Sunday 30 June 2013

அன்னக்கொடி:

உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜாவின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் படம். இந்தமுறையும் கிராமத்து மண் வாசனையோடு வந்திருக்கிறேன் என்று சொல்லியே படத்தை துவங்குகிறார். இவருடைய முந்தைய படமான பொம்மலாட்டம் எனக்கு பிடித்திருந்தது. அதில் கிராமத்துக்கான அழகியலோ மண் வாசனையோ, சொந்த அடையாளங்களோ இல்லாமல் இருந்தாலும், ஒரு கலைஞனுக்கு உள்ள மனக்கசப்புகளை மிக நேர்த்தியான திரைக்கதையோடு சொல்லிய படம் பொம்மலாட்டம். ஆனால் இந்த அன்னக்கொடியோ மண் வாசனையோடு, கிராமத்து அழகியலோடு சொந்த அடையாளங்களை சுமந்து கொண்டு வந்திருந்தாலும் ”காதல் கைகூடுமா..? இல்லையா…?” என்னும் கருவையே பாடுபொருளாகக் கொண்டு பழமையான பாழடைந்த கட்டிடங்களிலேயே படர முனைவதால் அன்னக்கொடி வலுவிழக்கிறது…


கதை இதுதான். அன்னக்கொடி என்ற ஆடு மேய்க்கும் பெண்ணுக்கும், கொடி வீரன் என்ற ஆடு மேய்க்கும் இளைஞனுக்கும் காதல். அன்னக்கொடி மீது கொண்ட விரோதத்தால் அவளை பழிவாங்கும் எண்ணத்தில் அவளது காதலனை கம்பி எண்ண வைத்து, அன்னக்கொடியை திருமணம் செய்து கொள்கிறான் பண்ணையார் பாவனையுடன் உலவி வரும் சடையன் என்னும் வில்லன். விடுதலையாகி வந்த காதலன் என்ன செய்தான்…? அவர்கள் காதல் என்னவானது என்பது மீதிக்கதை…

அன்னக்கொடியாக ராதாவின் மகள் கார்த்திகா. முந்தைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இயக்குநர் பாரதிராஜாவின் புண்ணியத்தால் சொல்லிக் கொள்ளும்படி நடித்திருக்கிறார். தன் செருப்பை எடுத்துக் கொண்டு ஓடும் கொடிவீரனை ஒவ்வொரு பெயராக சொல்லித் திட்டிக் கொண்டே துரத்தும் போது, அச்சு அசலாக நம் ஊர் பக்கம் இருக்கும் ஆடு மேய்க்கும் பெண்ணை நினைவுபடுத்துகிறார். காதலனின் கவனத்தை திசை திருப்ப ஆடு போல கத்துவதும், அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டபிறகு என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் பரிதாபமாக ஆடு மாதிரி கத்துவதும்… தன் சேலையை உருவிப் போட்டுவிட்டு, பாயில் அமர்ந்து கொண்டு தன் கணவன் சடையனை சவால்விட்டு அழைக்கும் போதும், தன் காதலன் ஆட்டுத் தொழுவத்தில் விட்டுச் சென்ற ஒற்றைச் செருப்பை கண்டு கண் கலங்கும் போதும், கிழிந்த சட்டையால் தன் உடலை மறைத்துக் கொண்டு காதலனைத் தேடி ஓடும் போதும் அற்புதமான நடிப்பு. கிரிடிட்ட்ஸ் கோஸ் டூ பாரதிராஜா சார்…

கொடிவீரனாக அறிமுக நாயகன் லஷ்மண். அறிமுகப் படம்தான் பெரிதாக இவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்றாலும், பாரதிராஜாவின் கையில் கூட இவரால் பிரகாசிக்க முடியவில்லை என்று என்னும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆரம்ப காட்சிகளில் ஓரிரு இடத்திலாவது நடித்தவருக்கு அடுத்து நடிப்பு வருவேனா என்கிறது… அதிலும் குறிப்பாக தன் காதலி இன்னொருவனின் மனைவியாகி மாட்டுவண்டியில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு கண் கலங்கும் காட்சியே… அவருக்கு நடிப்பு வரவே இல்லை என்பதற்கு சாட்சி…


சடையனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ். முதன்முறையாக நடிக்க வாய்ப்பு உள்ள கதாபாத்திரம். பிறர் ஏற்று நடிக்க சற்று தயங்கும் கதாபாத்திரமும் கூட.. ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். தன் மனைவியை போதை வெறியுடன் நெருங்கிவிட்டு தொடாமல், ”நீ அவனல்ல நினைச்சுகிட்டு இருக்க… நான் எப்புடி உன்ன தொடமுடியும்… நானும் தொடமாட்டே.. எவனையும் தொடவும் விடமாட்டே..” என வீராப்பாக விலகிச் செல்லும் போதும், “விடக்கோழி குழம்புதா… விளஞ்ச கம்மஞ் சோறுதா…. ஐஞ்சனக்கா ஜனக்குதா… சடையன் போட்ட கணக்குத்தா… என சொலவடையாக பாடிக் கொண்டு உறுமாவை தலையில் கட்டிக் கொண்டு பழி வாங்க விரட்டும் போதும் மிகையில்லாத நடிப்பு..


சடையன் மனோஜின் அப்பா சங்குனியாக நடித்திருக்கும் பெரியவரின் நடிப்பும் ஓகே. கட்டாத வட்டிப் பணத்திற்காக அவன் கட்டி வைத்திருக்கும் மனைவியைத் தூக்கிவந்து பெண்டாளும் கேரக்டர். கிராமப்புறங்களில் இது போன்ற நபர்கள் உண்டு. அதுபோல அவ்வாறு தூக்கிச் சென்று வைத்திருக்கும் தன் மனைவியை மீட்க திருட்டுத்தனமாக வரும் தன் கணவனிடம்.. “அங்கேயே இருந்து சுகம் கண்ட அவன் மனைவி வர மறுப்பதுமான கூத்துக்களும் கிராமங்களில் கேள்விப்பட்டதுதான். அதையும் இங்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சட்டையணியாத பெண்கள் பாரதிராஜா படங்களின் அடையாளம் என்று பேச்சு உருவானதை சட்டை செய்வதே இல்லை இயக்குநர். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆடுகளம் மீனாளுக்கு ஊரில் சரச வேலை செய்யும் கதாபாத்திரம்.. வஞ்சனையில்லாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். இது போதாதென்று கார்த்திகாவையும் ஒரு காட்சியின் ஊடே சட்டை அணியாமல் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர்…

இயக்குநர் பாரதிராஜா தன் படங்களுக்கான காப்புரிமை பெற்ற காட்சிகளான, காதல் மலர்ந்ததும் பட்டாம்பூச்சி பறப்பதும், சோகம் என்றதும் வானத்தை மின்னல் கீறி உடைப்பதும், துள்ளி துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டிகளும், அதன் காம்பில் இருந்து பிதுக்கப்பட்டு சீறித் தெறிக்கும் பாலும், கிராமத்து காவல் தெய்வங்களின் அச்சுறுத்தும் குளோசப் காட்சிகளும் இதிலும் உண்டு..

இவைதவிர நாம் மறந்துவரும் மண்சார்ந்த சில விசயங்களான, உலை வைக்க பக்கத்து வீட்டில் இருந்து கங்கு எடுத்து வருவதும், காலில் குத்திய முள்ளை எடுக்க, அதில் கல் உப்பை வைத்து தீயில் சுடுவதும், நெருப்பால் சுட்ட இடத்தை நாக்கில் பால் கொண்டு நனைப்பதும், முனி சாமி மரத்தில் விருட்டென்று தொங்கிக் கொண்ட செருப்புகளும், திருவிழாவின் போது சாமிக்கு காணிக்கை செலுத்த ஆளுயரத்தில் மரத்தால் செய்து வைத்திருக்கும் வாய் அகன்ற உண்டியல்களும், அதில் உயிரோடு, கோழி, ஆடு போன்றவற்றைப் போட்டு மரத்தட்டால் மூடி ஆணி அறைந்துவிட்டு அதை திருவிழா நாளன்று மலை உச்சியில் இருந்து பள்ளத்தை நோக்கி உருட்டிவிட்டு காணிக்கை செலுத்துவதுமான காட்சிகள் எல்லாம் தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்களை தாங்கி நிற்கின்றன.. அதற்காக மட்டும் ஸ்பெசல் பாராட்டுகள் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு…


இதுதவிர அவரின் முத்திரை என்று பார்த்தால், அன்னக்கொடிக்கும் கொடிவீரனுக்குமான காதலை இரண்டே காட்சிகளில் கடந்துவிட்டு, அவர்கள் காதல் முறிந்த நிலையில் அது எப்படி எல்லாம் வளர்ந்த காதலென்பதை அவர்களின் நினைவுகூறலாக காட்சிப்படுத்தி இருப்பது அருமை. மேலும் பேசும் வசனங்கள் எல்லாம் வெகு இயல்பாக இருப்பதால் கதையோடு ஒன்ற முடிகிறது. “கால்ல செருப்பு போடாம போனா கல்லும் முள்ளும் தாண்டா குத்தும்.. செருப்பு போட்டுட்டு குடியானவ தெருக்குள்ள போன ஆளயே குத்துவான்ய்ங்கடா…” என்ற வசனம் சுருக்கென்று தைக்கும்.. கதை நடக்கும் கால கட்டம் அறுதியிட்டு சொல்ல முடியாதது. எனினும் அரைகால் டவுசர் அணிந்த போலீசைப் பார்க்கும் போதும், முதன்முதலாக கரெண்ட் இழுக்கும் காட்சி மூலமும் பார்க்கும் போது, 70ன் முற்பகுதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் வரும் நாயகன் மட்டும் ட்ரிம் செய்த மீசை வைத்துக் கொண்டு இருக்கிறான்.. சடையனோ…? தேள் உருவத்தை டாட்டு வரைந்திருக்கிறான்…? எப்படி என்று தெரியவில்லை… இசை ஜி.வி. பாடல்களை விட பிண்ணனி இசை பரவாய்யில்லை ரகம்...


இப்படி பாராட்டுவதற்கும் பல விசயங்கள் இருந்தாலும் கதை அதர பழசான கதை என்பது மட்டுமே மைனஸ். அதுதவிர்த்து சில காட்சிகளும் 80களில் எடுக்கப்பட்ட படக் காட்சிகளைப் போலவே வெகு மேலோட்டமாக இருக்கிறது. ஆனால் இவை தவிர்த்து அந்த கிராமத்தின் அழகியல், நேட்டிவிட்டி, இயல்பான பேச்சுமொழி சொலவடைகள், கிராமத்து நம்பிக்கைகள் இவைகளைப் பார்த்து நாளாயிற்றே என்று ஏங்குபவர்களுக்கு பாரதிராஜாவின் அன்னக்கொடி கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்காது.

Saturday 29 June 2013

அம்பிகாபதி:

அம்பிகாபதி அமராவதி இதிகாசம் நான் படித்ததில்லை. அதனால் இந்த அம்பிகாபதிக்கும் அந்த இதிகாசத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதை நான் அறியேன். காசியில் வாழ்ந்து வரும் ஒரு இந்து அய்யர் குடும்பத்து பையன் ஒருவன் தன் முஸ்லீம் காதலிக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறான் என்பதே இந்த அம்பிகாபதியின் திரைக்கதை.


தனுஷ் காசியில் வாழ்ந்து வரும் குந்தன் என்னும் அய்யர் குடும்பத்துப் பையன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். ராவண வதம் செய்ய பணம் வசூலிக்கும் வேட்டையில் தன் குட்டி வானரப் படையுடன் அருகிலிருக்கும் முஸ்லீம் வீட்டுக்குள் நுழையும் தோராயமாக 8 வயது நிரம்பிய குந்தனுக்கு, அங்கு தொழுகையில் இருக்கும் அதே 8 வயது நிரம்பிய ஸோயா என்ற பெண்ணைப் பார்த்தவுடனே காதல் துளிர்க்கிறது.


10ம் வகுப்பு படிக்கும் போது விடலைப் பருவ வேகத்தில் அவளிடம் தன் காதலைச் சொல்ல.. அவள் இவனைக் கன்னத்தில் அறைந்துவிட்டு செல்கிறாள். இவன் காதலைச் சொல்வதும் அவள் கன்னத்தில் அறைவதும் வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் 15 முறை தொடருகிறது. குந்தனின் பிடிவாதத்தால் அவனைச் சந்திக்க ஒத்துக் கொள்ளும் ஸோயா அவனது பெயரைக் கேட்க அவன் ஒரு முஸ்லீம் பெயரைச் சொல்லி விலகுகிறான்.
சந்திப்பின் போது அவன் படிக்கின்ற கவிதையில் மயங்கி ஸோயாவுக்கும் காதல் மலர.. அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் மார்பைத் தடவ, நெஞ்சோடு ஒட்டிக் கொண்டிருந்த கயிறு, அவன் அய்யர் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட.. கண நேரத்தில் மலர்ந்த காதல், ”கயிற்றால்” கண நேரத்தில் கருகிவிடுகிறது. 16ம் முறையாக அவனை அறைந்துவிட்டு செல்கிறாள் ஸோயா. அடுத்த இரண்டு காட்சிகளில் குந்தனின் வன்முறையால் மீண்டும் அவர்களுக்கும் காதல் அரும்ப… அடுத்த காட்சியிலேயே அது ஸோயாவின் பெற்றோருக்குத் தெரிந்து மீண்டும் கருகிவிட.. ஸோயாவின் குடும்பம் அவளை ஆக்ராவுக்கு படிக்க அனுப்புகிறது. நான் உனக்காக காத்திருப்பேன் என்று வாக்களிக்கும் குந்தனை வேறு வழியின்றி பிரிந்து செல்கிறாள்.


முதல் முப்பது நிமிடக் கதை இது. பெரிதாக எதுவும் இல்லாமல் காதலை மட்டுமே பெரிதாகக் காட்டும் காட்சிக் கலவைகளால் பின்னப்பட்டு காதலை கற்றுக் கொடுக்க வந்த நம் கலாச்சாரப் படமாகவே அது எனக்கு தென்பட்டது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அதன் கதை யதார்த்தத்தின் சூழலை தன்னைச் சுற்றி சுற்றிக் கொண்டது போல் ஸோயாவின் கதாபாத்திரம் பேசத் தொடங்கிய போதுதான் சற்று ஆசுவாசம் கிடைத்தது. ஆனால் அதை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என்பதில் இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்ப முடிச்சுகள், இரண்டாம் பாதி முழுவதும் திரைக்கதையை மேடு பள்ளங்கள் நிரம்பிய கிராமத்து சாலைகளில் பயணிக்கச் செய்துவிடுவதால், பயணம் செய்த நமக்கு களைப்பே மிஞ்சுகிறது.

ஆக்ராவில் இருந்து 8 வருடம் கழித்து திரும்பி வரும் ஸோயாவுக்கு குந்தனை அடையாளமே தெரிவதில்லை. தன்னை அவளுக்கு நினைவு கூரவே குந்தன் பல பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. குந்தன் தன் நினைவு மீட்டல்களைத் தொடர்ந்து தன் காதல் வீணையை மீட்டத் தொடங்க ஸோயா பயங்கர அதிர்ச்சியுடன், மிக பக்குவமாக ”அது தன் அறியா பருவத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது. எனக்கு இப்போது உன்மீது காதல் இல்லை” என்பதை தெரிவிக்கிறாள். ஸோயாவின் பதிவு குந்தனிடம் மட்டும் தான் கனிவாக இருக்கிறது. தனக்கு விருப்பமில்லாத ஒருவனை திருமணம் செய்ய பெற்றோர் வலியுறுத்தும் போது அவளது பதிவு சற்று காட்டமாகவே இப்படி வெளிப்படுகிறது. ”நீங்க சொல்ற பையனைக் கல்யாணம் செஞ்சாலும், குந்தன் மாதிரி பிச்சைக்காரப் பயல கல்யாணம் செஞ்சாலும் ஒண்ணுதா…”

இப்படி பயணிக்கும் கதையில் ஒரு கட்டத்தில் தான் டெல்லியில் படிக்கும் போது தன்னோடு படித்த ஒருவன் தன் மனதை கவர்ந்ததாகவும், அவனைத் தான் காதலிப்பதாகவும் சொல்லும் ஸோயா குந்தனிடமே உதவி கேட்க… மீதி என்ன நடந்தது என்பதை விருப்பமிருந்தால் வெண் திரையில் கண்டு கொள்ளுங்கள்….


இயல்பாகவே மனித ம(இ)னம் சுயநலமிக்கது. தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தனக்கு விருப்பமில்லாத நபர்களிடம் கூட அவர்கள் விரும்புவது படி நடந்து கொள்ளவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தான் நாம் எல்லாருமே. இந்த உளவியல் சார்ந்த கருத்துப் பொதிவு அம்பிகாபதியில் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸோயாவுக்கு குந்தன் மீது காதல் இல்லாவிட்டாலும், தன் காதலில் வெற்றிபெற குந்தனை அவள் அழகாக பயன்படுத்திக் கொள்கிறாள். குந்தன் மட்டும் அதற்கு சற்றும் இளைத்தவனும் இல்லை. ஸோயா மீதான தன் காதல் நிறைவேற, குந்தன் தன்னை காதலிப்பதாக சொல்லிக் கொண்டு, தன்னுடனே சிறுவயதில் இருந்து சுற்றிக் கொண்டு திரியும் தன் தோழி பிந்தியாவை பயன்படுத்திக் கொள்வதில் அவனும் தவறுவதில்லை.

இப்படி முதல்பாதியில் கதாபாத்திரங்களில் இருக்கும் ஒரு தெளிவும் நேர்த்தியும் இரண்டாம் பாதியில் இருப்பதில்லை என்பது படத்துக்கு மிகப்பெரிய தொய்வு. அதற்கு மிகப்பெரிய காரணம் படம் வாழ்வியல் தளங்களை விடுத்து அரசியல் தளங்களில் சமூக சேவைகளில் பயணிக்கத் தொடங்குவதுதான். ஒரு கட்டத்தில் “உன் பேரக்கூட நான் சொல்லமாட்டேண்டி… உன்ன விட்டா எனக்கு பொண்ணே கிடைக்காதா…” என்று ஸோயாவை விலகிச் செல்லும் குந்தன் அவன் பேசுவதற்கு ஏற்ப நடந்து கொள்வதும் இல்லை… ஸோயாவின் தேவை என்ன..? அந்த கதாபாத்திரம் எதை நோக்கி தன்னை நகர்த்துகிறது..? என்பதில் பெரும் குழப்பமே நிலவுகிறது. அவள் குந்தனை பழிவாங்க நினைக்கிறாளா…? தன் காதலனின் கனவை நிறைவேற்ற நினைக்கிறாளா…? இல்லை உண்மையாகவே சமூக சேவைகளில் நாட்டம் கொண்டவளாக மாறி இருக்கிறாளா..? இது எதுவுமே தெளிவாக இல்லை…


குந்தனாக தனுஷ்க்கு ஹிந்தியிலும் இது சொல்லிக் கொள்ளும்படியான படம். அவருக்கு தமிழ்படங்களில் ஏற்கனவே பரிச்சியமான கதாபாத்திரம் என்பதால் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸ் காட்சியின் போது வாயில் இருந்து ரத்தம் கொப்பளிக்க அவர் பேசும் வசனங்களின் தொனியில் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை வெளிக்காட்டுகிறார். வாழ்த்துக்கள் தனுஸ்.. ஆரம்ப காட்சிகளில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து கொண்டு சின்ன சின்ன முக பாவனைகளில் வசீகரிக்கும் சோனம் கபூர், கையை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் போது தனுஸை அருகே அழைத்து முகத்தில் எச்சில் துப்பும் காட்சியை தவிர்த்து வேறெங்கும் பெரிதாக ஜொலிக்கவில்லை..

தோழி பிந்தியாவாக வரும் ஸ்வரா பாஸ்கரின் நடிப்பு கவனிக்க வேண்டிய ஒன்று. தன்னை விரும்பவில்லை என்பது தெரியும் போதெல்லாம் வெடிப்பதும், தன்னை கல்யாணம் செய்து கொள் என்று கெஞ்சுவதும், ஸோயாவைத் தேடிப் போகும் போதெல்லாம் “அவள நினைச்சே சாகப் போற…” என எச்சரிப்பதுமாக அருமையான நடிப்பு. சில கோணங்களில் சோனம் கபூரைவிட இவரே அழகாகவும் தெரிகிறார்.  நண்பனாக வரும் “மொகம்மத் ஆயூப்” சிறப்பாக நடித்திருக்கிறார். டைரக்டோரியல் டச் சென்று சொல்ல வேண்டும் என்றால், “குந்தனை திருடன் என்று எண்ணி பிடித்துவிட்டு அவனை போலீசில் பிடித்துக் கொடுக்காமல் நடுவே அமர்த்தி கல்லூரி தரப்பு மாணவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டு அவன் ஏன் திருடனாக மாறினான் என்று விவாதிக்கும் காட்சியை சொல்லலாம். அதில் இருக்கும் நக்கல் மிக அருமை. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை விட பிண்ணனி இசை அருமை.. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. நடராஜன் சுப்ரமணியம் மற்றும் விசால் சின்ஹாவின் ஒளிப்பதிவில் காசியும் ஆக்ராவும் அத்தனை அழகு..



மொத்தத்தில் ஆனந்த் எல்.ராய் ஒரு காதல்கதையை உணர்ச்சிபூர்வமாக சொல்ல முயன்று அதில் பாதி வெற்றியும் அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இது ஒன்றும் லாயக்கில்லை என்று ஒதுக்கிவிட முடியாத படம். அதற்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான்.

Wednesday 19 June 2013

தீயா வேலை செய்யணும் குமாரு:

சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமான குறிக்கோளாக வைத்து எடுக்கப்படும் இது போன்ற படங்களுக்கு சிந்தித்தெல்லாம் திரை விமர்சனம் எழுதவே கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு பொழுது போக்காகவும், சிரிப்பதற்காகவும் வரும் ஆடியன்ஸ்க்கு இந்த திரைப்படம் முழு திருப்தியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


கதையென்னவென்றால்…………….!!!??? கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க.. ரெண்டு நாளுக்கு முன்னால் பார்த்த படம்தான். இருந்தாலும் ஒரு காட்சி கூட நினைவுக்கு வரவில்லை.. சற்று பொறுங்கள்…

மன்னிக்கவும் அப்படி எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்…… இல்லை இல்லை… கதை இருக்கிறது.. கதை இருக்கிறது… இதுதான் கதை.. அதாவது ”டைட்டானிக் குடும்பம்” என்று ஒரு குடும்பம். குடும்பத்தில் உள்ள அனைவருமே காதல் திருமணம் செய்து இருப்பதால் அவர்கள் குடும்பத்துக்கு டைட்டானிக் குடும்பம் என்று பெயர்.. (என்னது…? ஆம்பள ஆள் எல்லாரும் இறந்துட்டாங்களாவா…? அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லங்க…) அந்த குடும்பத்துக்கு திருஷ்டி பொட்டு போல ஒரு இளைஞன் குமார்.(சித்தார்த்). காதலில் படுதோல்வி அடைந்தவன்..

மழலை பருவம், பள்ளி பருவம், கல்லூரி பருவம் என்று மூன்று பருவத்திலும் காதலில் தோல்வி. அவனுக்கு தன் அலுவலகத்தில் பணிபுரிய புதியதாக வந்த பெண்ணைக் (ஹன்சிகா மோத்வானி) கண்டதும் அவனுக்கு குறிஞ்சிப் பூ போல காதல் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் பூக்கிறது. தன் காதலில் இந்த முறையாவது ஜெயிக்க அவனது மொட்டை மாமா பாஸ்கி ஒரு ஐடியா சொல்கிறார். அதாவது மோக்கியோ (சந்தானம்) என்பவனிடம் உதவி கேள். அவனுக்கு காதலுக்கு உதவுவதுதான் வேலை. “என்ன பீஸ் என்கின்ற பெயரில் பணம் கொஞ்சம் அதிகமாக செலவாகும்…” என்று வழிகாட்ட.. மோக்கியாவும் காதல்ல ஜெயிக்கணும்னா தீயா வேலை செய்யணும் குமாரு என வழிநடத்தத் தொடங்க.. நம் நாயகன் குமார் தன் காதலில் ஜெயித்து தன் குடும்பத்துக்கு ஏற்பட்ட திருஷ்டியை அழித்தானா இல்லையா என்பது மீதிக் கதை….. இவ்வளவு பெரிய கதையை வைத்துக் கொண்டு கதையே இல்லை என்று சொல்லிவிட்டேனே… மன்னித்துக் கொள்ளுங்கள்..


வெகுளித்தனமான முதல் இருபது நிமிட நடிப்பில் சித்தார்த் அபாரம். ஆனால் அதற்கு பிறகு வரும் காட்சிகளில்தான் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை. படத்தின் முதல் ஹீரோ சந்தானம் தான். அவருக்கான முதல் காட்சியிலேயே கிடைக்கும் விசிலும் கரகோஷமும் அதனை அறுதியிட்டுக் கூறுகிறது. தன் கூட்டாளிகள் அனைவரும் ஏதேனும் ஒன்றிரண்டு காட்சிகளிலாவது தலைகாட்டுவது போல் காட்சி அமைத்திருக்கிறார். பாராட்ட வேண்டிய விசயம். லவ்வுக்காக ஐடியா கொடுக்கும் போது இவர் சொல்லும் வசனங்களில் சில அப்ளாஸ் அள்ளுகிறது. அதிலும் குறிப்பாக “ஆப்ட்ரால் இந்த அறைக்கு பயந்துதான் தமிழ்நாட்ல பாதி பேர் லவ்வ சொல்லாமலே அழிஞ்சி போயிருக்காய்ங்க…” என்று சொல்வதை சொல்லலாம்.


மனோபாலாவும் சந்தானமும் கேளிக்கை விடுதியில்  வகை தொகை இல்லாமல் அடிக்கும் சில காமெடிகள் அதிரிபுதிரி ரகம். அந்த பத்து நிமிடங்கள் எல்லா ஆடியன்ஸ்க்குமே பூஸ்ட். ஹன்ஸிகா முதன் முதலாக கொஞ்சம் நடித்திருப்பதோடு மட்டும் அல்லாமல் அழகாகவும் தெரிகிறார் (என் கண்களுக்கு). அவர் சார்பாகவும் கேமராமேன் கோபி அமர்நாத்துக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இவர்கள் தவிர்த்துப் பார்த்தால் சித்தார்த்தின் நண்பராக வரும் ஆர்.ஜே பாலாஜியின் சில டைமிங்க் வசனங்களும், ஹன்சிகாவின் அப்பாவாக வரும் சித்ரா லட்சுமணன் மற்றும் தோழியாக வரும் வித்யாராம் போன்றோரின் மிகையில்லாத நடிப்பும் மனதில் நிற்கிறது. சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரமாக இருந்தாலும் மனோபாலாவும், டெல்லி கணேஷும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். பாடல்கள் படத்திற்கு பெரிய தடை. முதல் படத்தில் நம்பிக்கை விதைத்த சத்யா, இதில் ஏமாற்றிவிட்டார். ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் அட்டகாசம்..

வசனம் எழுதி திரைக்கதையில் உதவி இருப்பவர்கள் ”சூது கவ்வும்” இயக்குநர் நலன் குமாரசாமியும், சீனியும். ஆரம்பத்தில் வரும் வசனமான “இவந்தா குமாருன்னு சொன்னா எழுந்து போயிருவீங்கல்ல…. அதனால இவன் இல்ல குமாரு…” என்று காட்சியை ஓப்பன் செய்யும் இடமே முத்திரை பதித்து விடுகின்றனர். ஆனால் வசனத்தில் பின்பாதியிலும் திரைக்கதையில் முன்பாதியிலும் தான் இவர்களை தேட வேண்டி இருக்கிறது.


சுந்தர். சி யின் படங்கள் என்றாலே சிரிப்புக்கு கேரண்டி இருக்கும். அது இந்த தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்துக்கும் பொருந்தும். ஆனாலும் இவரது முந்தைய படமான கலகலப்புடன் ஒப்பிடும் போது ”தீவேசெகு” ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய சிரிப்பு வெடி இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் (குறிப்பாக பாடல் வரும் எல்லா இடங்களிலும் அது தவிர்த்து இன்னும் சில இடங்களிலும்) சில கெட்டவர்கள் (கதையென்ற வஸ்துவை எதிர்பார்த்து வந்தவர்களாக இருக்கலாம்…) எழுத தயங்கும் பல வார்த்தைகளால் தியேட்டரில் அர்ச்சித்துக் கொண்டே இருந்தனர் என்பதும் உண்மை.

இயக்குநர் சுந்தர்.சிக்கும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி இருக்கும் அவரது மனைவி குஷ்பூவுக்கும் இந்த படத்தின் வெற்றி இது போன்ற காமெடி படங்களிலேயே மீண்டும் முதலீடு செய்யத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.. மொத்தத்தில் இந்த ”தீயா வேல செய்யணும் குமாரு” ஒரு ஜாலி கேலி சீனி வெடி…. சரவெடி அல்ல….



Tuesday 4 June 2013

குட்டிப்புலி:

சசிக்குமாரின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் அடுத்த இயக்குநரான முத்தையாவின் முதல்படம். இயக்குநரின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் வளரும் பருவத்தில் கண்டு மெய்சிலிர்த்து நின்ற இளைஞரான “குட்டிப் புலி” என்னும் கதாபாத்திரத்தை அப்படியே சினிமாவாக்கி இருக்கிறார். குட்டிப்புலியின் வாழ்க்கையை நாம் அறியமாட்டோம் என்பதால் படத்தில் வரும் காட்சிகளில் எது நிஜம், எது கற்பனை என்பதை நம்மால் பிரித்தாள முடியாது. இருப்பினும் இரண்டுமே வறட்சியாக இருப்பதால் அந்த விவாதமே இங்கு தேவையற்றதாக ஆகிவிடுகிறது.


சசிக்குமாரின் முந்தைய படமான சுந்தரபாண்டியனுக்கான திரைவிமர்சனத்திலேயே எழுதி இருந்தேன், சசிக்குமார் விழித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது என்று. அது இந்த திரைப்படத்தில் அப்பட்டமாக நிருபணமாகி இருக்கிறது. ஒரு படத்தின் அசாத்தியமான வெற்றி படத்தை எந்த அளவுக்கு  மக்களின் மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறதோ அதே அளவுக்கு இயக்குநருக்கும் மக்களுக்குமான இடைவெளியையும் ஏற்படுத்திவிடுமோ என்று ஐயுறத் தோன்றுகிறது.

சுப்ரமணியபுரம் என்னும் வெற்றி தந்த களிப்பில், அத்திரைப்படத்தின் சில சாத்தியக் கூறுகளை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு (தெருக்களில் நடந்து கொண்டே இருக்கும் கதாநாயகி, பரிமாறிக் கொள்ளும் காதல் பார்வைகள், பேக்ரவுண்டில் ஒரு இளையராஜா பாடல், இறுதியில் நெஞ்சைப் பதறச் செய்வது போன்ற ரத்தம் தெறிக்கும் ஒரு க்ளைமாக்ஸ்…) அந்த திரைப்படம் எதனால் வெற்றி பெற்றது என்பதை தவறவிடுவதால் ஏற்படும் கோளாறுகள் தான் இது போன்ற திரைப்படங்கள்..

கதை இதுதான். தன் தெரு (மேட்டுத் தெரு) பெண்ணின் மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தியவனை கொன்று, தானும் செத்து அத்தெருவுக்கு தெய்வம் ஆகிறார் குட்டிபுலியின் அப்பா. தன் மகனும் அடாவடி பண்ணும் ரவுடியாக மாறிவிடக்கூடாது என்று பயந்து தன் மகனின் கண்ணில் அவனது அப்பனின் போட்டோகூட படாதபடி பக்குவமாகப் பார்த்து வளர்க்கிறார் அம்மா சரண்யா. இருப்பினும் மகன் ரவுடியாக (ரவுடிக்கான விளக்கம்… அநீதியைக் கண்டு பொங்குபவனாக, நீதிமானாக, பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவனாக…) வளர்ந்து நிற்கிறான். பதறிப்போன தாய் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று நினைக்க.. கல்யாணம் செய்தால் தன் மனைவியும் தன் தாயைப் போல் தாலி அறுக்க நேரிடும் என்பதால் இவன் கல்யாணத்துக்கும் முட்டுக்கட்டை போடுகிறான். எதிர்பாராத சூழ்நிலையில் பாரதியை(லட்சுமி மேனன்) அவன் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ள.. அதே நேரத்தில் அவனால் பாதிக்கப்பட்ட எதிரிகள் அவனைக் கொல்ல படைசூழ.. என்ன நடந்தது என்பது மீதிப்படம்…

ஊருக்கு உதவும்..! மன்னிக்க… தெருவுக்கு உதவும் உத்தமர் குட்டிப்புலியாக சசிக்குமார். வழக்கம் போல மடித்து கட்டிய லுங்கி, மலிக்காத தாடி, ஊர் பெருசுகளை மதிக்காத இளக்காரம், தப்பு செஞ்சவன்…! போலீஸாக இருந்தாலும் எகிறி அடிக்கும் தெனாவட்டு என கொஞ்சம் கூட நழுவாத அதே ஸ்கெட்ச். பாரதியாக லட்சுமிமேனன். வழக்கம் போல கையில் ரெண்டு கோல நோட்டு புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கே போகிறோம் என்று அவருக்கும் தெரியாமல் நமக்கும் சொல்லாமல், எப்போது பார்த்தாலும் தெருவெங்கும் நடந்து கொண்டு இருப்பதும், நாயகன் எதிர்படும் போது காதல் பார்வை வீசுவதும் என அதே சசிக்குமார் படப்பாணியிலான கதாநாயகி ஸ்கெட்ச். அம்மாவாக சரண்யா. வழக்கம் போல தன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், தன் பிள்ளையை மெச்சிக் கொள்வதுமாக பல படங்களில் செய்து வரும் அவருக்கே அலுத்துப் போன அதே கதாபாத்திரம்.. தான்


படத்தின் ஆரம்பத்தில் வரும் பத்து நிமிட காட்சிகள் நாவலில் வரும் காட்சிகள் என்பதால் அவை க்ளாசாக வந்திருப்பதோடு, படம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பையும் தூண்டுகிறது. அது தவிர்த்து பார்த்தால் ஊர்மக்கள் திருவிழாவின் போது போலீசை எதிர்த்து செய்யும் அலும்புகள், போலீஸ் ஸ்டேசனில் சசியை ஊற வைத்த வாழைமட்டையைக் கொண்டு அடித்து தோலை உரிப்பது, “ஒரு பொம்பள சொன்னாதா நீயும் நானும் ஆம்பள”, “அப்ப மனுசன் சாவு மனுசன்கிட்ட இல்லன்னுதான தெரியுது..” என ஆங்காங்கே சில வசனங்கள் மட்டுமே திருப்தி.


சசிக்குமாரை சிலம்பு சுத்தவிட்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும். உண்மையாகவே அந்தக் காட்சியில் சசியை விட அந்த சிறுவனும், வயதான கிழமும் மிக அருமையாக கம்பு சுத்தினர். காதலுக்கும் காமெடிக்கும் மெருகூட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே மிக பரிச்சியம் இல்லாத சில இளையராஜா பாடலை தூவியதும், பப்பு, கசகசா என்ற பெயரில் நான்கு இளைஞர்கள் வந்து காமெடி என்ற பெயரில் அடிக்கும் அறுவைகளும் மேலும் எரிச்சலூட்டுகின்றது. படத்தின் முதல் பாதியிலாவது ஏதோ ஓரளவுக்கு நகரும் கதை, இரண்டாம் பாதியில் நகருவேனா என்கிறது. இதுபோக ஆங்காங்கே மறைமுகமான சாதியத் தீண்டல்கள் வேறு…

படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸ் சூட் பண்ணி இருக்கிறார்கள். பல விவாதங்களுக்கு பிறகு இந்த க்ளைமாக்ஸை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இரண்டில் எந்த க்ளைமாக்சை வைத்திருந்தாலும் படத்தின் ரிசல்டில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது என்றே தோன்றுகிறது. இயக்குநர் தன் முந்தைய பேட்டியில் படம் பார்த்து முடிக்கும் போது பெண்கள் மீதும் தாய் மீதும் ஒரு மரியாதை கலந்த அன்பு ஏற்படும் என்று சொல்லி இருந்தார். ஐ ஆம் வெரி ஸாரி டைரக்டர்…


ஆனால் அவர் சொன்ன அதே வார்த்தைக்கான பொருளை “MOTHER” என்னும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்தப் போது உண்மையாகவே உணர்ந்தேன்.. கிட்டத்தட்ட இரண்டு படத்திலும் ஒரேவிதமான க்ளைமாக்ஸ் தான். ஜிப்ரானின் இசையில் சில பாடல்கள் கேட்கும் போது சுகமாக இருந்தது.. ஆனால் படத்தில் பார்க்கும் போது ஏனோ ஒட்டவே இல்லை. மகேஷ் முத்துச் சுவாமியின் கேமரா கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறது..


மொத்தத்தில் இது சுந்தரபாண்டியன் போல ஒரு கமர்ஷியல் காக்டெயிலாகவும் இல்லாமல், சுப்ரமணியபுரம் போல க்ளாசிக்காகவும் இல்லாமல் புதுமையான கதைக்களனாகவோ, பரபரப்பு ஏற்படுத்தும் திரைக்கதையாகவோ அல்லது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காகவோ இல்லாமல் நம்மை வெறுப்பேற்றுவதோடு இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறது… பாவம் அது என்ன செய்யும்…..!? குட்டிப்புலிதான…!!!!