Wednesday 28 May 2014

கிம் கி டுக் வரிசை – 5

                                                                                                          Kim Ki-duk
 
Spring summer fall winter and spring:

வாழ்க்கை எதனால் ஆனது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.. என்று எனக்குத் தெரியாது… கிம் கி டுக் என்ன சொல்கிறார் தெரியுமா…? நம் வாழ்க்கை அன்பாலும் அறியாமையாலும் ஆசைகளாலும் ஏமாற்றங்களாலும் கோபங்களாலும் காதலாலும் காமத்தாலும் வெறுப்பினாலுமானது என்கிறார்… குறிப்பாக இன்னும் இரண்டையும் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்.. அது பிழை மற்றும் குற்றவுணர்ச்சி… ஆம் வாழ்க்கை பிழைகளாலும் அந்த பிழை சார்ந்த குற்றவுணர்ச்சிகளாலும் கூட ஆனது தான்..


ரஜினிகாந்த் அவர்களின் பாட்ஷா திரைப்படத்தில் வரும் தத்துவப்பாடல் நினைவிருக்கிறதா..? அந்தப் பாடல் வாழ்க்கையை எட்டாகப் பிரித்துக் கொள்ளச் சொல்கிறது… விளையாட்டு, படிப்பு, திருமணம், குழந்தை, செல்வம், ஓய்வு, சுற்றுலா, மரணம் என ஒவ்வொரு எட்டு வருடங்களிலும் ஒவ்வொரு மனிதனும் தவறாமல் கடந்து வருகின்ற வாழ்க்கையின் படிநிலைகளைப் பற்றி மேலோட்டமாக அந்தப் பாடல் விளக்குகிறது… கிட்டதட்ட அதே பாணியில் மனிதனின் வாழ்க்கையை வருடத்தின் நான்கு பருவங்களோடு ஒப்பிட்டு, மனிதன் தன் வாழ்நாளின் ஒவ்வொரு பருவத்திலும் எதன் மீது தீராத காதல் கொண்டு இருக்கிறான்… அவனது செயல்களுக்கு எது அடிப்படையாக இருக்கிறது என்பதை புத்தமத கோட்பாடுகளின் அடிப்படையோடு தீவிரமான மனநிலையுடன் ஆய்வு செய்ய முற்படுகிறது இத்திரைப்படம்..

வாழ்க்கைக்கும் பருவநிலைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.. ஏன் இத்திரைப்படத்திற்கு பருவநிலைகளைக் கொண்டு பெயரிட வேண்டும் என்று எண்ணினால், ஒரு விடயம் கிடைக்கிறது.. அது காலத்தின் பருவநிலைகளுக்கும் மனித வாழ்க்கையின் பருவநிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.. பொதுவாக பருவநிலையில் எந்தப் பருவத்தை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று கேட்டால், பெரும்பாலான மக்களின் பதில் வசந்தகாலத்தை என்பதாகத் தான் இருக்கும்.. அதுபோலத்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த காலகட்டத்தை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று கேட்டால், குழந்தமை தன்மை மாறாமல் நாம் வாழ்ந்து கழித்த நம் வாழ்க்கையின் முதல் எட்டு வருடங்களை நோக்கி பெரும்பாலான மக்கள் கை நீட்டலாம்… இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் நம் அடிமனதில் தோன்றுகின்ற ஒவ்வொரு விதமான வேட்கையானது ஏதோவொரு விதத்தில் பருவகாலங்களில் நமக்கு ஏற்படும் வேட்கையுடன் ஏதோவொரு முனையில் ஒத்துப்போகிறது என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது..

சரி.. அதற்கும் புத்தமத பிண்ணனிக்கும் என்ன தொடர்பு… எதற்காக புத்தமடாலயத்தில் இந்தக் கதை நடைபெற வேண்டும்…. இதே சிறுவனை ஒரு கிராமப்புற சூழலிலோ அல்லது நகர்மயமாக்கப்பட்ட நகரச் சூழலிலோ பெற்றோருடன் வாழவிட்டு, அந்த வாழ்க்கையின் படிமங்களை படைப்பாக வார்த்திருக்கலாமே…? ஏன் கிம் கி டுக் புத்தமடாலயங்களின் பிண்ணனியை நோக்கி ஓடினார் என்கின்ற ரீதியில் யோசிக்கும் போது, இந்த வாழ்க்கை பருவநிலை மாற்றங்களின் வழியாக அவர் எதைப் பற்றி பேச முயலுகிறார் என்கின்ற புள்ளியின் மேல் மொத்த கவனமும் குவிகிறது.. நாம் பிறந்ததில் இருந்து எத்தனை ஒழுக்கம் மற்றும் நன்னெறி சார்ந்த கோட்பாடுகள், போதனைகள், அறிவுரைகள்  நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைவு கூறுங்கள்.. அதில் எத்தனை விதிகளை நாம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வழுவாமல் கடை பிடித்திருக்கிறோம் என்பதையும் சற்றே நினைவு கூறுங்கள்.. என்னளவில் பார்த்தால் நான் கடைபிடித்த ஒழுக்கநெறிகள் காற்றில் பறக்கவிட்ட ஒழுக்கநெறிகளை விட சத்தியமாய் அதிகம்.. ஆயினும் என்ன பிரயோஜனம்… அவற்றை நான் காற்றில் பறக்கவிட்டதால், அவை வானளவுக்கு பறந்து, பலரது பார்வைக்கும் என்னை உட்படுத்தி படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது… இது என் சொந்தக்கதை… படத்தின் கதை அதுவல்ல… ஆக இப்படி ஏகமாய் கடைபிடிக்க வேண்டிய போதனைகள் புத்திமதிகள் என நமக்கு முன் வாழ்ந்து சென்ற முன்னோர்கள் கடை விரித்து சென்றிருந்தாலும், அதைப் பயன்படுத்தி வெற்றியடைவதில், பெரும்பான்மையான மக்கள் அல்லது சிறுபான்மையான மக்கள் ஏன் தடுமாறுகிறார்கள் என்கின்ற காரணத்தை உளவியல் ரீதியாக அணுகிப் பார்ப்பதே இப்படத்தின் நோக்கம்… எனவே படத்தின் நோக்கத்தின் அடிப்படையில் சிறுவயதிலியே நன்னடத்தை விதிகளை நன்கு கற்ற ஒரு சிறுவன் தேவை… அவன் அந்த நன்னடத்தை விதிகளை கடைபிடிப்பதில் எப்படி தடுமாறுகிறான் என்பது மீதி கதை… ஆதலால் நகரத்து சிறுவனையோ கிராமத்து சிறுவனையோ எடுப்பதற்கு பதில், மடாலயத்தில் படிக்கும் ஒரு சிறுவனையே உதாரணத்துக்கு எடுத்து அவனே தடுமாறுகிறான் என்று நிருபித்து விட்டால், பிற சாமானியர்கள் தடுமாறுவதைப் பற்றி அதிகம் விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா…? ஆகவே தான் புத்த மடாலயத்தில் வளர்ந்து வரும் ஒரு சிறுவன்… இனி கதை..

தென்கொரியாவின் சீயோன் நீர்நிலையின் நடுவே மிதந்து கொண்டு இருக்கும் ஒரு புத்தமடத்தில் வசிக்கும் ஒரு வயோதிக புத்தமத துறவியிடம் போதனைகளை கற்க வந்திருக்கும் 8 வயது நிரம்பிய சிறுவனின் வாழ்க்கையின் வழியாக, மனிதனின் இயல்பான ஆக்ரோஷங்களையும் அதைக் கட்டுப்படுத்தி அவனை நல்வழிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மதம் போன்ற நிறுவனங்கள் பல நேரங்களில் அதில் தோற்றுப்போவதற்கான பிண்ணனியையும் பற்றிப் பேசும் படம்… இந்த Spring summer fall winter and Spring….



SPRING:

வசந்த காலம்… வசந்த காலத்துக்கு அர்த்தம் சொல்லத் தேவையில்லை.. எல்லாராலும் விரும்பப்படும் ஒரு பருவம்… திரைப்படத்தில் இந்தப் பருவத்தில் என்ன நடக்கிறது..? புத்தரை துதிக்கிறார்கள்.. அந்த அறையில் ஒரே ஒரு கதவு மட்டும் இருக்கிறது.. அதன் பக்கவாட்டுப் பகுதி முழுவதும் திறந்த நிலையில் தான் இருக்கிறது… கதவைத் திறந்து கொண்டும் வரலாம்… திறந்துவெளி வழியாகவும் வரலாம்… ஆனால் அவர்கள் இருவருமே கதவைத் திறந்து கொண்டு அந்தப் பாதை வழியாகவே வருகிறார்கள்.. இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் நியமவிதிக்கான குறியீட்டு பிம்பம் அந்த கதவு. சிறுவன் தன் குருவுடன் மூலிகை செடிகளைப் பறித்து வர நிலப்பரப்புக்கு வருகிறான்… மலை முகடில் இருக்கும் புத்தர் சிலை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.. 


மூலிகை செடிகளோடு சில விஷச் செடிகளையும் பறித்துச் செல்கிறான்… குரு அவனுக்கு எது நல்ல செடி எது தீயது என்று விளக்குகிறார்… அந்த சிறு பிராயத்தில் அவனுக்கு புதிய விசயங்களை கற்றுக் கொள்ளும் ஆவல் அதிகமாகவே  இருக்கிறது… அதனோடு சேர்ந்து விளையாட்டுப் புத்தியும்.. நீர்நிலையில் இருந்து நிலப்பரப்புக்கு செல்லும் படகில் துடுப்பு வழிக்க கற்றுக் கொண்டு அவனே படகை தனியாக எடுத்துக் கொண்டு செல்கிறான்… அங்கிருக்கும் ஒரு நாயுடன் ஓடியாடி விளையாடுகிறான்… விளையாட்டுத் தனமாக மீன், தவளை, பாம்பு இவைகளின் முதுகில் ஒரு கல்லைக் கட்டிவிட்டு, அவை நகரமுடியாது சிரமப்படுவதைப் பார்த்து சந்தோசத்தில் சிரிக்கிறான்… அவனது குரு பின்னால் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.. இரவில் உறங்கிக் கொண்டு இருக்கும் சிறுவனின் முதுகில் கல்லை வைத்துக் கட்டுகிறார்.. காலையில் எழும் சிறுவன் தன்னால் நடக்க முடியவில்லை… பாரமாக இருக்கிறது என்றும் துன்பமாக இருப்பதாகவும் தன்னை விடுவிக்குமாறும் சொல்லி அழுகிறான்.. புத்தர் சிலையை தன் மடியில் வைத்து துடைத்துக் கொண்டு இருக்கும் குரு, இதையே தானே நீயும் மீன், தவளை, பாம்புக்கு செய்தாய்.. அவைகளுக்கு துன்பமாக இருக்காதா..? என்று கேட்டு… அவைகளை முதலில் விடுவி… நான் உன்னை விடுவிக்கிறேன்.. ஆனால் அந்த உயிர்களில் ஏதேனும் ஒன்று இறந்திருந்தால் இந்த கல்லை உன் இருதயத்தில் நீ காலமெல்லாம் சுமப்பாய் என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்.. முதுகில் கட்டப்பட்ட கல்லுடன் நிலப்பரப்பில் அவைகளை விடுவிக்கச் செல்லும் சிறுவன் உயிரோடு இருக்கும் தவளையை விடுதலை செய்கிறான்… இறந்திருக்கும் மீனை மண்ணில் புதைக்கிறான்.. ரத்தம் கக்கி இறந்து கிடக்கும் பாம்பைப் பார்த்து பெருங்குரலெடுத்து ஏங்கி ஏங்கி அழுத் தொடங்குகிறான்… குரு பின்னால் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.. வசந்தம் முடிகிறது…



Summer:

தாகத்தினால் தகிக்கும் பருவம்.. தாகம் தீர்க்க தவிக்கும் பருவம்… இந்தப் பருவத்தில் திரைப்படத்தில் என்ன நடக்கிறது… சிறுவன் இளைஞனாக ஆகி இருக்கிறான்.. இரு பாம்புகள் பின்னிப் பிணைந்து கிடக்கும் பரவசநிலையைக் கண்டு மயங்குகிறான்.. மலைமுகட்டில் இருக்கும் புத்தர் உலகைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒரு இளம்பெண் தன் தாயுடன் சிகிச்சைக்காக மடாலயத்துக்கு வருகிறாள்… மடாலயத்தில் சேவல் ஒன்று தன் முன் கிடக்கும் இரையின் மீது மட்டும் கவனத்தைக் குவித்து அதை கொத்திக் கொண்டே இருக்கிறது.. 


ஓரிரு நாளில் அவளது தாய் திரும்பிச் செல்கிறாள்… மடாலயத்தில் தனித்து விடப்படும் அந்த இளம் பெண் மீது இளைஞன் மையல் கொள்கிறான்.. அவளது உடலின் மீது ஈர்ப்பு கொள்கிறான்.. உறக்க நிலையில் இருக்கும் போது அவளது உடலின் பாகங்களை தொட்டுப்பார்க்க துடித்து அவளிடம் அடி வாங்குகிறான்… புத்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்கிறான்.. அவள் அவனை பரிதாப உணர்ச்சியுடன் வருடிக் கொடுக்கிறாள்.. இரவில் அனைவரும் உறங்கும் போதும் அவனது கண்கள் விழித்திருந்து அவளையே விழுங்கிக் கொண்டு இருக்கிறது… அவளை மயக்கப் பார்க்கிறான்.. ஆடு நனைவதை எண்ணி ஓநாய் அழுவதைப் போல், மழையில் அவள் நனையாமல் குடை பிடிக்கிறான்.. 


தண்ணீரில் குதித்து சாகசம் செய்கிறான்… மருந்து தயாரித்து கொடுக்கிறான்.. பெண்ணும் மயங்குகிறாள்… அவன் அவளிடம் எதிர்பார்த்தது அவனுக்கு கிடைக்கிறது… ஒருமுறை அல்ல.. இருமுறை அல்ல… மூன்று முறை.. விதிமுறைகளை தளர்த்துகிறான்… அவள் உட்காருவதற்கு தடை செய்யப்பட்ட இடத்தின் மீது தூசி தட்டி அவளை உட்கார வைக்கிறான்.. கதவுகளின் வழியாக செல்லாமல், திறந்தவெளி வழியாக அவளை நெருங்குகிறான்… விதிமுறைகளை மீறுகிறான்.. சேவலைக் கொண்டே குரு இருவரையும் பிடிக்கிறார்.. குருவிடம் மாட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்கிறான்.. இது இயற்கை.. இப்படித்தான் நடக்கும் என்று சொல்லும் குரு.. அந்தப் பெண்ணிடம் இப்பொழுது உனது நோய் குணமாகிவிட்டதா…? என்று கேட்கிறார்.. அவள் ஆமாம் என்று சொல்ல… அப்படியென்றால் இதுதான் சரியான மருந்து.. நீ கிளம்பலாம் என்கிறார்.. அவள் தன்னைவிட்டு போய்விடுவாள் என்ற பயத்தில் இளைஞன் எதிர்ப்பு தெரிவிக்கிறான்… குரு அவனை எச்சரிக்கிறார்… “காமம் தன்னுடைமையாக ஆக்கிக் கொள்ளும் ஆசை உணர்வை தூண்டிவிடும்… அந்த உணர்வு தன்னுடைமையாக நிலைநிறுத்திக் கொள்ள கொலை செய்யும் உணர்வை தூண்டிவிடும்..” என்று அறிவுறுத்தி அவளை அனுப்பி வைக்கிறார்.. அவள் இல்லாத இடத்தில் இருக்க முடியாமல் அன்றிரவே இளைஞன் அந்த இடத்தை விட்டு புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்… புத்தர் அவனது முதுகுக்கு பின்னால் பார்த்துக் கொண்டு இருக்கிறார்…. சேவலையும் தன்னோடு எடுத்துச் சென்று காட்டில் விட்டுவிட்டு செல்கிறான்… கோடையின் தாகம் அவனுக்கு தீரவில்லை… ஆனால் பருவம் அத்துடன் முடிகிறது…

Fall:

இலையுதிர்காலம்… ஒட்டி உறவாடிய ஏதோவொன்று உதிர்ந்துவிடும் காலம்…. இந்தப் பருவத்தில் திரைப்படத்தில் என்ன நடக்கிறது….? வயதாகிவிட்ட குரு ஒரு பூனையை தன் மடாலயத்துக்கு கொண்டு வருகிறார்… ஒரு துண்டுப் பேப்பரில் உள்ள செய்தியில் இளைஞன் ஒருவன் தன் மனைவியை கொன்று விட்டு தலைமறைவான செய்தி பிரசுரமாகி இருக்கிறது… குரு உள்ளே சென்று சில ஆடைகளை திருத்தம் செய்து தைக்கத் தொடங்குகிறார்… முதிர்ச்சி பெற்ற 30 வயது இளைஞனாக சீடன் திரும்பி வருகிறான்… அவனிடம் அவனது வாழ்க்கையின் சந்தோசமான தருணங்களைப் பற்றி குரு கேட்க.. அவன் கோபத்தில் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றதால் தான் அவளை கொன்றுவிட்டதாக சொல்கிறான்… குரு சீடனிடம் உனக்கு ஆடவரின் உலகத்தைப் பற்றி தெரியாதா…? நீ விரும்பும் ஒன்றை மற்றவர்களும் விரும்பத் தானே செய்வார்கள்… என்று கேட்க அவன் கோபத்தில் கத்தத் தொடங்குகிறான்… அமைதி இழந்து காணப்படும் அவன் தற்கொலை செய்து கொள்ள முயல… குரு அவனை தண்டிக்கிறார்… நீ பிறரை எளிதாக கொன்றுவிட முடியும்.. உன்னை உன்னால் அவ்வளவு எளிதாக கொல்ல முடியாது என்கிறார்… பூனையின் வாலில் வண்ணநிற சாயத்தை தோய்த்து அந்த வாலைக் கொண்டே  PRAJNAPARAMITA சூத்திரங்களை எழுதத் தொடங்குகிறார்… பூனை கத்திக் கொண்டே இருக்கிறது.. அவர் எழுதிய சூத்திரங்களை தன் மனைவியை கொலை செய்த கத்தியைக் கொண்டே செதுக்கச் சொல்கிறார்… அவற்றை செதுக்கும் போது உன் மனதில் உள்ள கோபத்தை வெளியேற்றம் செய்.. என்று ஆலோசனை சொல்கிறார்… அவனைத் தேடி போலீஸ் வருகிறது…. போலீசைப் பார்த்து பதற்றமடையும் அவனை குரு சமாதானப்படுத்துகிறார்… குரு போலீஸிடம் அந்த சூத்திரங்கள் அவனது மனதுக்கு அமைதியை கொடுப்பவை… அதை செதுக்க அவனை அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் வைக்க போலீஸார் சம்மதிக்கின்றனர்.. அவனுக்கு உதவவும் செய்கின்றனர்… காலையில் அவனை அழைத்துச் செல்கின்றனர்… கூடவே பூனையையும் எடுத்துச் செல்கின்றனர்… ஒரு இடத்தில் அவர்களது படகு நகராமல் நிற்கிறது… குருவை சிஷ்யன் திரும்பிப் பார்க்க… அவர் கையசைத்தப் பின்னரே படகு செல்கிறது.. வயதான குரு படகில் அமர்ந்து நெருப்பு மூட்டி தன் மூச்சை அடக்கி இறந்து போகிறார்… நீர்நிலையில் அவரது உடல் எரிந்து கொண்டு இருக்க.. ஒரு பாம்பு நீந்தி மடாலயத்தில் புகுந்துவிடுகிறது… இலையுதிர்பருவம் இரண்டு முக்கியமான இலைகள் உதிர்ந்ததோடு நிறைவடைகிறது…


Winter:

குளிரால் நடுங்கி ஒடுங்கிப் போய் அரவணைப்பு தேடும் பருவம்… முதிர்ச்சி அடைந்த நடுத்தர வயது மனிதராக சிஷ்யன் திரும்பி வருகிறான்.. நீர்நிலை பனியால் உறைந்து கிடக்கிறது…. படகு உறைந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு அதை வணங்கும் சிஷ்யன், தன் குருவின் உடல் பாகங்களை சேகரித்து அதை புத்தரின் சிலையில் பிரதிஸ்டை செய்கிறான்… மார்ஸியல் கலைகளை தனக்குத் தானே கற்றுக் கொண்டு தன் உடலை தயார் செய்கிறான்…. மடாலயத்தின் ஒரு மூலையில் பாம்பு சுருண்டு கிடக்கிறது… மடாலயத்துக்கு தன் முகத்தை முழுவதுமாக மறைத்து வரும் ஒரு பெண் தன் குழந்தையை அங்கே விட்டுவிட்டு செல்லும் போது சிஷ்யன் தோண்டிய குழியில் விழுந்து இறக்கிறாள்… அவளது உடலை மீட்கும் சிஷ்யன் தன்னால் தெரியாமல் நேர்ந்த தவறுக்காக வருந்துகிறான்…. கவலையோடு அமர்ந்திருப்பதைப் போன்ற சிலையான KUAN-JIN BOTHISATTVA என்னும் பெண் சிலையை தன் கையில் எடுத்துக் கொண்டு, கல்லை தன் உடலில் கட்டி இழுத்தவாறே மலை சிகரத்தில் ஏறி, அந்த கல்லின் மீது அந்த சிலையை வைத்து தன் வாழ்நாளில் செய்த எல்லா தவறுகளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான்… இரக்கம் மற்றும் கருணையின் அடையாளமான அந்த சிலை அந்த நீர்நிலை மற்றும் உலகத்தை கவலை கலந்த கருணையோடு உற்றுப் பார்ப்பதைப் போல் குளிர்காலம் நிறைவடைகிறது…

And Spring:

சிஷ்யன் குருவாக இருக்க… அந்த பெண்மணி விட்டுச் சென்ற சிறுவன் சீடனாக இருக்கிறான்… அவனும் விளையாட்டுத்தனமாக ஆமை, மீன், தவளை, பாம்பு இவைகளின் வாயில் கல்லை திணித்து மகிழ்ந்து கொண்டு இருக்க… மேலிருந்து KUAN_YIN சிலை கவலையோடு இதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக திரைப்படம் முடிவடைகிறது…


ஆக நம் வாழ்க்கையில் வசந்தகாலம் என்று ஒன்று இருக்குமானால், நாம் தெரியாமல் செய்த தவறுகளுக்காகக் கூட மனம் வருந்தி அழுவோமே அந்த மனநிலைக்கான காலம் தான் நம் வாழ்க்கையின் உண்மையான வசந்தகாலம்… அந்த சிறுவன் வாழ்நாளெல்லாம் தன் இதயத்தில் சுமந்த கற்களைப் போல் நாம் எத்தனைக் கற்களை சுமந்திருப்போம்… அந்த பருவத்தில் சிறுவன் செய்யும் தவறுகள் எல்லாமே அவன் அறியாமல் செய்வது…. புத்த சிலைகளின் மீது தலைவைத்து தூங்குவது, தவறான செடிகளைப் பறிப்பது, உயிர்களை துன்பப்படுத்துவது இப்படி எல்லாமே அவன் அறியாமையில் செய்கிறான்… அதுபோல் அந்தப் பருவத்தில் காட்டப்படும் நாய் என்பது அந்த பருவத்தின் குணாதிசயத்துக்கான குறியீடு… நன்றியுள்ள ஏமாற்ற தெரியாத விசுவாசமுள்ள குணாதிசயம் கொண்ட பருவம் என்பதற்கான குறியீடு..


கோடை பருவத்தில் வரும் அந்த சேவல் சிஷ்யன் காமத்தின் மீதே குறியாக இருப்பது போல், தன் இரை மீது மட்டுமே கவனத்தை வைத்திருக்கும் குணாதிசயத்துக்கான குறியீடு… இதே சேவலை இதே குறியீட்டு உத்திக்காக THE BOW திரைப்படத்திலும் கிம் கி டுக் பயன்படுத்தி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்…. இந்தப் பருவத்தில் தான் அவன் தான் கடைபிடித்த விதிமுறைகளை எல்லாம் மீறத் தொடங்குகிறான்… திறந்தவெளி வழியாக அந்த இளம்பெண்ணிடம் ரகசியமாக செல்கிறான்… அவனது நினைவில் இதை புத்தர் பார்த்துக் கொண்டு இருப்பார் என்பதை மறந்துவிடுகிறான்… காமம் எப்படி ஒரு மனிதனை அலைகழிக்கிறது என்பதற்கு அவனது நடவடிக்கைகளே தக்க சான்று… அடுத்து அவன் வாழ்வில் நடக்கப்போகும் நிகழ்வுகளை புத்தர் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவன் செய்கிறான் என்பதை சொல்வதைப் போலவோ அல்லது இனி அவனது வாழ்க்கையில் நடக்கப் போகும் நிகழ்வுகள் அவர் பார்க்கும் அளவுக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை என்பதால் அவர் தன் முகத்தை திருப்பிக் கொள்கிறார், என்பதை சொல்வதைப் போலவோ தான், புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு அவன் மடாலயம் விட்டுச் செல்லும் போது அவனது முதுகுக்குப் பின்புறமாக புத்தர் சிலை தொங்கிக் கொண்டு இருக்கிறது என்றுகூட அதை எடுத்துக் கொள்ளலாம்… புத்தர் எப்படி எடுத்துச் செல்லப்பட்டாரோ அதே நிலையில் தான் அடுத்த பருவத்தில் பூனை எடுத்து வரப்படும்… ஆக அப்போதே அவனது குணாதிசயம் பூனையைப் போல் சுயநலமாக மாறிவிட்டது என்பதாகவும் நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்…

இலையுதிர்கால பருவத்தில் வரும் அந்த பூனை ஒரு சுயநல குணாதிசயத்துக்கான குறியீடு… அதற்கு தன் தேவை மட்டுமே பெரிது.. அதனிடம் நாம் பாசமோ, நன்றியோ எதையுமே எதிர்பார்க்க முடியாது…. எப்போது அதற்கு பசிக்கிறதோ அப்போது நம்மிடம் வந்து குழையும்.. நாக்கால் வருடும்.. பசி தீர்ந்தால் நம்மை கண்டு கொள்ளாது, தன் இஷ்டத்து அது திரிந்து கொண்டிருக்கும் விலங்கு.. அந்த சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான், இளைஞன் தன் மனைவியை வழக்கமான கலாச்சாரத்தின் படி தனக்கான உடைமையாக அவளை கருதுகிறான்… அவளை காலம் முழுவதும் அவனே ஆள நினைக்கிறான்… அது இயலாமல் போகும் போது வஞ்சத்தில் கொலை செய்கிறான்… அந்தப் பூனையின் வாலில் வண்ணத்தை தோய்த்து எழுத வேண்டிய அவசியம் என்ன…? அதற்கு அடுத்த காட்சியிலேயே பிரஸ் கொண்டு அந்த சூத்திரங்களை குரு தீட்டுவார்… முதலிலேயே அந்த பிரஸை பயன்படுத்தி இருக்கலாமே… அந்தப் பூனையை துன்புறுத்துவது என்பது சீடனை நல்வழிப்படுத்துவதற்காக சூத்திரத்தை செதுக்க வைப்பதன் அடையாளம்… நன்றாக கவனித்தால் தெரியும்.. அந்தப் போலீஸ் கூட பூனையை கொஞ்சும் பக்குவம் அடைந்தப் பின்னரே குற்றவாளிக்கு மெழுகுவர்த்தியை உயர்த்தி உதவத் தொடங்குவார்….. ஆக அந்த பூனை என்பது அந்த இளம் பிராயத்தின் குணாதிசயத்துக்கான பிம்பம்..


அந்த இறுதிப் பருவத்தில் வரும் பாம்பு என்பது பாவத்துக்கான குறியீடு… கிறிஸ்த்துவ மதமும் அதைத்தான் கூறுகிறது…. தான் செய்த பாவங்களை எண்ணி வருந்துவதற்கான குறியீடு… அந்தப் பாம்பு எங்கிருந்து வந்தது என்பதும் மிக முக்கியமானது… குரு தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் போது நீரில் அவரிடம் இருந்து பிரிந்து வருகிறது… பழைய சிஷ்யனின் இடத்தை புதிய சிஷ்யன் பிடித்து இடம் மாற்றம் செய்துவிட்டு அதேவித தவறுகளை செய்வதைப் போலத்தான் குருவின் வாழ்க்கையும்.. இப்போது குருவாக இருக்கும் பழைய சிஷ்யன் தன் பாவங்களுக்காக வருந்தியதைப் போல், பழைய குருவும் சிஷ்யனாக இருந்தபோது இதுபோன்ற பாவங்களை செய்து அதற்காக வருந்தியவராக இருக்கலாமோ..? என்ற பிம்பத்தையும் திரைப்படம் தருகிறது… ஆக இங்கு எல்லோருமே தவறுகள் செய்துவிட்டு அந்த தவறுகளை எண்ணி வருத்தத்துடன் உலகைப் பார்க்கும் kyan-yin சிலையை பிரதிபலிப்பவர்களாகவே இருக்கிறோம்…. 


இது ஒரு ஆணின் வாழ்க்கையை கொண்டு வாழ்க்கையின் தருணங்களைப் பேசும் படமாகவே இருந்தாலும், இது பெண்களின் வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியது தான் என்பதற்கான குறியீடுகள் தான் படத்தில் வரும் அந்த இரண்டு பெண்களுமே… எப்படி கோடையில் இளைஞன் காமத்தால் உளழுகிறானோ…? அதே அயற்சி அந்தப் பெண்ணுக்கும் உண்டு… அதுபோலத்தான் குளிர்காலத்தில் தன் தவறுகளை எண்ணி வருந்தும் சிஷ்யனைப் போல், தன் பாவத்துக்காக வருந்தும் அந்த முகம் தெரியாத பெண்ணின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது… ஆக இது ஒரு பெண்ணின் வாழ்வியலுக்கும் பொருந்தும் ஒரு படைப்பு தான்….


கடவுள் நம்பிக்கை உள்ள மனிதர்களுக்கும் சரி.. கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கும் சரி… ஏன் கடவுள் தவறுகள் நடக்கும் முன்னரே தடுப்பதே இல்லை என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும்… அந்தக் கேள்வி திரைப்படத்தில் கூட வரும்… சிறுவன் உயிரினங்களின் உடலில் கல்லை கட்டும் போது அதை தடுக்காமல் ஏன் குரு வெறுமனே கடவுளைப் போல் பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார் என்பதான கேள்வி… சிஷ்யன் மடாலயத்தை விட்டு ஓடும் போதும் அவர் ஏன் அவனை தடுக்கவில்லை என்பதான கேள்வி… அன்று விழித்தவர் ஏன் அவர்கள் இருவரும் பலமுறை இரவில் அத்துமீறும் போது விழிக்கவில்லை என்ற கேள்வி..? ஆனால் சிஷ்யன் தன்னைத் தானே கொன்று கொல்ல முயலும் போது குரு அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதில்லை.. அவனைக் காப்பாற்றுகிறார்… அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் கேள்விகள் எழும்…


நான் இதை எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால், இத்திரைப்படத்தில் குரு என்பது கடவுளுக்கான அம்சம் தான்… ஏனென்றால் சிறுவனை விசாரிக்கும் தருணத்தில் அவர் தன் மடியில் புத்த சிலையை வைத்து துடைத்துக் கொண்டிருக்கும் காட்சியை நினைவு கூறுங்கள்… அங்கு இருப்பது ஒரே ஒரு படகுதான்… அதை சிறுவன் தனியே எடுத்துச் செல்லும் போது அவர் எப்படி அங்கு வரமுடியும்… படகுகளை துடுப்பு போட்டும் அசையாமல் வைக்கும் அவரது சக்தி இப்படி எல்லாமே அவரை கடவுளுக்கான குறியீடாக காட்டுகிறதோ என்றும் நான் சந்தேகிக்கிறேன்…. ஆக உன் தவறுகளுக்காக உன்னையே நீ அழித்துக் கொள்வதை நான் (கடவுள்) விரும்பவில்லை… அப்படி உன்னை அழித்துக் கொள்வதற்காக இந்த வாழ்க்கையை நான் உனக்குக் கொடுக்கவில்லை… மேலும் உன்னை தவறுகளே செய்யாமல் தடுப்பதற்காகவும் நான் உனக்கு இந்த வாழ்க்கையை கொடுக்கவில்லை… உன் தவறுகளின் வாயிலாக நீ பாடம் கற்றுக் கொள்ளவே உனக்கு இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது…. ஆக இந்த வாழ்க்கையே வாழ்வதிலும் கற்றுக் கொள்வதிலும் தான் இருக்கிறது… அதைத்தான் இங்கு எல்லா மனிதர்களுமே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இத்திரைப்படம் சொல்லவரும் மூலமாக இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன்… மேலும் மதங்களை உருவாக்கியவர் கடவுளா..? அல்லது மனிதனா என்ற விவாதத்தை விட்டுவிடுவோம்… அதன் நோக்கம் கண்டிப்பாக மனிதனை தவறு செய்யவிடாமல் தடுப்பதுதான் என்பது கண்கூடு… அப்படி இருந்தும் எல்லா மதங்களும் பாவத்துக்கான மன்னிப்புகளையும், ஆக்ரோசமாக மாறும் மனதை பக்குவப்படுத்துவதற்கான சாஸ்திரங்களையும் சூத்திரங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதை நுட்பமாக கவனித்தாலே தெரியுமே… இந்த மதங்களை உண்டாக்கியவர்களும் மனதையும் அதன் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை உணர்ந்திருந்தார்கள் என்று…


வழக்கம் போல் கிம் கியின் இந்த திரைப்படத்திலும் வசனங்கள் மிகவும் குறைவு… கிம் கி டுக் இத்திரைப்படத்தில் முதிர்ச்சியுற்ற சிஷ்யன் கதாபாத்திரத்தில் தானே நடித்திருக்கிறார்… வயோதிக குருவாக நடித்திருக்கும் அந்தப் பெரியவர் ஒரு தொழில்முறை நடிகர்…. மிகச்சிறப்பான உடல்மொழியை அவர் வெளிப்படுத்தி இருப்பார்… மேலும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு இன்றளவும் உலகளவில் பிரமிப்பாக பேசப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது… இசையும் அப்படியே… கிம் கி டுக் அவர்களை உலகளவுக்கு பிரபலமாக்கிய திரைப்படங்களில் இது ஒரு முக்கியமான திரைப்படம்… நீங்களும் கண்டிப்பாக இத்திரைப்படத்தைப் பாருங்கள்.. பரவசமான ஒரு அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்..

அடுத்த பதிவு

BAD GUY (2001)

Thursday 15 May 2014

என்னமோ நடக்குது:

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து பரவலாக எல்லாரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம்.. சமீபத்தில் வெளிவந்த தெகிடியை போலவே வித்தியாசமான ஒரு கதைக்களன், மிக சின்ன சின்ன சுவாரஸ்யமான முடிச்சுகள், அயர்ச்சியை ஏற்படுத்தாத கதை சொல்லும் முறை, தனிப்பட்ட முறையில் எந்த கதாபாத்திரத்தின் மீதும் தனித்து பயணிக்காத திரைக்கதை, ஹீரோ தவிர்த்து பிற கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் என இது போன்ற  காரணிகள் தான் இப்படத்தை பிற வணிக மசாலா படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது..


இத்திரைப்படம் புளகாங்கிதம் அடைந்து பாராட்டும் அளவுக்கு ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் கண்டிப்பாக சலிப்பை ஏற்படுத்தாத ஒரு வணிக சினிமாவுக்கு தேவையான சரக்குகளை உள்ளடக்கி இருக்கும் திரைப்படம் என்று சொல்லலாம்.. கதாநாயகனோடு ஒப்பிட்டு இதன் மையக்கதை என்னவென்று நாம் யோசிக்க முற்பட்டால், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் தோல்வி அடைந்த மரியான் திரைப்படத்தின் ஒன்லைன் நமக்குக் கிடைக்கும்.. இரண்டிலுமே காதலன் காதலிக்காக தான் செய்து கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, புதிய வேலைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்வது தான் கதை.. இதில் ஒரு படம் தோல்வி (மரியான்) மற்றொரு படமான “என்னமோ நடக்குது” தோல்வி என்று சொல்லமுடியாத ஒரு படம்… இத்தனைக்கும் தோல்வியடைந்த மரியான், தனுஷ், பார்வதி மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், பரத் பாலா என்று இந்தியா முழுக்க பிரபலமான ஆதர்ஷங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம்.. ஆனால் ”என்னமோ நடக்குது” படக் குழுவோ இதுவரை தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்தி வெற்றியே பெறாத விஜய் வசந்த், ஒரே ஒரு படத்தில் நடித்த மஹிமா என்ற சிறுபெண், இசைக்கு பிரேம்ஜி, இயக்குநர் ராஜபாண்டி புதியவர் என முற்றிலும் வேறு தளத்தில் இயங்கும் கலைஞர்களை உள்ளடக்கியது… இவர்களுக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதை நாம் யோசிக்க வேண்டும்..

மரியானை எடுத்துக் கொண்டால், தனுஷ் புறப்பட்டு செல்லும் புதிய வேலை களமான அந்தப் பணியைப் பற்றிய விவரணைகளோ அல்லது அவரைக் கடத்தி செல்லும் அந்நாட்டு தீவிரவாதிகளைப் பற்றிய பின்புலமோ பார்வையாளருக்கு விரிவாக விளக்கப்பட்டு இருக்காது… அது தவிர்த்து அந்தப் பின்புலம் ஆடியன்ஸ் அதை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இடமளிக்காத ஒரு பகுதி. மேலும் இது தவிர்த்து தனுஷ் மற்றும் பார்வதி இருவருக்குமான காதலின் உணர்வலைகளும் நம்மை எந்த இடத்திலும் தீண்டவே செய்யாது… படம் தொடங்கியதில் இருந்து தனுஷின் காதலையும், அவர் அங்கே மாட்டிக் கொள்ளப் போகிறார் என்பதான சின்ன புரிதலையும் தவிர படத்தில் பெரிய எதிர்பார்ப்பு எதுவுமே இருக்காது… மேலும் மற்றொரு முக்கியமான விசயம் தனுஷ், பார்வதி இந்த இருவரைத் தவிர வேறு எந்தக் கதாபாத்திரத்திலும் மையக் கதை நகராமல், இவர்கள் இருவருக்குள்ளும் சுற்றி சுற்றி வந்து நம்மை சலிப்படையச் செய்யும்.. இப்படி ஒரேவிதமான ஒன்லைனை கொண்டு இருந்தாலும் மரியானில் மேற்சொன்ன பத்தியில் அமைந்திருக்கும் இது போன்ற குறைகளை கவனமாக தவிர்த்திருப்பதே ”என்னமோ நடக்குது” திரைப்படத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன்…

ஹீரோவாக வரும் விஜய் வசந்த், முதலில் செய்யும் பணி போஸ்டர் ஒட்டுவது, அடுத்து தன் காதலி மஹிமாவின் பணத் தேவையை பூர்த்தி செய்ய இவர் எடுக்கும் இரண்டாவது தொழில் வங்கியில் டெபாஷிட் ஆகும் பொதுமக்களின் பணத்தை ஒரே ஒரு நாள் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் கையாடல் செய்து, வட்டிக்கு விட்டு பிழைக்கும் கும்பலுக்கு துணை போகும் தொழில். இந்த தொழில் சார்ந்த விவரணைகள் மற்றும் இந்த கும்பலின் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்பது போன்ற செய்திகள் ஓரளவுக்காவது பார்வையாளருக்கு விளக்கப்பட்டு இருக்கும்.. மேலும் எப்படிப் பார்த்தாலும் எல்லா பார்வையாளர்களும் ஏதோ ஒருவிதத்தில் வங்கியோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதால், இந்தப் பிரச்சனை அவர்களை கதைக்குள் வெகு எளிதாக இழுத்து விடும்.. மேலும் இது தவிர்த்து மையக் கதை நாயகன் நாயகி இருவர் மீது மட்டும் தனித்து இயங்காது. பணத்தை கையாடல் செய்யும் கும்பலின் தலைவனாக வரும் ரஹ்மான், ரஹ்மானுக்கு டார்ச்சர் கொடுக்கும் தலைவியாக வரும் சுகன்யா, ரஹ்மானின் பால்ய விரோதி பிரபு, இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் வக்கீல் தம்பி ராமையா, இவ்வளவு ஏன்..? விஜய் வசந்தின் அம்மாவாக வரும் சரண்யா என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரின் மீது சரிசமமாக திரைக்கதை பயணிக்கும்.. எல்லா கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் பங்கு இருக்கும்.. அதுவே திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்றிவிடுகிறது… இதுவே இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம்..


எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் வருவதைப் போல் சின்ன சின்ன சுவாரஸ்ய முடிச்சுகளுடன் படக்காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன.. உதாரணமாக பணத்தை விநியோகிக்க விஜய் வசந்த் கொண்டு செல்லும் போது அவரிடம் இருந்து மற்றொரு கும்பல் அந்தப் பணத்தை கொள்ளை அடித்துச் செல்லும் காட்சியையும், அந்தப் பெண்மணியை விஜய் வசந்த் மறுபடியும் மடக்கிப் பிடிக்கும் காட்சியையும் கூறலாம்.. இதுபோலத்தான் கடைசிக் காட்சியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அந்த துப்பாக்கி மேட்டரும்.. ஆனாலும் சில இடங்களில் திரைக்கதை வேண்டுமென்றே ஆடியன்ஸை ஏமாற்றும் நோக்கில் இஷ்டத்து வளைக்கப்பட்டு இருப்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.. குறிப்பாக முதலிலேயே அந்த ஆம்புலன்ஸ் வேனில் களவாடப்பட்ட பணம் இருப்பதை பார்த்துவிடும் விஜய் வசந்த், அதை தன் நண்பனிடம் தெரிவிக்காமல், க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து தெரிவிக்க வேண்டிய அவசியம் திரைக்கதையில் இல்லை.. இத்தனைக்கும் அந்த நண்பன் வேறு, ”கையில் பணமே இல்லாமல் ஏன் அவர்களை வரச் சொல்கிறாய்..?” என்று கேள்வி வேறு கேட்பான்.. அதற்கும் விஜய் வசந்த பொய் சொல்லுவார்… இதை ஆடியன்ஸை ஏமாற்றும் போக்கு என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்… இதே போல் இரண்டு மூன்று இடங்களில் இதே பிரச்சனை இருக்கும்..


நடிப்பு என்று பார்த்தால் பர்ஸ்ட் மார்க் வழக்கம் போல் சரண்யாவுக்கு தான்.. விஜய் வசந்த் நன்றாகத்தான் நடிக்கிறார்… ஆனாலும் அந்த முகத்தில் ஏதோ ஒன்று மிஸ்சிங் என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. நாயகி மஹிமா கொஞ்ச காலமேனும் கண்டிப்பாக நிலைத்து நிற்பார் என்று நம்பலாம்… பிரபுவும் ரஹ்மானும் வழக்கம் போல் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள்… ஆனால் பிரபுவுக்கும் ஒரு பாட்டு வைத்து ஆடியன்ஸின் பல்ஸை பதம் பார்த்திருக்க வேண்டாம்..

இதனைத் தவிர்த்து குறைகள் என்று பார்த்தால், வழக்கம் போல் காதல் காட்சிகளில் இருக்கும் ரசனையற்ற உணர்வைச் சொல்லலாம்… அதுபோல் சரண்யா மற்றும் விஜய் வசந்த் இருவருக்கும் இடையே பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி கதாபாத்திரம் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்கின்ற குழப்பமும் ஏற்படுகிறது.. படத்திற்கு பிரேம்ஜி அமரனின் இசை ஒரு மிகப்பெரிய மைனஸ்… சம்பந்தமே இல்லாமல் அது ஏதேதோ சத்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.. அது போலத்தான் பாடல்களும்.. ஆனால் சமீபகாலமாக ஒரு மாற்றம் நிகழ்ந்து வருவதை கவனித்து வருகிறேன்… பாடல் வரும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்கள் அநியாயத்து கோபம் கொண்டு கத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக தெரிகிறது.. மாற்றங்கள் வரட்டும்.. இயக்குநர் ராஜபாண்டிக்கு இது முதல் படம்.. முதல் படத்திலேயே பெரும்பாலான விசயங்களில் கவர்ந்திருக்கிறார்.. இவரது அடுத்த படைப்புகள் இதைவிட சிறப்பான அளவில் மெச்சும்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.. மொத்தத்தில் ”என்னமோ நடக்குது…” உங்களை பெரிதாக ஏமாற்றாது என்பதால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..

Wednesday 14 May 2014

யாமிருக்க பயமே:

ஒரு மக்கள் கூட்டமே ஒருவனைப் பார்த்தோ அல்லது ஏதோ ஒன்றைப் பார்த்தோ பயப்படுவது என்பது எவ்வளவு அவமானகரமான காரியம்…. ஆனால் இப்படி பயப்படுவதையே ஒரு ரசனையாக மாற்றிக் காட்ட பேய் படங்களால் மட்டுமே முடியும்…. இது தவிர்த்து சில ஆபத்தான அபாயகரமான விளையாட்டுகளிலும் இந்த பயத்தின் ரசனைகளை உணர முடியும்… எனக்கு விவரம் தெரிந்து, அம்மாவின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு, கண்களை அரை இருட்டில் அரை வட்டமாக திறந்து “அதே கண்கள்” திரைப்படம் பார்த்து பயத்தின் ரசனையை உணர்ந்த கணங்களும், ஜெயிண்ட் வீல் ராட்டினத்தில் உயரப் பறந்தபடி ஊருக்கே கேட்கும் படி எழுப்பிய மரணத்தின் பயம் சார்ந்த ஓலங்களும் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றது… பொதுவாக அதீத சத்தங்கள் மற்றும் கூச்சலுடன் படம் பார்ப்பதென்பது எனக்கு பிடிக்காத ஒன்று.. அதற்கு இந்த பேய் படங்கள் மட்டும் விதிவிலக்கு.. அருகில் அமர்ந்திருக்கும் மக்களின் அற்புதமான ஒப்பனை இல்லாத உணர்வுகளையும் உடல்மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு இது போன்ற பேய் படங்களை பார்ப்பதென்பது ஒரு சுகானுபவம் தான்…. இது போன்ற படங்கள் பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது….. ஒரு கேள்வி…? மகிழ்வான பயம் என்று ஒன்று உண்டா… என்ன..? ஆனால் படம் பார்க்கும் போது இருந்த அந்த மகிழ்வான பயம்…. யாரும் இல்லாத அறையில் நடுநிசியில் நாய்களின் ஓலங்களுக்கு இடையில் இந்தப் பதிவை எழுதும் போது ஏனோ இல்லை…. அடிவயிற்றில் ஒரு அச்சப்பந்து உருண்டு கொண்டிருப்பதால் அந்த மகிழ்வான பயத்தில் மகிழ்வு மட்டும் தற்சமயம் இல்லை…


கதையென்ன….”? திரைக்கதையென்ன…? கதாபாத்திரங்களில் என்ன வித்தியாசம் செய்திருக்கிறார்கள் இது போன்ற கேள்விகளுடன் அணுக வேண்டிய தேவை இத்திரைப்படங்களுக்கு இல்லை… ஏனென்றால் இவர்கள் இதில் எல்லாமே கோட்டை விட்டாலும் கூட படத்தை வெற்றிப்படமாக மாற்றுவதற்கான வேறொரு அம்சத்தை இத்திரைப்படங்கள் கொண்டிருக்கின்றன…. அந்த அம்சம் என்ன என்கிறீர்களா…?

சரி… கதைக்கு வருவோம்…. ஒரு பேய் படத்தில் கதையை விட ஏன்..? பேயை விட எது மிகமிக முக்கியமானது என்று இந்த யாமிருக்க பயமே குழுவினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.. எது என்று கேட்கிறீர்களா…? இசை தான்…. ஏனென்றால் இந்த இசை தான் பேய் இல்லாத இடங்களில் கூட பேய் இருக்குமோ என்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது…. அதுதான் படத்துக்கான மிக முக்கிய வெற்றி….


படம் தொடங்கி முதல் ஒரு இருபது நிமிடங்களுக்கு படத்தின் கதை தொய்வாக சோம்பிப் போய் தெரிந்தாலும், எப்போது கிருஷ்ணாவும் ரூபா மஞ்சரியும் சேர்ந்து கொள்ளிமலையில் இருக்கும் அந்த இடத்தை புதுப்பித்து ஹோட்டல் தொடங்குகிறார்களே அந்த இடத்திலேயே படம் பரபரக்கத் தொடங்கிவிடுகிறது… படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்திருப்பது கருணாவின் கதாபாத்திரத்தின் ஸ்கெட்ச்…. இந்த திரைப்படத்தை எப்படி முடிக்கப் போகிறார்கள்  என்று யோசித்துக் கொண்டிருக்க… மந்திரங்கள், மாந்திரீகங்கள், மந்திரவாதி இப்படி யாருமே இல்லாமல் பழைய பார்முலாவில் இருந்து விலகி, திரைப்படத்தை முடித்திருக்கும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது…..


யாரோ ஒருவர் ஓவியா படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் என்று கொளுத்திப் போட்டுவிட்டார்….. பாவம் அவருக்கு படுகவர்ச்சி என்பதற்கு அர்த்தமே தெரியவில்லை போலும் என்று படம் பார்க்கும் போது எண்ணிக் கொண்டேன்.. ஆங்காங்கே வயது வந்தோருக்கான வசனங்களும் வந்து போகின்றன…. ஆனால் அவையெல்லாம் வயது வந்தோருக்கு மட்டும் தான் புரியும் என்பதால் அதிகமாக கலங்கத் தேவையில்லை…. , சில பதிவுகளில் மயில்சாமி வந்து செல்லும் காட்சிகள் படு அமர்களமாக இருப்பதாக சொல்லிக் கொண்டார்கள்…. எனக்கு ஏனோ அது சராசரியான காட்சியாகவே தென்பட்டது….

படத்தி\ல் ஹீரோ கிருஷ்ணாவை மிஞ்சி அதிகமாக ஜொலிப்பவர் கருணா தான்…. இவர் கண்ணாடியைப் பார்க்கமாட்டேன் என்பதற்கு சொல்லும் அந்த காரணக்கதை ஒரு மொக்கைகதை என்றாலும்….. பெரும்பாலான இதுபோன்ற பயங்களுக்கு இது போன்ற மொக்கைக் கதைகள் தான் காரணமாக இருக்கும் என்பதால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை… ரூபா மஞ்சரி கருணாவை தானும் பார்த்தது போல் இருக்கிறது என்று சொல்லி மாட்டிக் கொள்ளும் இடம் தமிழ் சினிமாவுக்கு புதிது…. இவரை கவர்ச்சியில் மட்டுமே முந்த முயலுகிறார் ஓவியா… இவர்கள் இருவரும் போடும் சக்களத்தி சண்டைகள் கதையை இழுக்க மட்டுமே பயன்பட்டிருக்கின்றன.. கிருஷ்ணாவுக்கு இது கண்டிப்பாக பேர் சொல்லிக் கொள்வது போன்ற படம் தான்… நடிப்பில் முந்தைக்கு எவ்வளவோ தேறியிருக்கிறார்… தன் ஹோட்டலுக்கு வந்து தங்கிச் செல்பவர்களுக்கு எதுவுமே ஆகிவிடக் கூடாது என்பதற்காக இரவு பகலாக காவல் இருப்பதும், தன் சட்டையில் வாந்தி எடுத்துச் செல்லுவது ரூபா மஞ்சரி அவள் முகத்தை மிகவும் க்ளோசப்பில் காட்டியதால் தான் என்று அவரிடம் முறைப்பதுமாக செம்மையாக ஸ்கோர் செய்கிறார்… அதே போலத்தான் ரூபாவும் காதலனிடம் இருந்து கைகழுவிச் செல்ல முற்படுவது, அவன் ஜெயிலில் இருப்பதாக எண்ணிக் கொண்டு வீட்டை விற்றுவிட்டு செட்டிலாக திட்டம் தீட்டுவது என்று கலகலக்க வைக்கிறார்…



படத்தின் தலைப்பில் ஏன் பயமேன் என்று முடிக்காமல், பயமே என்று முடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை… ஒரு வேளை பேய் நம்பிக்கையை போல் இது வேறெதுவும் நம்பிக்கையாக இருக்குமா..? என்றும் தெரியவில்லை.. படத்தில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது…. நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள். ஏகத்துக்கு இருக்கின்றன.. ஆனால் பேய் என்பதே முற்றிலும் நம்பகத்தன்மை கொள்ளமுடியாத ஒரு விசயம் தான் என்பதால் அந்த தவறுகளை ஜீரணித்துக் கொள்ளலாம்… பிரசாத்தின் இசை வருடுகின்ற எல்லா இடங்களிலும் பேய் நம்மை ஆட்கொள்ளும் உணர்வு தோன்றுவதே அவரது இசைக்கு கிடைத்த வெற்றி.… அதுபோல் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பயங்கர ஷார்ப்… இயக்குநர் டி.கேவுக்கு இது முதல் படமாம்… கதை மற்றும் திரைக்கதையில் இருக்கின்ற பலவீனத்தை பேய் பலத்தைக் கொண்டு ஈடு செய்திருக்கிறார்… ஆனால் மேக்கிங்கில் செமத்தியாக மிரட்டியிருக்கிறார்… அடுத்து வரும் இவரது படங்களை ஓரளவுக்காவது எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.. மொத்தத்தில் ”யாமிருக்க பயமே” திரைப்படம் ஒரு இரண்டு மணிநேர கலகலப்புக்கு கேரண்டி என்பதால் ஒரு முறை நிச்சயமாக தைரியமாக நம்பிப் போகலாம்…

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்:

காமெடியில் முத்திரை பதித்த கதாநாயகர்கள் எல்லாம், தங்களை ஆதிக்க சக்தியாக மாற்றும் முனைப்புடன் ஆக்சன் திரைப்படங்களின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பத் தொடங்கி இருக்கிறார்கள் போலும்.. கதாநாயகனாக சந்தானம், இயக்குநராக மற்றொரு காமெடி நடிகர் ஸ்ரீநாத், கதையோ தெலுங்கின் வெற்றிப்பட இயக்குநர் இராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த மரியாதை ராமன் திரைப்படத்தின் ரீமேக்… இப்படி ஒவ்வொரு விசயமுமே ஒவ்வாத விசயமாகவே இருந்தது… இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஓரளவுக்கு “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தில் பாடல்களில் ஈர்த்தவர் என்பதால், வபுஆ பாடலைக் கேட்கப் போய் அதுவும் ஆபத்தாகவே முடிந்தது… இதில் ஹீரோ சந்தானத்துக்கு ஓபனிங்க் ஷாங்க் வேறு இருக்கிறது என்று தெரிந்தவுடன் ஒரேயடியாக இந்தப் படத்துக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்றே நினைத்து இருந்தேன்.


ஆனால், படத்தின் கதையைப் பற்றி தெரிந்தவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன ஈர்ப்பு வந்தது.. மேலும் இயக்குநர் இராஜமெளலியின் திரைக்கதை மீது எனக்கு ஒரு சின்ன எதிர்பார்ப்பும் உண்டு.. இதனால் என் முடிவை மாற்றிக் கொள்ள துணிந்தேன்.. எதிர்பார்த்தது போலவே படத்தின் கதைக்கரு கமர்ஷியல் சினிமாவுக்கு மிகவும் பொருந்தக்கூடிய சுவாரஷ்யமான ஒன் லைன் தான்… “ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஒரு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.. அந்த வீட்டில் இருப்பவர்கள் யார் என்றால், அந்த வீட்டை விட்டு வெளியே வந்தால் இவனை யார் கொல்ல காத்திருக்கிறார்களோ…? அதே நபர்கள் தான்” இப்படி சுவாரஸ்யமான ஒரு நகைமுரண் உள்ள ஒன்லைன்… ஆனால் இந்த ஒன்லைனரை பயன்படுத்தி படக்குழுவினர் உண்டாக்கி இருக்கின்ற திரைக்கதையில் தான் நகைப்பும் இல்லாமல், திரைக்கதையில் நல்ல முரணும் இல்லாமல் தேமே என்று நிற்கிறது திரைப்படம்..

இத்திரைப்படத்தின் ஒரிஜினல் வடிவமான தெலுங்கு திரைப்படம் “மரியாதை இராமன் (2010)னை நான் இன்னும் பார்க்கவில்லை.. அதிலும் இதே மாதிரி காட்சியமைப்புகளில் சொதப்பி இருந்தார்களா என்று தெரியவில்லை… ஆனால் தமிழில் தான் கொஞ்சம் சொதப்பி எடுத்திருக்கிறார்கள்… சந்தானத்தின் வழக்கமான எதுகை மோனை வகையறா காமெடியை வைத்து முதல்பாதியில் ஓரளவுக்கு ஒப்பேத்தி இருக்கிறார்கள்… ஆனால் அந்தக் காமெடிக்கே ஓரிரு இடங்களில் அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வருவதும் உண்மை… ஆனால் அந்தக் காமெடிகள் என்னென்ன என்று உங்களுக்கு விலாவாரியாக விளக்க முனைவதற்கு முன்பே, அதன் ஆயுள் வழக்கம் போல் குறைந்து, வழக்கம் போல் மறந்தும் போய்விடுகின்றன..

சக்தி என்னும் இளைஞராக சந்தானம்…. சரக்கைப் பற்றிப் பேசாத, சரக்கடிக்காத இந்த சக்தி கதாபாத்திரத்திற்காகவே சத்தியமாக சந்தானத்துக்கு ஒரு சல்யூட் வைக்கலாம்… அரவங்காடு என்னும் சிறு கிராமத்துக்கு அந்த ரயிலில் பயணிக்கும் போது சித்தார்த் விபின் கேங்குடன் சேர்ந்து கொண்டு இவர் அடிக்கும் லூட்டிகள் மட்டும் தான் படத்தில் மொத்தத்துக்கும் உயிர்ப்பான நொடிகள்.. இது தவிர்த்து அந்த சமையல்காரனிடம் இவர் அடிக்கும் சில நையாண்டி கேலிகளும் ரசிக்க வைக்கின்றன… பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விடிவி கணேஷ் சந்தானம் கூட்டணியின் காமெடி க்ளிக் ஆகாமல் போனதும் ஒரு பெரும் குறை.. ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்லும் பவர் ஸ்டார் கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்பட்ட அந்த ஒரு வரி டயலாக்கின் பஞ்ச் ரொம்பவே அதிகம்…


நாயகி வானதியாக அஸ்னா சவேரி… இவரது கதாபாத்திரம் ஒரு குழப்பமான கதாபாத்திரம்.. தன் மாமனாக வரும் அந்த இராஜா கதாபாத்திரத்துடனும் வழிந்து, சந்தானம் அவளை காதலிக்கிறார் என்று அந்த இராஜா கதாபாத்திரம் சொல்லும் இடத்திலும் வழிந்து, தனக்கும் வானதிக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தச் சொல்லி இராஜா கேட்கும் போதும் வழிந்து, க்ளைமாக்ஸ் நெறுங்கும் கட்டத்தில் சந்தானத்தை காதலிப்பதாக இவர் வந்து நிற்கும் போது, அந்தக் காதலின் மீது நமக்கு வர வேண்டிய உணர்வுக்கு பதிலாக இப்படி ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று நமக்குத் தான் அசடு வழிகிறது…

அந்த வீட்டுக்குள் தெரியாத்தனமாக போய் சந்தானம் மாட்டிக் கொள்ளும் இடம் வரை இருந்த சுவாரஸ்யம் அதற்குப் பின்னர் டமால்…. அந்த வீட்டிலேயே தன்னை வெளியேறாமல் இருத்திக் கொள்வதற்காக சந்தானம் எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம் எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல் நகைச்சுவையும் இல்லாமல் பெயருக்கு ஏதோ ஒப்பேத்தியதைப் போல் இருக்கிறது… இரண்டு குடும்பத்துக்கும் இடையேயான பகை எதனால் என்பதை சொல்லாமலே விட்டிருப்பது புதுமையாக இருந்தாலும், அந்த பகைக்கான பிண்ணனி நமக்குள் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை அது ஏற்படுத்த தவறுவதும் உண்மை… மேலும் இப்படிப்பட்ட ஒரு பகையை இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்க… அதை இவர்கள் தீர்த்திருக்கும் விதம் மிகமிக மோசம்…. சமீபமாக வந்த படங்களில் மிக மோசமான ஒரு க்ளைமாக்ஸ் கொண்ட படம் கண்டிப்பாக இதுவாகத் தான் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்… இது தவிர்த்து அந்த சைக்கிளின் பிண்ணனியில் வரக்கூடிய அந்த சுயசரிதை புலம்பல்கள் எல்லாம் மீளாத சலிப்பையும் எரிச்சலையும் கொடுக்கின்றன…


சித்தார்த் விபினின் இசையில் பெரிதாக பாடல்கள் ஒன்றுகூட தேறவில்லை என்றே தோன்றுகிறது… பிண்ணனி இசையில் ஒரு ஆக்சன் திரைப்படத்துக்கு தேவையான டெம்போவை வசப்படுத்தியிருக்கிறார்… அதற்காக மட்டும் பாராட்டுக்கள்… சிங்கராயராக வரும் நாகிநீடு பீமாவாக வரும் ரவிப்பிரகாஷ் இருவரது நடிப்பும் ஈர்க்கிறது…. ஒளிப்பதிவாளர் சக்தியின் ஒளிவண்ணத்தில் அரவங்காடு அழகு… நகைச்சுவையில் கோலோச்சும் நடிகராக இருக்கும் சந்தானத்துக்கு இயல்பான நடிப்பு என்பது இயலாமையான ஒன்றாக இருக்கிறதோ என்று பல காட்சிகளில் ஐயுறத் தோன்றுகிறது… உயிர் போய்விடுமோ என்று பயந்து நடுங்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் இவர் பயப்படுவதைப் பார்க்கும் போது நமக்குத்தான் பயமாக இருக்கிறது…

படத்தின் கதைக்கு இந்த தலைப்பு ஓகே தான்… ஆனால் இவர்கள் திரைக்கதையில் வச்சிருக்கும் காட்சியமைப்புக்கும் தலைப்புக்கும் தான் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை… இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இதைவிட ஒரு சிறப்பான திரைப்படத்தைக் கொடுத்து இருக்கலாம்…. மொத்தத்தில் முதல் பாதி ஆங்காங்கே வரும் சந்தானத்தின் காமெடியால் உங்கள் மனதை கொஞ்சம் இலகுவாக்கும்… இரண்டாம் பாதி நம்மை முட்டாளாக நினைத்து ஒருவன் இஷ்டத்துகு கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்.. நாமும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே என்று உங்கள் மேல் உங்களையே கோபம் கொள்ளச் செய்து உங்கள் மனதை கரடு முரடாக மாற்றிவிடும்…



Friday 2 May 2014

தெனாலிராமன்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவின் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம்.. இத்திரைப்படம் குழந்தைகளை குறி வைத்தே எடுக்கப்பட்டிருப்பதால், இவர்களுடைய நோக்கம் குழந்தைகளை குதூகலப்படுத்துவது என்பது தெளிவாகவே தெரிகிறது.. எனவே இதிலும் போய் நம் கூர்மையான மூக்கை உள்ளே நுழைத்து கதை, திரைக்கதை போன்ற வஸ்துக்களில் உள்ள ஓட்டைகளை குத்திக் குடைய எனக்கு விருப்பமில்லை.. சரி.. இந்த தெனாலிராமன் குழந்தைகளை சந்தோசப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறானா என்று கேட்டால் ஓரளவுக்கு என்று மட்டுமே சொல்ல முடியும்..


கிருஷ்ண தேவராயரின் அரசவையில் இருந்த மதிநுட்பம் வாய்ந்த அமைச்சரிகளில் ஒருவராகவும், அரசவை விகடகவியாகவும் இருந்து பெருமை பெற்றவன் தெனாலிராமன்.. நம் தமிழ் கலாச்சாரத்தில் தமிழில் வெளிவரும் கதைப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஆதர்சமான கதாபாத்திரமாக மாறிப் போகும் வெகுசில கதாபாத்திரங்களில் தெனாலிராமனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.. அவனுடைய கூர்மையான மதிநுட்பத்தால் அவன் எப்படி தனக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்தான்… தனது மேலான மதி நுட்பத்தால் அரசன் செய்யும் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் இருந்து மக்களை காப்பாற்றியதோடு அரசனையும் எப்படி நல்வழிப்படுத்தினான் என்பதை அகமகிழ்வோடு வாசித்து வளர்ந்து வந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.. கதைகளின் வாயிலாகவே அப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை குழந்தைகளின் மனதில் உண்டாக்கிய விகடகவி தெனாலிராமனைப் பற்றிய திரைப்படம் தான் இந்த தெனாலிராமன் என்று முழுவதுமாக சொல்லவும் முடியாமல் ஏகப்பட்ட தடைகள்… ஏனென்றால் படத்தின் துவக்கத்திலேயே டைட்டில் கார்ட்டில் போட்டுவிடுகிறார்கள்.. இது தெனாலிராமனின் வாழ்க்கை வரலாறோ, வாழ்க்கையில் நடந்த அத்தியாயங்களோ அல்ல… தெனாலிராமன் என்ற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு புனையப்பட்ட புனைவுக் கதை என்று..

அப்படி புனைய வேண்டிய அவசியம் தான் என்ன..? எந்தவொரு குழந்தையும் தெனாலிராமனின் கதையைப் படிக்கும் போது அவரை ஒரு தெலுங்கராகவோ அல்லது தமிழராகவோ கருதிக் கொண்டு படித்து களிப்புற்றதில்லை.. நல்ல சிந்தனைகளைப் போதிக்கும் மனிதனாகவும், தங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவனாகவும் தான் அவனை ஒவ்வொரு குழந்தையுமே பார்த்தன.. ஆனால் குழந்தமையில் இருந்து சிதைந்து போய் பகுத்தறிவு பட்ட மனது அவனை எப்படியெல்லா பிரித்துப் பார்க்க முடியுமோ அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து, போராட்டங்களை எழுப்பச் செய்து பின்பு அதனையும் சமரசம் செய்து இத்திரைப்படத்தை ஒரு புனைவாக வெளிவிட்டிருக்கிறது…

அப்படி என்ன அவர்கள் புனைந்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா…? விகட நகரம் என்று ஏதோ ஒரு நகரம் இருக்கிறதாம்.. அதற்கு ஒரு அரசர் (அவர் கிருஷ்ண தேவராயர் அல்லர்..) அவருக்கு 16 மனைவிகள்.. 52 குழந்தைகள்.. மக்களின் மீது அக்கறை உள்ளவராக இருந்தாலும் இந்த மன்னர் ஒரு ஜாலி பேர்வழி.. இதனால் நல்ல நல்ல சட்டங்களைப் போட்டுவிட்டு, அதை செயல்படுத்தும் பொறுப்பை தன்னிடம் இருக்கும் ஒன்பது நவரத்தின அமைச்சர்களிடம் விட்டுவிட்டு இவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்.. இதைப் பயன்படுத்தி எட்டு அமைச்சர்களும் சீன தேசத்து வியாபாரிகளுக்கு வணிகம் செய்ய கம்பளம் விரித்து வரவேற்க.. அதை அவர்களுக்குள் இருக்கும் ஒற்றை அமைச்சர் எதிர்க்க.. அவரை காலி செய்கிறது சீன கும்பல். காலியான அமைச்சரின் இடத்துக்கு வருகிறான் தெனாலிராமன்.. இவன் கிருஷ்ணதேவ ராயரின் அரசவை விகடகவி தெனாலிராமன் இல்லை.. இவர்கள் புனைந்திருக்கும் தெனாலிராமன்.. இவனும் ராயரின் தெனாலிராமன் செய்த அதே மதிநுட்பமான செயல்களை செய்து அந்த அரசரின் (எந்த அரசர் என்று தெரியவில்லை..) பாராட்டைப் பெறுகிறான்.. இவன் சீன வணிகத்தை நம் நாட்டுக்குள் கொண்டு வர தடையாக இருப்பானோ என்று மற்ற எட்டு அமைச்சர்களும் கருதி, அவனை வெளியேற்ற திட்டம் தீட்ட.. அவன் ஒரு புரட்சியாளன்.. மன்னனை கொல்ல வந்தவன் என்று தெரியவருகிறது… (ஆனால் மன்னரும் தெனாலிராமனும் அண்ணன் தம்பி இல்லை… இருந்தால் அது அப்படியே இம்சை அரசனாகிவிடுமே..) இதனையே பயன்படுத்தி தெனாலிராமனை அரசவையில் இருந்து வெளியேற்றி சீனர்களின் வணிகத்தை உள்ளே கொண்டு வருகிறார்கள்… அதற்குப் பின் தெனாலிராமன் என்ன ஆனான்…? சீன வணிகத்தால் விகட நகரம் என்ன ஆனது…? அந்த மன்னர் என்ன ஆனார் என்பது மீதிக் கதை..


படத்தில் மொத்தத்துக்கு வசீகரிக்கும் காட்சிகள் என்றால், அது தெனாலிராமனின் வாழ்க்கையில் நடந்த அத்தியாயங்களை காட்சிப்படுத்தி இருக்கும் இடங்கள் மட்டும் தான்… திருடர்களை மாட்ட வைக்க கிணறு தோண்ட விடுவது, அரசவை காவலாளிக்கு சவுக்கடி வாங்கித் தருவது, எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி சிறைவாசம் செல்வது, பானைக்குள் யானையை வரவைப்பது, அரசனின் தந்தையை கனவில் வரவைப்பது இப்படி தெனாலிராமன் கதைகளில் படித்த சுவாரஸ்யமான தகவல்களை ஆங்காங்கே சிறப்பாக கோர்த்திருக்கிறார்கள்.. கதை வடிவில் படித்ததை காட்சி வடிவில் பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது.. இதைத் தவிர்த்து மிகச்சிறப்பான அம்சம் என்று சொல்வதற்கு படத்தில் வேறு ஏதுமே இல்லாதது ஒரு பெரும் குறை..

மன்னராகவும் தெனாலிராமனாகவும் இரண்டு வேடத்தில் வடிவேலு.. ஒரு மூன்று ஆண்டு கால இடைவெளி ஒரு கலைஞனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது… முன்னர் இருந்த அந்த சுறுசுறுப்பும் உடல்மொழியில் இருந்த நளினமும் கொஞ்சம் குறைந்தார் போல் தெரிகிறது.. அதிகமாக எடை போட்டு இருக்கிறார்… டும் டும் என்று மன்னர் முடிக்கின்ற இடங்கள் ஆரம்பத்தில் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் இறுதிக்காட்சி வரும் போதுதான் அதைக் கொஞ்சமேனும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நாம் வருகிறோம்.. ஒரிஜினல் தெனாலிராமனின் அத்தியாயங்கள் தவிர்த்து சிரிப்பு வருவதற்கான கேரண்டி உள்ள இடங்கள் மிகவும் குறைவு.. அதைத் தவிர்க்க ஆங்காங்கே அரச வடிவேலு அஷ்டகோணலாக தன் முகத்தை மாற்றி கிச்சுகிச்சு மூட்டுகிறார்.. பெரிதாக சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது…


மன்னரின் மகளாக, தெனாலிராமனின் காதலியாக மீனாட்சி தீக்சித்… பெரும்பாலும் தன் மார்பகங்களின் விளிம்புகளையும், இடையின் நெளிவுகளையும் காட்டிக் கொண்டு காட்சி தருகிறார்… ஆனாலும் இது குழந்தைகள் படம்தான்… குழந்தைகள் அதையா பார்க்கப் போகிறார்கள்… அழகான வடிவேலுவைத் தானே பார்க்கப் போகிறார்கள்… அதனால் இதற்கு U சர்ட்டிபிகேட் என்று உத்தரவு இட்டிருக்கும் இந்த சென்சார் போர்ட்டை புரிந்து கொள்வது சிக்கலான ஒன்று தான்… மணிரத்னம் தனது உரையாடல் புத்தகத்தில் சொல்லி இருப்பார்… அவரது மெளன ராகம் படத்திற்காக சென்சார் போர்ட்டிடம் நின்ற போது.. ஒரு தமிழ்பெண் விவாகரத்து கேட்கிறாள்.. இதற்கு எப்படி U சர்ட்டிபிகேட் தரமுடியும் என்று கேட்டார்களாம்.. இவர்களைப் பொறுத்தவரை ரத்தத்தைக் காட்டக்கூடாது… கொலை தற்கொலை சிந்தனைகள் இருக்கக்கூடாது, பெண்களை இழிவுபடுத்துவது போல் பேசக் கூடாது.. ஆனால் அவளது முன்னழகு பின்னழகு இடையழகு என்று சுற்றிக் சுற்றிக் காட்டிக் கொள்ளலாம்… இவர்களது பாணியில் பார்த்தால் நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் ஒவ்வொரு தினசரிகளுமே A சான்றிதழ் பெற்றதுதான்…. இன்றைய தினசரி உட்பட.. குண்டுவெடிப்பின் ரத்தக்கறையோடுதானே வந்திருக்கிறது… சரி அதைவிடுங்கள்… மீனாட்சி தீக்சித் பற்றி…. ம்ம்ம்… வஞ்சகம் இல்லாமல் காட்டியிருக்கிறார்… எல்லோரையு வஞ்சிக்கும் அழகிதான்…

இவர்கள் தவிர்த்து மனோபாலா, பாலாசிங், ராதாரவி, ஜி.எம்.குமார், ராஜேஷ், தேவதர்ஷினி என ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம் திரையில்.. ராம்நாத்ஷெட்டியின் ஒளிப்பதிவில் எல்லோரும் பாராட்டும் அந்த பறந்து செல்லும் புறாவின் பிண்ணனியில் வடிவேலு நடந்து வரும் காட்சி எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.. ஆனால் சிஜியில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்… லாங் ஷாட்டில் இருந்து அந்த அரண்மனையை காட்டும் காட்சியில் எல்லாம் காவலாளிகள் மனிதர்கள் அல்ல என்பது அப்பட்டமாக தெரிகிறது… டி.இமானின் இசையில் ரம்ம்ப்ப்பா.. பாடல் மட்டும் கேட்க நன்றாக இருந்தது… இயக்குநர் தயாளனுக்கு இது இரண்டாவது படமாம்.. முதல் படம் என்னவென்றே பலருக்கும் தெரியவில்லை… தெனாலிராமனின் காமெடி அத்தியாயங்களை வைத்து தப்பித்திருக்கிறார்.. இவரது தனித்திறமை என்றோ முத்திரை என்றோ சொல்வதற்கு கதை திரைக்கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை… ஆனால் இயக்கத்தைப் பாராட்டலாம்…


மொத்தத்தில் தெனாலிராமன் இன்றைய தேதிக்கான குழந்தைகள் படம்.. இன்னும் மெனக்கெட்டிருந்தால் இதைவிட சிறப்பான படமாக வந்திருக்க வாய்ப்பிருக்கிறது, இருந்தும் தவறவிட்டிருக்கிறார்கள்… சிரிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், ஒரிஜினல் தெனாலிராமனின் அங்கதச் சுவை அங்கங்களை திரைவடிவமாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்த முதல் முயற்சிக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…