திருக்கும் பிரச்சனை என கருத்தியல் அடிப்படையில் முக்கியமான படைப்பு தான்... ஆனால் சோர்வு தட்டுவதும் சில இடங்கள் நம் அளவு கடந்த பொறுமையை கோருவதும் இதன் குறைகள்.. Charlieயாக நடித்திருக்கும் பெரியவரின் நடிப்பு ஈர்த்தது.. சில காட்சிகளில் கையாளப்பட்ட குறியீடுகள் முழுவதுமாக புரியவில்லை.. முடிந்தால் மீண்டுமொரு முறை பார்க்க வேண்டும்...
(Australia, Rolf De heer, 2013, 108mins)



Adomya And Life Goes On..

அஸ்ஸாம் மொழித் திரைப்படம்.. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவலத்தை பேசும் திரைப்படம்.. சீரியலுக்கு நிகராக இருந்தது... ஏகப்பட்ட க்ளிசே காட்சிகள் என இன்றைய சோகம் இந்தத் திரைப்படமாக இருந்தாலும், நம்பிக்கையை விதைக்கின்ற வகையில் அந்த கதாபாத்திரம் வாழ்ந்துகாட்டுவதை காட்சிப்படுத்தி இருந்த விதம் கண்டிப்பாக பாராட்டத்தக்கது... அதற்காக மட்டுமே கவனம் ஈர்த்த படம்..
(India, Assam, Bobby Sarma Baruah,2013, 90 Mins)