Wednesday 22 May 2013

நேரம்:


அல்போன்ஸ் புத்திரன் என்ற புதிய இயக்குநரின் முதல்படம். படத்தின் ஆரம்பத்திலேயே “குவாண்டின் டொரொண்டினோ” அவர்களின் மேற்கோளான ”என் படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் எடுக்கப்படாத படங்களில் இருந்து திருடப்பட்டவை” என்பதை காட்டி அதனை தானும் வழிமொழிகிறேன் என்று படத்தை தொடங்குகிறார் இயக்குநர். இதை எதற்காக போட்டிருக்கிறார் என்னும் ஆராய்ச்சியை எல்லாம் இறுதியில் வைத்துக் கொள்வோம். மேலும் படத்தில் டைட்டில் கார்ட் மட்டும் இரண்டு நிமிடத்துக்கு குறைவில்லாமல் வருகிறது.


படத்தின் ஒன்லைனர் என்னவென்றால் ”ஒருவனுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டால் எல்லாமே நன்றாக நடக்கும்.. கெட்ட நேரம் தொடங்கி விட்டால் எல்லாமே கெட்டதாக நடக்கும்…” என்பதே

படத்தின் ஆரம்பகாட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது கதாநாயகனுக்கு கெட்டநேரம்.. எனவே தொடர்ந்தால் போல் எல்லாமே கெட்ட விசயங்களாகவே நடக்கிறது. முதலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் நேரத்தில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் நாயகனுக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் வேலை போகிறது. இதனால் வட்டி ராஜா என்னும் ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கி தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கிறான். வேலை கிடைத்ததும் பணத்தை திருப்பிக் கொடுக்க திட்டம். ஆனால் நான்கு மாதமாகியும் வேலை கிடைக்கவில்லை. ரவுடி பணம் கேட்டு மிரட்டத் தொடங்குகிறான். அதே நேரத்தில் வேலை இன்னும் கிடைக்கவில்லை என்னும் காரணத்தைச் சொல்லி, காதலியின் தகப்பன் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க.. அவள் வீட்டை விட்டு வருகிறாள்.. அவளது தகப்பனோ தன் மகளை கடத்தியதாக போலீசில் புகார் செய்ய.. அங்கும் ஒரு பிரச்சனை.. காதலனை சந்திக்க வரும்  வழியில் நாயகியின் செயினை ஒருவன் பறித்துவிட்டு ஓடி விடுகிறான்… அங்கொரு பிரச்சனை.. வட்டி ராஜாவுக்கு வட்டி கட்ட நண்பனிடம் கடனாக வாங்கி வைத்திருந்த பணத்தை ஒருவன் நாயகனிடம் இருந்தும் திருடி விடுகிறான்.. இது தலை போகிற பிரச்சனை… இது போதாதென்று தங்கையை கல்யாணம் செய்த மச்சானிடம் இருந்தும் புதிதாக ஒரு பிரச்சனை. இத்தனை பிரச்சனைகளையும் நாயகன் எப்படி சமாளித்தான்.. அவனுக்கு நல்ல நேரம் வந்ததா இல்லையா…? என்பது மீதிக்கதை..


சமீபகாலத்தில் வந்த தமிழ்படங்களில் அதிகமான கதாபாத்திரங்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் கதையை நகர்த்திச் செல்லும் விதமாகவும் காட்சிப்படுத்தி இருக்கும் திரைக்கதை உண்மையாகவே பாராட்டப்பட வேண்டியது. இது போன்ற பல முக்கியமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதை நகர்வில் குறிப்பிட்ட பங்களிப்பைக் கொடுத்த மற்றொரு சமீபத்திய படம் “மெளன குரு”


இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான, வெற்றி(கதாநாயகன் நவீன்), வேணி (நாயகி நஸ்ரியா), வட்டி ராஜா(சிம்ஹா), லைட் அவுஸ்(ரமேஷ்), கட்டகுஞ்சு (ஜான் விஜய்), சரவணன்(ர்)(தம்பி ராமையா), வெற்றியின் நண்பன் கதாபாத்திரம், வெற்றியின் மச்சினன் கதாபாத்திரம், இது போக நாசர், சார்லி, நாசரின் தம்பியாக வரும் மாணிக்கம் மற்றும் அந்த ஆட்டோ டிரைவர் என எல்லாருமே ஒன்று பிரச்சனையை உருவாக்குபவர்களாகவோ அல்லது அதை தீர்த்து வைப்பவர்களாகவோ கதையோடு பயணிக்கிறார்கள்.


மேலும் ஆரம்ப காட்சியில் சிம்கா சாப்பிட்டுக் கொண்டு இருப்பதும் பின்பு அது அவரது வீடில்லை என்பதை விளக்குவதும், நாலு மாதங்கள் ஓடுகின்ற விதத்தை ஒரு டூத்பேஸ்டைக் கொண்டு காட்சிப்படுத்தியதும், காதலியின் போன்கால் வரும்போது காதலின் ப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு சீக்கிரமே கதைக்குள் வந்துவிடுவதும் ஒரு வித்தியாசமான அட்மாஸ்பியரில் போலீஸ் ஸ்டேசனைக் காட்ட எண்ணி வெள்ளை அடிக்கும் சூழலை பயன்படுத்தி இருப்பதும், கோணலாக தொங்கிக் கொண்டு இருக்கும் வாய்மையே வெல்லும் போர்ட்டும் க்ளாஷ்.  ஆங்காங்கே வரும் சில காமெடி துணுக்குகள், உதாரணமாக நாசர் பாடத் தொடங்கியவுடனே அவரது அடியொட்டிகள் வெற்றியை திட்டுவது போல் திட்டு கவனத்தை திருப்புவது, தன் பெயரை சரவணர் என்று சொல்வதற்கு தம்பி ராமையா சொல்லும் விளக்கம் என குறிப்பிட்ட சில காட்சிகள் அருமை..


சிறப்பான நடிப்பு என்கின்ற அடிப்படையில் என்று பார்த்தால் நாயகன் நாயகியை பின் தள்ளிவிட்டு நாசரும் வில்லனாக வந்து கலக்கிய சிம்ஹாவும் தான் மனதில் நிற்கிறார்கள். நாயகன் நவின் இன்னும் பல படிகள் தாண்டவேண்டும். நாயகி நஸ்ரியா காஜலின் தோற்றத்தில் இருப்பதால் இவருக்கு இனி ஏறுமுகம் என்றே தோன்றுகிறது. நடிப்பு பற்றி.. நடிக்கவே தெரியவில்லை என்று எந்த கதாநாயகியை நாம் ஒதுக்கி இருக்கிறோம்.. இசை வெறும் இரைச்சல்.. பெரிதாக ஒன்றும் இல்லை.. 5டி 7டி கேமராக்களில் எடுத்ததாக இருந்தாலும் நல்ல குவாலிட்டியான அவுட்புட் என்பது மகிழ்ச்சியான செய்தி.


என் படத்தின் காட்சிகள் எடுக்கப்படாத படத்தில் இருந்து திருடப்பட்டவை என்னும் வார்த்தைகளை யோசித்த போது.. இந்த சாயலில் ஓடிக் கொண்டே ஒரு படம் பார்த்ததாக நினைவு. ”“ரன் லோலா ரன்” என்னும் திரைப்படம். கதாநாயகன் தன் பாஸ்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை ட்ரெயினில் ஒருவன் திருடி விடுவான். நாயகன் தன் காதலியிடம் கேட்பான். அவள் நான் 12 மணிக்குள் வந்துவிடுகிறேன் காத்திரு என்று சொல்லிவிட்டு தன் தந்தையிடம் உதவி கேட்க செல்வாள். அவர் ஒரு சண்டையில் நீ என் பொண்ணே இல்லை என்று அடித்து விரட்டி விடுவார். மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டு இருக்கும். “நீ பனிரெண்டு மணிக்குள் திரும்பிவராவிட்டால் நான் எதிரே உள்ள சூப்பர் மார்கெட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கப் போகிறேன்.. அதைவிட்டால் எனக்கு பணத்தை மீட்க வேறுவழியில்லை என்று சொன்னது நினைவு வரும்.. ஓடத் தொடங்குவாள்… தன் காதலனின் பணத்தை திருடியவன் அவளை கடந்து செல்வான்.. நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கும்.. அவள் ஓடிக் கொண்டே இருப்பாள்….” இப்படி யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற காரணத்துக்காகவே இயக்குநர் அந்த மேற்கோளை பயன்படுத்தினாரா தெரியவில்லை.. ஆனால் இதற்கும் இந்தப் படத்திற்கும் உண்மையாகவே எந்த சம்பந்தம் இல்லைதான் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்தப்படமும் நினைவுக்கு வந்தது அவ்வளவே..


குவாண்டின் டொரொண்டினோவுக்கு வருவோம். இவர் இப்போது பல தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு ஆஸ்தான இயக்குநராக ஆகிவிட்டிருக்கிறார். மிக நல்ல விசயம். அதற்காக டொரொண்டினோவின் ஸ்டைலை இவரிடமும் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் டொரொண்டினோவின் எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு நிலையற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். அந்த பாத்திரம் எந்த நேரத்தில் எப்படி செயலாற்றும் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. அதுதான் அவரது ப்ளஸ். ஆனால் அது இதில் மிஸ்சிங். என்னதான் சிம்ஹாவை அவ்வளவு பில்டப்புடன் காட்டினாலும் அவரால் ஒரு மிகப்பெரிய இழப்பு ஹீரோ தரப்புக்கு வரும் என்னும் எண்ணமே தோன்ற மாட்டேன் என்கிறது. மேலும் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன திருப்பங்கள் சில இடங்களில் எளிதாக யூகிக்க கூடியதாக இருப்பதும் ஓர் நெகட்டிவ்… அதை தவிர்த்துப் பார்க்கையில் இன்றைய தமிழ் திரைப்பட சூழலில் இது ஒரு மறுக்கமுடியாத நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Thursday 16 May 2013

தேடிக் கொண்டிருக்கிறோம்:


                     


அவள் வீட்டோரத் தெருக்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்..
நான் தொலைத்த
என் வாழ்க்கையை…
அவளும் தேடிக் கொண்டிருக்கிறாள்….
மொட்டைமாடியில் நின்று கொண்டு
மேகத்துக்கு அடியில்
தொலைந்து போன நிலவை...
அவளது
குழந்தையுடன்…..

உன் ஞாபகம் சுமந்தோம்:




எப்போதுமே உன்
ஞாபகம் சுமந்த ஒன்றை
விட்டுச் செல்வது
உன் வழக்கம்…
நடந்த காலடித்தடங்கள்
உதிர்ந்த ஒற்றை ரோஜா
ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டு
அறுந்த ஒற்றை செருப்பு
ஊதி உடைத்த பலூன்
உட்கார்ந்த நாற்காலி
முத்தம் கொடுத்த குழந்தை
கைபட்ட காசுகள்
கடத்திவிட்ட புத்தகங்கள்
வெளிவிட்ட சுவாசம்
காற்றிலே உன் வாசம்
பதுக்கிய உன் சிரிப்புகள்
திருடிய பார்வைகள்
ஆழமாய் சில ஆச்சரியங்கள்..
பெரியதாய் சில பெருமூச்சுகள்..
இப்படி ஏதேனும் ஒன்றை
அதை எனக்காகவே
விட்டுச் சென்றாய்
என எண்ணிக் கொள்வது
என் வழக்கம்…
உன் ஞாபகங்களை சுமந்தது
என் தவறு
இன்று
நீ
என்னை
விட்டுச் செல்கிறாய்….
உன் ஞாபகம் சுமந்தோம்
தனித்து விடப்பட்டோம்…
என
என்னோடு
அழுது
புலம்பிக் கொண்டிருக்கின்றன
அவைகளும்…….

The way home:


உங்களுக்கு உங்கள் பாட்டியைப் பிடிக்குமா..? உங்களது பாட்டியின் பாசமழையில் நனைந்து, மீண்டும் ஒருமுறை மூச்சடைத்துப் போய் நிற்க விரும்புகிறீர்களா…? நீங்கள் உங்கள் பாட்டியுடன் இருந்த அந்த சந்தோசமான தருணங்களை மீண்டும் மீட்டெடுக்க விரும்புகிறீர்களா…? ஆம், என்றால் உங்களுக்கான படம்தான் “தி வே ஹோம்”.



ஒரு திரைப்படம் திடகாத்திரமான கதாநாயகன் இன்றி, கவர்ச்சியான அழகு ததும்பும் கதாநாயகி இன்றி, மனதை மயக்கும் பாடல்கள் இன்றி, அழுத்தமான கதையமைப்பு இன்றி, எதிர்பாராத திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இன்றி நம்முடைய மனதை கவர முடியுமா…? இந்த திரைப்படத்தை பார்த்து முடித்துவிட்டு சொல்வீர்கள் முடியும் என்று… இந்த திரைப்படத்தில் மேற்குறிப்பிடப்பட்ட எந்த சமாச்சாரமும் இல்லை.. தோல் சுருங்கிய ஒரு வயதான பாட்டியும், அழகான துடுக்குத்தனம் நிறைந்த, பல நேரங்களில் நம்மைக் கோபப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு சிறுவனும் மட்டுமே பெரும்பாலும் வருகிறார்கள்… ஆனாலும் படம் முடியும்போது அது நம் மனதை ஏதோ செய்கிறது. மொத்த திரைப்படத்திலும் அந்த பாட்டி ஒரு அன்பின் அடையாளமாக இருந்து கொண்டே இருக்கிறாள். அதனால் தான்  ஒவ்வொரு காட்சி பிம்பத்திலும் அந்த அன்பு நிறைந்து வழிந்து கொண்டே இருக்கிறது.

நாம் வீடு என்று எதைச் சொல்லுகிறோம்..? கல்லும் மண்ணும் சிமெண்டும் கலந்து கட்டிய ஒரு கட்டிடம் மட்டுமே வீடாகி விட முடியுமா…? அல்லது அதில் மனிதர்கள் குடியிருப்பதால் மட்டும் அது வீடாகி விட முடியுமா…? அந்த வீட்டில் உள்ள மனிதர்களுக்கு இடையில் அன்பு என்பது இல்லாமல் ஆகிவிட்டால் அது பலருக்கு சுடுகாடாகத்தானே காட்சி அளிக்கும். அப்படிப் பார்க்கையில் அன்போடு மனிதர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமே வீடு என்னும் முழுமையான வடிவம் பெறுகிறது. அதைத் தான் இந்த திரைப்படம் குறிப்பாக உணர்த்துகிறதோ என்று தோன்றுகிறது.


”தி வே ஹோம்…” ”வீட்டை நோக்கிச் செல்லும் பாதை” என்னும் அர்த்தம் பொதிந்த தலைப்பு. படத்தின் ஆரம்பக் காட்சியில் இருண்ட திரையின் மத்தியில் வாக்கியங்கள் விரிகின்றன.. 76 வயதான அம்மா வழிப்பாட்டி, 7 வயது சிறுவன், 32 வயதான தாய், கதை எப்போது நடக்கிறது, ஜீன் ஜீலை மாதத்துக்கு இடையே. காட்சிகள் விரியத் தொடங்க.. ஒரு சொகுசு பஸ்சில் அந்தச் சிறுவன் தன் கையில் ஒரு விமான பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறான். அவன் எழுப்பும் சத்தம் அருகில் இருக்கும் அவனது தாயை தொந்தரவு செய்ய.. அவள் இவனை முறைக்கிறாள். அவன் பாட்டியைப் பற்றி கேட்கத் தொடங்குகிறான். “அவள் ஊமையா… காதும் கேட்காதா..? பிறகு எப்படி அவள் என்னை கவனித்துக் கொள்வாள்…? என்னும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லாமல் இருக்கவே.. அவன் தாயைத் தோளில் இடிக்கிறான்..


இருவரும் ஒரு நடுத்தர பஸ்சுக்கு மாற, அந்த பேருந்தின் உட்புறச் சூழ்நிலை அந்தச் சிறுவனை வெறுப்பாக்க.. அவன் தன் வீடியோ கேம் எடுத்து விளையாடத் தொடங்குகிறான். அவனது தாய் அருகில் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். மீண்டும் ஒரு பேருந்து மாறுகிறார்கள். அது புகையைக் கக்கிக் கொண்டு செல்கிறது. சாதாரண கிராமப்புற மக்களால் அந்த பஸ் நிரம்பி இருக்க.. அருகில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான பெண்மணி தன் தோள் மீது இடிப்பதால், அந்தச் சிறுவன் அவளது தோளைப் பிடித்து தள்ள… அவனது தாய் அவனை அடிக்கிறாள். பாட்டியின் கிராமத்தில் இருவரையும் இறக்கி விட்டுவிட்டு புகையை கக்கியவாறே பஸ் செல்லுகிறது. தாய் முன்னால் நடக்க.. சிறுவன் “இந்த இடம் நல்லாவே இல்ல.. எனக்கு பிடிக்கல.. நான் வரல… “ என்று சொல்ல.. அவனது தாய் அவனை அடிக்க.. அவன் தன் தாயை காலால் எத்த… அவள் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு நீண்ட பாதை தென்பட… அந்தப் பாதையை ஒட்டி படத்தின் டைட்டில் பிரசன்னமாகிறது. “தி வே ஹோம்”  

                  

இதற்கு முன் நாம் கடந்து வந்த எந்தக் காட்சியிலும் அன்பு என்பது துளி அளவும் இருக்காது. இயந்திர பொம்மைகளை விரும்பும் சிறுவனால் அருகில் இருக்கும் உயிருள்ள மனிதர்களையோ, கோழியையோ விரும்ப முடியாது, தாயை திருப்பி அடிக்கிறான்… தாயைப் பிரிந்து இருக்க வேண்டியதைப் பற்றி அவன் கவலை கொள்வதில்லை… தான் இருக்கப் போகும் இடம் நாகரீகம் அற்ற ஒரு இடமாக இருப்பதால் அங்கு அவனால் ஒன்ற முடிவதில்லை. அதனால் தான் நான் இங்கு இருக்கமாட்டேன்… என்று அடம் பிடிக்கிறான். சற்று யோசித்துப் பார்த்தால் இந்தச் சிறுவனின் கதாபாத்திரம் தற்காலத்து சிறுவர்களின் மனோஇயல்பை வெளிக்காட்டுகிறது. அவர்களுக்கு இயந்திரங்களின் மீது உள்ள அன்பு, ஈடுபாடு, காதல் கூட சக மனிதர்களிடம் இருப்பதில்லை.. மரியாதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனோபாவம் இயல்பாகிப் போய்விட்டது. அதையும் பெற்றோராகிய நாம் ரசிக்கத் தொடங்கிவிட்டது தான் காலத்தின் கொடுமை.. இது தலைமுறை இடைவெளிக்கான மாற்றம் தான். ஆனால் இந்த மாற்றம் நல்லவிதமான மாற்றம் இல்லை என்பதுதான் நெருடலாக இருக்கிறது.

பாட்டியின் வீட்டில் அவனது தாய், தான் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போனதற்காக, இதுநாள் வரை தன் தாயை பார்க்க வராமல் இருந்ததற்காக என பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்க… சிறுவன் வீட்டை நோட்டம் விடுகிறான். பல்பு இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கும் ஹோல்டர், ஓட்டடை படிந்த சுவர்கள், தரைப் பலகையின் இடுக்குகளுக்கு இடையே ஓடும் பூச்சிகள் என இவைகளைக் கண்டு அவன் அறுவெறுப்பு அடைகிறான்… “தன் மகன் தொந்தரவு எதுவும் கொடுக்க மாட்டான்…” என்று தாய் சொல்லிக் கொண்டு இருக்க.. அவன் பாட்டியின் செருப்பின் மீது சிறுநீர் கழிக்கிறான்.


சிறுவனின் தாய் ஊருக்கு சென்றுவிட, பாட்டியும் சிறுவனும் அந்த ரோட்டில் தனித்து விடப்படுகிறார்கள்.. குனிந்த நிலையில் தரையில் கம்பை ஊன்றி நடந்து வரும் பாட்டி தன் பேரனை நோக்கி பாசத்துடன் நெருங்க.. சிறுவன் அருவெறுப்புடன் பின்னால் செல்கிறான்… அவனைத் தொட முயலும் பாட்டியை திட்டிக் கொண்டே.. அடிக்க கை நீட்டுகிறான். தான் தொடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த பாட்டி தன் நெஞ்சில் கையைத் தடவி, மன்னிப்பு கேட்பது போல் சைகை செய்துவிட்டு முன்னோக்கி நடக்க… பாட்டியை “லூசுக் கிழவி, செவிட்டு கிழவி” என்று வசை பாடிக் கொண்டே அவன் பின்னால் நடக்கிறான். அவன் வருகிறானா என்று பாட்டி பின்னால் திரும்பிப் பார்த்தால்.. நடப்பதை நிறுத்திக் கொண்டு இவனும் பின்னால் திரும்பிக் கொள்கிறான்…


வீட்டில் பாட்டி கொடுக்கும் உணவுப் பொருட்களைப் புறக்கணித்துவிட்டு தன் தாய் கொடுத்துச் சென்ற டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறான். மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு சாமான்களை பாட்டி கொடுக்க.. அதை அவன் கண்டு கொள்வதே இல்லை.. அவன் அங்கும் தனக்கு பொழுது போக்காக தன் வீடியோ கேம்மை கையில் எடுக்கிறான். பாட்டி ஊசியையும் நூலையும் கோர்த்துக் கொடுக்கும்படி அவனை நெருங்க வேண்டா வெறுப்பாக அதைச் செய்து கொடுக்கிறான்… காலைக் கடன்களை இரவு நேரத்தில் அவசரமாக கழிக்க வேண்டி இருக்கையில் மட்டும் பாட்டியின் உதவியை நாடுகிறான். அருகில் வசிக்கும் கிராமத்து சிறுவன் சியோல் இவனுடன் நட்பாக முயல, சியோலுடன் இவன் ஒரு வார்த்தைக் கூட பேசுவது இல்லை.. காலை நக்கிக் கொடுக்கும் நாய்குட்டியை எட்டி உதைக்கிறான்..


வீடியோகேமில் பேட்டரி தீர்ந்துவிட…பேட்டரி வாங்க பணம் கேட்கிறான். பாட்டியிடம் பணம் இருப்பதில்லை… கோபத்தில் பாட்டி கழுவி வைத்த பீங்கான் பாத்திரத்தை காலால் எத்தி உதைக்கிறான்.. அது உடைந்து சிதறுகிறது. பாட்டியின் செருப்பை எடுத்து ஒளித்துவைக்கிறான்.. வெறும் காலுடன் அந்த மலைக் கிராமத்தில் தண்ணீர் எடுக்கச் செல்லும் பாட்டியைப் பார்த்து வன்மமாகச் சிரிக்கிறான்.. பாட்டியின் கொண்டையில் சொருகி இருக்கும் வெண்கல ஊசியை அவள் தூங்கும் போது எடுத்துக் கொண்டு ஓடுகிறான். அதை விற்று பேட்டரி வாங்க நினைக்க.. வழிதவறிப் போய் ரோட்டில் அழுது கொண்டு நிற்கிறான். ஒரு விவசாயி சைக்கிளில் அவனை அவர்கள் கிராமத்தில் விட்டுவிட்டு செல்ல.. எதிரே பாட்டி அவனைத் தேடி வந்து கொண்டு இருக்கிறாள். இவன் பாட்டி தன்னை அடிப்பாளோ.. திட்டுவாளோ என்று பயந்து போய் நிற்க.. பாட்டி இவனைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல… இவன் பாட்டியின் கொண்டையைப் பார்க்க அதில் ஒரு வெண்கல ஸ்பூன் சொருகப்பட்டு இருக்கிறது… அவன் பாட்டியின் பின்னால் மெதுவாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறான்… இந்த இடத்தில் தான் அவன் தன் தவறை உணரத் தொடங்குகிறான். துவைத்து காயப் போட்ட துணிகள் மழையில் நனைய.. முதலில் தன் துணியை மட்டும் எடுப்பவன், பின்பு பாட்டியின் துணிகளையும் எடுத்து உள்ளே போடுகிறான். உடனே மழை நின்றுவிடுகிறது… வெறுத்துப் போன சிறுவன் மீண்டும் துணிகளைக் காயப் போடுகிறான். இந்தப் புள்ளியில் இருந்து பாட்டியின் மீது அவனுக்கு அன்பு பிறக்கிறது


இப்படி படம் முழுக்க அவன் பாட்டியை பாடுபடுத்துவதும்.. அதற்காக அவன் மீது கொஞ்சம்கூட கோபம் கொள்ளாத பாட்டி மெல்ல மெல்ல.. அவனைத் தன் அன்பால் மாற்றுவதும் தான் மொத்தப்படமும்… ஒரு முறை பாட்டி உனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்க.. இவன் பீட்ஸா, பர்கர், கெண்டகி சிக்கன் என்று சொல்லிவிட்டு, உனக்கு எதுவுமே தெரியாது என்று சலிப்புடன் சொல்ல.. கோழி என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி, சிக்கனா என்று கேட்டுவிட்டு, தன் தோட்டத்தில் விளைந்த பருத்திகளை சந்தையில் விற்று, கோழி வாங்கச் செல்கிறாள். சிறுவன் சந்தோசத்தில் குதிக்கிறான்.. பேட்டரி வாங்க காசு தராத கோபத்தில் பாட்டியைப் பற்றி சுவற்றில் திட்டி எழுதிய வாசகங்களை அடிக்கிறான்.. பாட்டியை எதிர்பார்த்து காத்திருந்து தூங்கிப் போகிறான்.. மழை பெய்து கொண்டு இருக்க… அதில் கோழியுடன் நடந்து வரும் பாட்டி, கோழியை தண்ணீரில் வேக வைத்து சமைத்து, பேரனை எழுப்ப.. அதைப் பார்த்து அதிர்ந்த அவன் “கோழி ஏன் தண்ணீல இருக்கு.. எனக்கு எண்ணெய்ல பொறித்ததுதா வேணும்… உனக்கு ஒன்னுமே தெரியல..” என்று அழத் தொடங்கிவிட்டு அருகில் வைத்திருந்த வெண்ணெயை தூக்கி எறிகிறான். எனக்கு எதுவும் வேணாம் என்று கோபத்தில் படுத்துக் கொள்கிறான்.. மீண்டும் நடுராத்திரியில் எழுந்தவன் பசியால் பாட்டி அறியாமல் அந்தக் கோழியை தின்னத் தொடங்குகிறான்.


மழையில் நனைந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வருகிறது. சிறுவன் பாட்டிக்கு பணிவிடை செய்து பார்த்துக் கொள்கிறான். மெல்ல மெல்ல பாட்டியின் மேல் அன்பு கொள்கிறான்.. சந்தைக்கு சென்று தன் தோட்டத்தில் விளைந்த காய்களை விற்று ஹோட்டலில் பேரனுக்கு சாப்பாடு வாங்கித் தருவதும், புதிய செருப்பு வாங்கிக் கொடுப்பதும், தன் பேரனை மட்டும் பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு, அவனுக்கு செலவளிக்க காசு வேண்டும் என்று பாட்டி பின்னால் நடந்து வருவதும் நெகிழ்வானக் காட்சிகள். இது போன்ற நிகழ்வுகளை நாமும் கூட கடந்துதானே வந்திருக்கிறோம்.. அதனால் தான் இவை நம் மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகின்றன.. 


மேலும் பாட்டி இன்ப அதிர்ச்சியாக அவனுக்கு ஒரு பரிசு கொடுக்க.. அதில் காகிதத்தில் சுற்றப்பட்ட அவனது வீடியோகேமும், பேட்டரியும் இருக்கிறது. அவன் சந்தோசத்தில் சிரிக்கிறான். ஆனால் அடுத்து அவனுக்கு அது தேவைப்படுவதே இல்லை.. பாட்டியுடனே பெரும்பாலானபொழுதைக் கழிக்கிறான். அவனை அழைத்துச் செல்ல வருவதாக அம்மாவிடம் இருந்து கடிதம் வர.. பாட்டியை பிரியப் போவதை நினைத்து அழுகிறான். முதன் முதலின் அன்பின் பிரிவை அவன் உணரும் தருணமாக அதைக் கொள்ளலாம். பாட்டியின் மீது உள்ள பாசத்தால் அவளுக்கு, “நான் உடல் நலமின்றி இருக்கிறேன்…” என்றும் ”நான் உன் நினைவாக இருக்கிறேன்..” என்றும் கடிதம் எழுத கற்றுக் கொடுக்கிறான்.. அம்மாவுடன் பஸ்சில் ஏறும் போது அழுது கொண்டே, தன் கையால் நெஞ்சில் தடவி தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்கிறான்.. பாட்டியின் கண்களும் தன் பேரனையே பார்த்துக் கொண்டிருக்க…. நம்மை விட்டு நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் பிரிந்து சென்ற எல்லா பாட்டிகளின் நினைவும் நம் நெஞ்சை அழுத்த… அது கண்ணில் கண்ணீராய் வெளிப்படுகிறது…

இத்திரைப்படம் எல்லா பாட்டிகளுக்கும் சமர்ப்பணம் என்ற வாசகத்துடன் படம் முடிகிறது. பாட்டியாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அந்தச் சிறுவனின் நடிப்பும் மிகமிக அருமை. இந்தப் படத்தின் இயக்குநர் Lee jeong hyang ஒரு பெண் இயக்குநர். படம் எத்தனையோ செய்திகளை நம்மிடையே சொல்லாமல் சொல்கிறது. வயதான காலத்தில் பெற்றோரின் தனிமை, தங்கள் சுயநலத்திற்காக மட்டும் பெற்றோரை அணுகிச் செல்லும் பிள்ளைகள், நாகரீக வாழ்க்கை என்கின்ற போர்வையில் இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காததால் இயந்திரத்தைப் போலவே செயலாற்றும் குழந்தைகள், அன்பு, மரியாதைப் போன்ற அடிப்படை மனித இயல்புகளை ஒட்டு மொத்தமாக தொலைத்துவிட்ட நகர மாந்தர்கள்… இவர்களுக்கு மத்தியிலும் அன்பை மட்டுமே கொடுக்க.. எப்போதும் தனிமையில் காத்திருக்கும் இது போன்ற பாட்டிகள்… என்று எத்தனை எத்தனையோ….. செய்திகளைச் சொல்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…

Monday 6 May 2013

எதிர் நீச்சல்:

வெற்றிமாறனின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றொரு இயக்குநரான துரை செல்வக்குமாரின் முதல்படம். கேடி பில்லா கில்லாடி ரங்காவின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு, தனுஷ் தயாரிக்கும் படம், பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே எஃப் எம்மில் ஹிட், என எதிர் நீச்சலின் மீது எதிர்பார்ப்புக்கான காரணங்கள் ஏராளம். ஒரே நாளில் மூன்று படங்கள் வேறு ரீலீஸ். இதில் மூன்று பேர் மூன்று காதல் ரேஸில் பின் தங்க.. இப்போது ரேஸில் சூது கவ்வும் மற்றும் எதிர் நீச்சல் மட்டுமே. இரண்டுமே விட்டுக் கொடுக்காமல் ஓடிக் கொண்டிருப்பது திரையுலகுக்கு நல்ல செய்தி.


சிறுவயதில் பாடப்புத்தகத்தில் துணைப்பாடம் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை படித்ததாக நினைவு. ஆனால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு எல்லாருக்கும் அமைவதில்லை. திரைப்படத்திலும் அதுதான் மையப்பிரச்சனை. குஞ்சுதபாதம் என்ற தன் பெயரை பொதுவெளியில் சொல்ல நாயகனுக்கு கூச்சம். நேர்காணல் நடக்கும் போதுகூட, அந்தப் பெயரால் தான் படும் அவமானங்களுக்குப் பயந்து தன் பெயரை மாற்றிக் கொள்கிறான். இதை தன் காதலியிடம் இருந்தும் மறைக்கிறான். உண்மை தெரியவரும் போது, “ஒரு சின்ன விசயத்தைக் கூட எதிர் நோக்க தைரியமில்லாமல் ஓடி ஒளிகிறாயே.. எதிர்காலத்துல ஏதாது பிரச்சனை வந்தா அத எப்டி நீ சமாளிப்ப.. உன்ன நம்பி எப்டி நான் உங்கூட வர்றது..” என்று நாயகி எதிர்கேள்வி கேட்க.. ஞாநோதயம் பெற்ற கதையின் நாயகன்.. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முடிவு எடுக்கிறான்…?

ஒரு நிமிசம்… அப்டியே பின்னாடி போங்க… காதலி என்ன சொல்லி திட்டுறா…? 100 மீட்டர் பந்தயத்துலயே ஜெயிக்க முடியலயே நீ எப்டி 200 மீட்டர்ல ஜெயிக்கப் போற அப்டின்னா திட்டுனா…? ஒரு வேல அப்டி திட்டிருந்தா..? 200 மீட்டர் என்ன உனக்காக நான் மாரத்தான் போட்டிலயே கலந்து ஜெயிக்கிறேன் பார்ன்னு சொன்னா…? ஓகே.. ஆனா அவ அப்டி திட்டவே இல்லயே.. அப்டின்னா பிரச்சனைக்கும் அவன் எடுக்குற முடிவுக்கும் என்ன சம்பந்தம்….? சத்தியமாக எனக்கும் தெரியலங்க… கடைசியில அதப்பத்தி பேசுவோம்….


மேற்சொன்னவாறு முடிவு செய்து க்ளைமாக்சில் மாரத்தான் களத்தில் குதிக்கும் நாயகன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா…? என்பது சஸ்பென்ஸ் நிறைந்த மீதி ஐந்து நிமிடக் கதை.

முதல்பாதி முழுவதும் மக்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முன் தீர்மானத்துடன் எழுதப்பட்ட திரைக்கதை என்று நினைக்கிறேன். “குஞ்சுதபாதம், பாவாடைராயன்” என்னும் இரண்டு பழமைவாத குலதெய்வங்களின் பெயர்களை பயன்படுத்தி எவ்வளவு காமெடி பண்ண முடியுமோ…? அதற்கு குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். சில இடங்களில் ஏது வசனங்கள் விரசத்துக்குள் போய்விடுமோ என்று நம்மை கொஞ்சம் அஞ்ச வைத்து பின்பு கொஞ்ச வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு மனதில் நிற்பது போல் ஒரு படம். தன் பெயரால் ஏற்படும் அவமானங்களால் தலைகவிழ்வதாகட்டும், தன் காதலி டீச்சர் என்பதை தெரிந்து கொண்டு, வீட்டு ஓனர் பையனை தினமும் இவரே ஸ்கூலுக்கு கூட்டிக் கொண்டு செல்ல ஸ்கூல் போக அடம் பிடிக்கும் பையனைப் போல் அடம் பிடிப்பது, லேட்டானாத்தான் பேரண்ட்ஸ ஸ்கூல்குள்ள அலவ் பண்ணுவோம் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அந்தப் பையனை லேட்டாக ஸ்கூலுக்கு கூட்டிச் சென்று தன் டீச்சர் காதலி முன்பு அட்டெண்டன்ஸ் கொடுப்பது என ஜாலி சடுகுடு ஆடுகிறார். தன் நண்பன் சதீஸுடன் சென்று, தன் மாஜி கம்பெனி எம்.டியான மதன்பாபை வம்புகிழுத்து உதார் விடுவதும், காதலியை பெண் பார்க்கும் படலம் நடக்கிறது என்பதை அறிந்து துவளுவதும், தன் கோச்சாக வரும் வள்ளி(நந்திதா)க்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி பொங்குவதுமாக ஆங்காங்கே க்ளாஸ் ஆக்டிங்.


நண்பராக வரும் சதீஷ்க்கு காமெடியில் முக்கியமான ரீச் இந்தப்படம். “வள்ளிக்கு நீ ஓடுவியான்னு டவுட்டு, திவ்யாவுக்கு நீ வள்ளிகூட ஓடிடுவியோன்னு டவுட்டு..” என்று சொல்லும் அந்த இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது. இது போக ஆங்காங்கே சரக்கு சார்ந்த காமெடியும் சைடிஸ்க்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயபிரகாஷ் நடிப்பும் வழக்கம் போல் சூப்பர்…

படத்தில் முக்கியமான அர்த்தமுள்ள நிமிடங்கள் என்று பார்த்தால் இரண்டாம் பாதியில் வரும் வள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான். அட்டகத்தியில் வெறும் கண்ணழகியாக வந்து சென்ற நந்திதாவுக்கு இங்கு வள்ளியாக சற்று கனமான பாத்திரம். அதை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது தந்தையாக வருபவரின் நடிப்பு கச்சிதம். தன் மகளை ஒரு சிறந்த தடகள வீராங்கனையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் அந்த தகப்பனின் உழைப்பு அவ்வளவு உருக்கம்.


நாமெல்லாம் மறந்து போன நிகழ்வு இது. மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக தடகள வீராங்கனையாக பதக்கம் பெற்ற திரு. சாந்தி என்னும் தடகள வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டது. காரணம் ஊக்கமருந்து சாப்பிட்டது அல்ல. அவர் உடலில் சுரந்த ஹார்மோன்கள். பெண் தன்மையை விஞ்சுகிற அளவுக்கு அவரது உடலில் ஆண் தன்மை கொண்ட ஹார்மோன்கள் சுரப்பதால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டியவர், அவர் பெண்கள் பிரிவுக்கான போட்டியில் பங்குபெற தகுதியில்லாதவர் என்று சொல்லி பதக்கத்தைப் பறித்து ஊர்கூடி அவர் முகத்தில் சாணி அடித்த நிகழ்வு அது என்பதால் நாம் அதை எளிதில் மறந்துவிட்டோம். இப்பொழுது அந்த சாந்தி என்னும் முன்னால் வீராங்கனை தன் வாழ்நாள் ஜீவியத்தைக் கழிக்க கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை அப்படியே வள்ளி என்னும் கதாபாத்திரமாக வடித்திருக்கிறார்கள். இந்த வள்ளிதான் நம் குஞ்சுதபாதத்துக்கு கோச்சாக இருந்து வழிகாட்டுகிறாள். இந்த கதாபாத்திரத்தை நினைவு படுத்திய இந்த உத்திக்காகவே படக்குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழக வீராங்கனை சாந்தி விசயத்தில் நடந்த அரசியல் குளறுபடிகள் என்னென்ன என்பதை நாம் அறியோம். ஆனால் அவர் நிராகரிக்கவோ ஒதுக்கப்படவோ வேண்டியவர் இல்லை என்பதே நம் கோரிக்கை.

நினைத்துப் பாருங்கள். இந்த உடலில் மீது தற்காலிகமாக ஒட்டிக் கொண்ட ஒரு சாதாரண பெயரால் ஏற்படும் அவமானத்தையே துடைத்து எறிய முடியாமல் துவண்டு போகும் இது போன்ற கதாநாயக பிம்பங்களான நமக்கு மத்தியில், ஒரு பெண்ணை அதிலும் குறிப்பாக அவள் உடலை பொதுவெளியில் நின்று இது பெண் தன்மை இல்லாத உடல், இதில் ஆண் தன்மை கலந்திருக்கிறது என்று பரிகசிக்கும் நம் சமூகம் எவ்வளவு ஊனமாக இருக்கிறது. இதற்கு சட்டமும் காவல் இருக்கிறது. இப்படி மனிதாபிமானமற்ற சட்டங்கள் இயற்றப்படுவதும் மனிதர்களுக்காகத்தான் என்பது எத்தகைய முரண்பாடு. இந்த உடல் சார்ந்த அவமானங்களோடு தன் எஞ்சிய காலத்தை வாழ்வதற்கு அவள் செய்த தவறுதான் என்ன…?

இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ…? பெயர் சார்ந்த அவமானத்தோடு வரும் இந்த வாழ்க்கையில் இந்த உடல் சார்ந்த அவமானத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.. உடல் சார்ந்த அவமானத்தையே நான் சகித்துக் கொண்டு வாழும் போது, சாதாரண உன் பெயர் சார்ந்த அவமானமா உன்னை துரத்துகிறது என்று மைய கதாபாத்திரத்தை நோக்கி வள்ளி கேள்வி எழுப்புகிறாளோ..? என்னும் கேள்வி எழுகிறது. இருப்பினும் இது தொடர்பான காட்சிகள் மிகையான விளைவுகளை பார்வையாளன் தரப்பில் ஏற்படுத்தாமல் கடந்து செல்வது ஒரு குறையே..

இதை தவிர சிறப்பான பாடல்கள், சிறப்பான காமெடி என குடும்பத்தோடு வருபவர்களை மகிழ்விக்கும் எல்லாத் தகுதிகளோடு எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது இந்த எதிர் நீச்சல்  அதன் இலக்கை நோக்கி……

Thursday 2 May 2013

சூது கவ்வும்:


திரைப்பட உலகில் ”புதிய அலை” திரைப்படங்கள் என்று ப்ரான்ஸில் வெளியான சில குறிப்பிட்ட படங்களைக் கூறுவார்கள். ஏனென்றால் அவை உண்மையாகவே திரைப்படவரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தது. அது போல இன்றைய தமிழ் திரைப்பட சூழலை குறும்பட அலை என்று அழைக்கலாம். குறும்படம் இயக்கி வெற்றி பெற்று, அதனையே மூலதனமாகக் கொண்டு படங்களை இயக்கும் இளம் இயக்குநர்களின் படை வெளிவர தொடங்கி இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இது போன்ற இளம் குறும்பட இயக்குநர்களின் பக்கமே தங்களது பார்வையை திருப்பத் தொடங்கி இருக்கின்றனர். இது திரைச்சூழலுக்கு நல்லதா..? கெட்டதா..? என்னும் விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற இளம் படைப்பாளிகளின் படங்களுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு அமோகமாகவே உள்ளது.


பீட்சா இயக்குநரின் நட்பு வட்டாரத்தில் ஒருவரான நலன் குமாரசாமியின் குறும்படங்கள் இணையத்தில் பிரபலம். இப்போது அதே நலன் குமாரசாமியின் முதல் திரைப்படம் சூது கவ்வும் என்ற பெயரில் பீட்சா தந்த தயாரிப்பாளர் C.V.குமாரின் தயாரிப்பில் வெளிவந்து இருக்கிறது. இனி படத்தைப் பற்றி…

இளைஞர்களை பொறுப்புள்ளவர்களாக காட்டுவது சமூக குற்றம் போல… அல்லது அப்படிப்பட்ட காட்சியமைப்புகள் இருந்தால் சென்சார் போர்ட்டு படத்துக்கு “A” சர்டிபிகேட் கொடுத்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்களா என்று தெரியவில்லை… எனவே தமிழ் சினிமா வழக்கப்படி…..

நயன்தாராவுக்கு கோவில் கட்டி பிரச்சனையானதால் ஊரைவிட்டு ஓடி வந்த சிம்ஹா, அலாரம் வைத்து காலையில் எழுந்து தண்ணியடிக்கும் ரமேஷ், சாப்ட்வேரில் வேலையில் இருக்கும் போது ஒரு பெண்ணோடு ஏற்பட்ட பிரச்சனையில் வேலையில் இருந்து நீக்கப்படும் அசோக். இவர்கள் மூவரும் ஒரு அறையில் ஒன்றாக தங்கி இருக்கும் நண்பர்கள்.


தங்கள் வாழ்வில் ஏற்பட்ட தீராத சோகத்தை தீர்க்க.. மதுபானக்கடையின் உதவியை நாட…

அங்கு ஏற்கனவே தான் முயற்சிசெய்த இரண்டு கிட்நேப்பிங்கும் சொதப்பிவிட்டதை எண்ணி நொந்து கொண்டே தன் கனவுக் காதலி ஷம்முவுடன் குடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை சந்திக்கிறார்கள். இவர்கள் ஐவரும் ஒரே ஜோதியில் ஐக்கியம் ஆகி, தங்கள் வாழ்க்கையில் முன்னேற அடுத்த கட்ட நடவடிக்கைகளாக KIDNAPPING என்று முடிவு செய்து களத்தில் இறங்க.. அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை லாஜிக் சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு மேஜிக்கோடு கொஞ்சம் சிரிக்க வைத்து சொல்லி இருக்கிறார்கள்.


கிட்நேப் செய்வதற்கான அடிப்படை விதிகள் ஐந்து என்ற விதிகளோடு தொடங்கும் விஜய் சேதுபதியின் அலட்டலான நடிப்பு படு சுவாரஸ்யம். ” அதில் முதல் விதியான ”அதிகாரத்தின் மீது கை வைக்காதே..” என்னும் விதியை மீறி அவர்கள் ஒரு அமைச்சரின் மகனை கிட்நேப் செய்ய முனைவதில் இருந்து ஆரம்பிக்கிறது படத்தின் சுறுசுறுப்பு. விஜய் சேதுபதி ஆங்காங்கே பேசும் அந்த உடைந்து போன ஆங்கிலம், கடத்திய பெண்ணையே காசு கொடுத்து தங்கள் கட்சிக்கு சாதகமாக்கும் முயற்சி, கடத்தியப் பின்னர் வீட்டுக்கு போன் செய்து அவர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சி, சண்டே நாங்க எந்த வேலையும் பாக்க மாட்டோம்.. அதனால மண்டே கால் பண்றே… என அலம்புவது என விஜய் சேதுபதி படத்தை பக்காவாக பேலன்ஸ் செய்கிறார். சின்ன சின்ன கேரக்டர்களில் எல்லாம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார்கள். உதாரணமாக அந்த டாக்டர் ரவுடி, நம்பிக்கை கண்ணன், ஞானோதயம், அருட்பிரகாசம் இப்படி.. ஷம்மு கேரக்டரைசேசன் அருமை. ஆனால் அது மனதில் நிற்காமல் போய்விடுகிறது.


அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் சூப்பர். அவரது மகனை அப்பாவுக்கு அப்படியே நேர் எதிரான கதாபாத்திரமாக காண்பித்து, கடைசியில் க்ளைமாக்ஸ்சில் அடித்திருக்கும் ட்விஸ்ட் மிக அருமை. ஆனால் ஏன் அவரே லஞ்சம் கொடுக்க வரச் சொல்லிவிட்டு அவர்களை காட்டியும் கொடுக்க வேண்டும் என்னும் கேள்விக்கு பதிலே இல்லை. பல இடங்களில் ட்விஸ்ட் என்று அடிக்கும் திருப்பங்கள் எல்லாம் குறும்பட அளவிலேயே இருந்ததென்னவோ உண்மை.

இப்படி எல்லாம் கிட்நாப் செய்ய முடியுமா..? இதெல்லாம் நடக்குமா..? என்ற எந்த எதிர்பதமான கேள்விகளும் கேட்காமல், கண்ணை மூடிக் கொண்டு ஒரு குழந்தை கதை கேட்பது போல் கதை கேட்டுக் கொண்டே இருந்தால்.. குழந்தைக்கு கிடைப்பது போன்ற சுவாரஸ்யமான திருப்பங்கள் நமக்கும் கிடைக்கும்… கேள்வி கேட்கத் தொடங்கினால்.. கேள்விக்கு பதிலும் கிடைக்காது.. கேள்வி மட்டுமே மிஞ்சி நிற்கும்.


சந்தோஷ் நாராயணின் இசையும் பிண்ணனி இசையும் மிகமிக அருமை. படத்தின் பெரும்பாலான இடங்களில் இசை அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது. வசனங்கள் படத்தை லைவ்வாக வைத்திருப்பதில் அதிகபடியாகவே உதவி இருக்கின்றன எனலாம்.. இல்லையென்றால் திரைக்கதையின் இரண்டாம் பாதியில் உள்ள தொய்வு பல் இளித்திருக்கும். அதிலும் குறிப்பாக பிரம்மா என்னும் அந்த போலீஸ் அதிகாரி அத்தனை பில்டப்புகளுடன் வந்தும்.. அதனால் எந்த பலனும் இல்லை என்பது பெரிய மைனஸ். ஏற்கனவே படத்தின் மீது இருந்த அதீதமான எதிர்பார்ப்பு, விஜய் சேதுபதியின் ஸ்கீரின் ப்ரசன்ஸ், ஸ்டூடியோ க்ரீனின் விளம்பரங்கள், ஆங்காங்கே தலைகாட்டும் சின்ன சின்ன காமெடிகள், இவை எல்லாம் சேர்த்து ஓரளவுக்கு படத்தை ரசிக்க வைக்கிறது என்றாலும்.. ஒரு வாரம் கழித்து அந்தப் படத்தில் என்ன இருந்தது என்று எண்ணிப் பார்த்தால் எதுவுமே நினைவுக்கு வராது என்பதும் உண்மையே…


பாவம் தமிழக மக்கள் மிகுந்த மன இறுக்கத்துடன் வாழ்கிறார்கள் போலும். எங்களை சிரிக்க வைக்கமாட்டீர்களா என்று ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் தவம் இருக்கிறார்கள். ஒன்றுமில்லாத வசனங்களுக்குக்கூட சிரிப்பு வைத்தியம் எடுக்க வந்தவர்கள் போல் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மூன்றாம்தர மேம்போக்கான சிரிப்பு வைத்திய காட்சிகள் இந்த படத்தில் குறைவு என்பது என் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.



மூன்று பேர் மூன்று காதல்:


விமல் லாசினி, சேரன் பானு, மற்றும் அர்ஜீன் சுர்வின் இவர்களின் தனித்தனி காதல் அத்தியாயங்களே இந்த மூன்று பேர் மூன்று காதல். கவித்துவமான தலைப்பு. ஆனால் அந்த கவித்துவமோ அல்லது கொஞ்ச நஞ்ச கதையோ கூட படத்தில் இல்லை என்பதுதான் பெருத்த ஏமாற்றம். S.M வசந்தின் சில படங்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணமாக கேளடி கண்மணி, ஆசை, சத்தம் போடாதே போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். அது போன்ற திரைப்படங்களைத் தந்த வசந்தின் சமீபத்திய திரைப்படம் இது என்பதை நம்புவது கடினம்.


ஆரம்பத்தில் மலையும் மலை சார்ந்த இடமும் என்று நீலகிரி மலை பிரதேசத்தைக் காட்டி விமலின் காதல் கதையை ஆரம்பிக்கிறார்கள். அதில் மொத்தக் காட்சியிலும் நாம் புரிந்து கொள்வது விமல் பணக்கார வீட்டு பையன். ஒரு பெண்ணை எதேச்சையாக சந்தித்து காதலிக்கிறான். அவள் ஏற்கனவே இன்னோரு பையனை காதலிப்பவள். அவர்கள் இருவருக்கும் நிச்சயமும் ஆகி இருக்கிறது. இது தெரிந்து விமல் தன் காதலை உதற நினைக்க… அதற்குள் லாசினியும் அவளது காதலனும் கருத்து வேறுபாட்டால் பிரிய.. விமல் லாசினி காதல் வளருகிறது. கல்யாணத்துக்கு நாள் குறித்து கல்யாண நாள் நெருங்கும் போது.. “இந்த கல்யாணம் நடக்காது… அதற்கு காரணம் நான் பார்த்த காதல் ஜோடி…” என்று சேரன் பானு காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார் விமல்.

கடலும் கடல் சார்ந்த இடமும் என்று நாகர்கோவில் பகுதியில் அடுத்த காதல் கதை. பானு பிசியோதெரபி மருத்துவம் செய்யும் நர்ஸ், சேரன் ஏதேதோ பெரிய பெரிய படிப்புகள் படித்துவிட்டு, ஜெயிலில் இருந்து தண்டனை முடிந்து வரும் கைதிகளுக்கு மறுவாழ்வு அமைத்து தர பாடுபடும் ”புன்னகை” அமைப்பை நடத்தி வருபவர். ஒரு சந்தர்ப்பத்தில் பானுவுக்கு சேரன் உதவ.. பானுவுக்கு சேரன் மீது காதல் வருகிறது. பானு சேரனின் தாயிடம் நான் உங்க மகனை கல்யாணம் பண்ண நினைக்கிறேன் என்று சொல்ல. சேரனின் தாய் அவன் யாரையும் கல்யாணம் பண்ணமாட்டாம்மா.. அவனுக்கு வாழ்க்கையே இந்த புன்னகை அமைப்புதான்னு அந்த அமைப்பைப் பற்றி விளக்க… சேரனிடம் நல்ல பெயர் வாங்க பானுவும் அந்த அமைப்பில் சேர்ந்து சாதிக்க.. அவரிடமே அந்த அமைப்பை ஒப்படைத்துவிட்டு பிரான்ஸ் செல்கிறார். சேரன்.

ஏன் வருகிறது, எதற்கு வருகிறது. இதை யார் யாருக்கு சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட பிரக்ஞையேயின்றி டைட்டில் கார்டில் சில பல வருடங்களை மாற்றிப் போட்டு நம்மை அலைகழிப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. அந்த ஸ்டைலில் அடுத்த கதை ஓப்பன்.

நிலமும் நிலம் சார்ந்த இடமும். சென்னை. அர்ஜீன் ஒரு நீச்சல் பயிற்சியாளர். தன் ஸ்டூடண்ட் திவ்யாவை(சுர்வின்) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்க வைப்பேன் என்று சொல்லிக் கொண்டே அவரை காதலிக்கவும் செய்கிறார். திவ்யாவோ ஒரு மாநிலப் போட்டியில் தோல்வி அடைகிறாள். இருந்தும் கோச் அவள் மீதான தன் நம்பிக்கையை விடுவதில்லை. அவள் ஒலிம்பிக்குக்கு தயாராகும் தருணத்தில் அர்ஜீனுக்கு ஆக்ஸ்டெண்ட் ஆகிறது. தலையை தவிர உடலில் எந்த பாகமும் வேலை செய்யாத நிலையில் படுக்கையில் விழ, காதலி உடைந்துபோகிறாள். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி.. இதில் திவ்யா ஜெயித்தாளா.. மற்ற காதல் கதைகள் என்ன ஆனது…? தைரியமிருந்தால் வெள்ளித் திரையில் பார்த்துக் கொ(ல்)ள்ளுங்கள்…

பானுவின் உழைப்பும் யுவனின் இசைமழையும் பாலையில் பெய்த மழை. அதாங்க மணலும் மணல் சார்ந்த இடமும். ஆரம்பத்தில் வந்த அதே விமல் கடைசியில் வந்து நான் இந்த மூன்று காதலையும் கொண்டு புத்தகம் எழுதினேன் என்கிறார். அவர் ஏன் புத்தகம் எழுதினார்…? இயக்குநருக்கு கடிதம் எழுதிதான் கேட்க வேண்டும்.

மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார், எதற்காக இந்தப்படம் என்பது கடைசி வரையிலும் புரியாமலே போய்விட்டது தான் மனதை ஏதோ செய்கிறது. இருந்தாலும் ஐந்து பேர் ஐந்து காதல் என்று ஐவகை நிலத்தின் காதல் கதையையும் சொல்லாமல், நம்மீது பரிதாபப்பட்டு மூன்றோடு நிறுத்திக் கொண்ட வசந்தின் நல்ல மனதுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடையை கட்டினேன்… அப்போதும் விமல் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்…